
சமீபத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தில் இந்தியில் பேசும் அடக்குக்கடைக்காரை பிரகாஷ் ராஜ் அறையும் காட்சி சர்ச்சையானது. இந்தி ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதற்கு தற்போது பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளார்.
இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியுள்ள ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா. ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய ஒரு வழக்கினை அடிப்படையாகக் கொண்டே ‘ஜெய் பீம்’ படத்தினை எடுத்திருக்கிறார்கள்.

இப்படத்தில், திருட்டு நகைகளை வாங்கிக்கொண்டு விசாரிக்க வரும் ஐ.ஜி பெருமாள்சாமி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜிடம் இந்தியில் பேசுவார் அடகுக்கடைக்காரர். அவரைக் கன்னத்தில் அறைந்து ‘தமிழில் பேசு’ என்பார் பிரகாஷ் ராஜ். இந்தக் காட்சி இந்தி மொழி ஆதரவாளர்களிடம் விமர்சனம் செய்யப்பட்ட நிலையில், நியூஸ் 9 ஊடகத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி அளித்துள்ளார். ”’ஜெய் பீம்’ படத்தில் அறைந்த சர்ச்சை பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்றக் கேள்விக்கு,

” ‘ஜெய் பீம்’ போன்ற படத்தைப் பார்த்துவிட்டு, பழங்குடியின மக்களின் வேதனையைப் பார்க்கவில்லை, அநியாயத்தைப் பார்த்து பரிதாபப்படாமல், அறைந்ததைத்தான் பார்த்தார்கள். அவர்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான்; இது அவர்களின் மனநிலையை அம்பலப்படுத்துகிறது. சில விஷயங்களை ஆவணப்படுத்த வேண்டும். ஒரு வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி, உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர், கேள்வி கேட்காமல் இருக்க இந்தியில் பேசுவதாக தெரிந்தால், வேறு எப்படி நடந்து கொள்வார்? அது ஆவணப்படுத்தப்பட வேண்டும். இப்படம் 1990களை பின்னணியாக கொண்டது. அந்த கேரக்டருக்கு இந்தி திணிக்கப்பட்டிருந்தால் இப்படித்தான் ரியாக்ட் செய்திருப்பார். முறையான கல்வியைப் பெறாத பழங்குடியினப் பெண்களுக்கு ஆங்கிலத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட வழக்குகள் ஏராளம். பெரிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
சிலருக்கு, திரையில் பிரகாஷ் ராஜ் இருந்ததால் அறைந்த காட்சி எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். அவர்கள் இப்போது என்னை விட கேவலமாக தோன்றுகிறார்கள். ஏனென்றால் அவர்களின் நோக்கம் வெளிப்பட்டது. பழங்குடியின மக்களின் வலி அவர்களை அசைக்கவில்லை. இப்படிப்பட்ட மதவெறியர்களுக்கு எதிர்வினையாற்றுவதில் அர்த்தமில்லை. இங்கு கவனம் செலுத்துவது அநீதியின் மீதுதான். நியாயமாக நடந்து கொள்வோம்” என்று கூறியிருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3H6Ei7o



0 Comments