மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்டு ரிஷி, தர்ஷா குப்தா, ராதாரவி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் 'ருத்ர தாண்டவம்'. இன்று வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படம் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது, அச்சட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்டவற்றைப் பேசுகிறது.
போதைப்பொருள் விற்கும் இளைஞர்களை கைதுசெய்ய முயலும் காவல்துறை அதிகாரி ருத்ர பிரபாகரனுக்கு, அதன் மூலம் ஒரு சிக்கல் உருவாகிறது. போதைப்பொருள் விற்கும் இளைஞர்களில் ஒருவன் இறந்து போக, அதற்கு ருத்ர பிரபாகரனே காரணம் என வழக்கு பதிவாகிறது. இதில் கூடுதல் சிக்கல் என்னவென்றால், ருத்ரன் விரட்டிப் பிடித்த இளைஞர்களில் ஒருவர் அணிந்திருந்த சட்டையில் அம்பேத்கர் படம் இருந்ததாகவும், அதனால் ருத்ரன் அவர்களை சாதிய ரீதியாக தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. அதனைத் தொடர்ந்து வரும் தொடர் சிக்கல்களும் வழக்கு வாதங்களுமே மோகன்.'ஜி'-யின் திரைக்கதை.
ஒற்றைச் சார்புடன் இந்தத் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் மோகன்.ஜி. வாதிடத் தகுதியான கருத்துகள் இல்லாதபோது ஒருவர் கோபத்தை, வன்மத்தை கக்குவார். அதைத்தான் மோகன்.ஜியும் செய்திருக்கிறார்.
கவுதம் வாசுதேவ் ஓர் அரசியல் கட்சித் தலைவராக காட்டப்படுகிறார். அக்கட்சி அலுவலகத்தின் பின்னணியில் சேகுவேராவின் படம், இலங்கை நிலத்தின் வரைபடம், புத்தர் சிலை, சிவப்புக் கொடி என இடதுசாரிக் கொள்கை கொண்ட கட்சியின் அலுவலகம் போல அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இங்குதான் இயக்குநர் தன்னுடைய அறிவுப் போதாமையினை பளிச்சென வெளிக்காட்டுகிறார். அதாவது, வாதாபிராஜனாக வரும் கவுதம் வாசுதேவை போதைப்பொருள் கடத்துகிறவராகவும், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறவராகவும் அப்பட்டமான குற்றவாளியாகவும் சித்தரித்து சுயமகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.
கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. இப்பட இயக்குநருக்கும் பொருந்தும். ஆனால், இப்படியான வலிந்த சித்தரிப்புகளால் வன்மத்தை மட்டுமமே கக்கி இருக்கிறார் மோகன்.ஜி. இதில் எந்த இடத்தில் இடது சிந்தனைகளுக்கு எதிரான தனது வலுவான கருத்தியல் வாதத்தை முன்வைத்துப் பேசியிருக்கிறார் என்றுதான் புரியவில்லை. அப்படிப் பேசியிந்தால் ஆரோக்கியமாக நாம் விவாதிக்கலாம். மோகன்.ஜி-க்கு காதுகொடுக்கலாம்.
இப்போதுதான் தமிழ் சினிமா பட்டியலின மக்களின் பிரச்னைகளை மெல்ல பேசத் துவங்கி இருக்கிறது. அவர்கள் தரப்பு நியாயங்கள் சில இப்போதுதான் குறைந்தபட்ச பொதுவெளி விவாதத்திற்கேனும் வந்திருக்கிறது. இப்படியிருக்க, பட்டியலின இளைஞர்கள் போதைப்பொருள் விற்பதையும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதையும் மட்டுமே தொழிலாகக் கொண்டிருப்பதுபோல காட்சிகள் அமைத்திருப்பது விஷமத்தனமான உள்நோக்கம் கொண்டது என்றே அப்பட்டமாக தெரிகிறது.
இவை தவிர, மதமாற்றம் குறித்தும் காரசரமான காட்சிகள் வைக்கப்படுகின்றன. இறந்துபோன இளைஞர் பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருந்த போதிலும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் செல்லுபடியாகாது. காரணம், அவர் ஏற்கெனவே கிறிஸ்தவ மதத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர் என்பதற்கான வீடியோ ஆதாரம் காட்டப்படுகிறது. கூடவே, அவர் மதம் மாறியதற்கான சான்றிதழ்கள் எதுவும் இல்லை. எனவே, அவர் பட்டியலினத்தவர்தான் என்கிற எதிர்வாதமும் வைக்கப்படுகிறது. ஆனால், இயக்குநர் மோகன்.ஜி தனது தீவிர கருத்துகளை பட்டும் படாமலும் கொஞ்சம் பயந்தே வெளிப்படுத்தியிருக்கிறார் என்று தோன்றுகிறது. அதனால்தான் சட்டப்படி மதம் மாறுவது உங்கள் உரிமை என்றும், கூடவே மதம் மாறிய பிறகு உங்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டால் அது பிசிஆர் சட்டப்படி தண்டிக்க முடியாத குற்றமாக மாறிவிடும் என்றும் ஒரு கிலியை கிளப்ப முயற்சித்திருக்கிறார். ஆனால், கிளி பறக்கவில்லை.
