
திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறித்ததை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மாதம்தோறும் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதன்முதலில் மக்கள் நீதி மய்யம் கட்சிதான் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து, திமுகவும் 1000 ரூபாய் மாதம்தோறும் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியது. ஆட்சிக்கு வந்து இன்னும் இந்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் கேள்வியெழுப்பியுள்ளார் கமல்ஹாசன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது. இன்றைய பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த தொகை. இல்லத்தரசிகளுக்கு எதுவுமே இல்லாத நிலையில் இந்தச் சிறிய தொகையாவது அவர்களுக்குக் கிடைக்கிறதே என்றுதான் கருதவேண்டியுள்ளது. ஒரு சிறு துவக்கம் என்கிற அளவில் மனதைத் தேற்றிக்கொள்ளலாம்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது பற்றிய அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. சமூகநலத்திட்டங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழும் தமிழகம் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விஷயத்தில் சுணக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல.
திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட இந்தத் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும். அதற்கான அறிவிப்புகளை நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3kK7kkc



0 Comments