பட்டியலினத் தாயாக வருகிறவர் பேசும் ஒரு வசனம் சமூக ஆபத்து: 'நாம எப்படி பிறந்தமோ அப்டியே சாகணும்' என்கிறார். இந்த வசனம் நம்மை தூக்கிவாரிப் போடுகிறது. சென்சார் கமிட்டி என்பது சிகரெட் புகைப்பதையும், மது அருந்துவதையும் அடிக்கோடிட்டுக் காட்டும் அமைப்பாக மட்டுமே இருக்கிறதா? ஒருவர், 'நாம எப்படி பிறந்தமோ அப்படியே சாகணும்' எனப் பேசுவது என்ன வகையான வன்முறை. இந்திய நிலத்தில் ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்ற, தன் வாழ்நாளில் நினைத்த மதத்தை தேர்வு செய்து பயணிக்க உரிமை உண்டு அப்படி இருக்க, இப்படியொரு வசனம் அதுவும் நீதிமன்றத்திலேயே பேசுவது போலான காட்சி வைப்பதை என்னவென்று சொல்வது?
சரி மோகன்.ஜி’யின் வாதத்திற்கே வருவோம். வன்முறை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? உண்மையில் அப்படி பயன்படுத்த இயலுமா என்றால், முடியும். சொற்பத்திலும் சொற்பமாக கடந்த இத்தனை ஆண்டுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அது நிகழ்ந்திருக்கலாம். ஆனால், அதனை முதன்மைப்படுத்தி ஒரு சினிமா எடுத்திருப்பது சமூக ஆபத்து. வரதட்சணைக் கொடுமை தடுப்புச்சட்டம் சில இடங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக அந்தச் சட்டம் நீர்த்துப் போகிற காரியங்களை நாம் செய்யலாமா?
தவிர, இந்திய அளவில் காவல்துறையானது அத்தனை சுலபமாக ஒருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துவிடாது. உண்மையில் ஒருவருக்கு எதிராக வன்கொடுமை நிகழ்த்தப்பட்டிருந்தாலுமே கூட அதனை வழக்காக பதிவு செய்யக் கூட தீவிரமாக போராட வேண்டிய சூழலே இங்குள்ளது.
காந்தியைப் போல அம்பேத்கர் ஒரு தேசியத் தலைவர். அப்படி இருக்க பட்டியலினத் தலைவர் என சிலர் சுருக்கி ஆதாயம் அடைவதாக வாதாடும் வழக்கறிஞரான ராதாரவி, பிறகு தான் பட்டியலினத்து ஆளாக இருந்தாதும், தன் வீட்டில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கத்தின் படம் இருப்பதாகவும், அம்பேத்கர் படம் இருப்பதாவும் தெரிவிக்கிறார். இயக்குநருக்கு ஏன் இவ்வளவு குழப்பம்.? பயம்.? தெளிவின்மை.
மோகன்.ஜி-க்கு ஒரு தகவல்: அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர். அனைத்து இந்திய மக்களுக்கும் அவர் சொந்தமானவர் என்பது உண்மைதான். ஆனால் அம்பேத்கர் பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக உறங்காமல் உழைத்தவர். பட்டியலின மக்களின் பாதுகாப்புக்காக தீவிர சட்டங்களை வகுத்தவர். எனவே, அவர் அனைவருக்குமான இந்தியத் தலைவராக இருந்தாலும், பட்டியலின மக்களுக்காக பாடுபட்டவர் என்கிற முறையில், அவரை பட்டியலின மக்கள் கொஞ்சம் கூடுதல் சிறப்புடன் கொண்டாடவே செய்வார்கள்.
காந்தியும் தேசியத் தலைவர்; அம்பேத்கரும் தேசியத் தலைவர். எனவே, அம்பேத்கர சாதித் தலைவராக சுருக்கக் கூடாது என வாதிடும் மோகன்.ஜி வரலாற்றில் காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையில் இருந்த கருத்து முரண் குறித்தும், அது ஏன் எனவும் பூனே ஒப்பந்தம் குறித்தும் கொஞ்சம் படித்துத் தெளிந்த பிறகு இப்படியான வசனங்களை வைத்திருக்கலாம்.
இப்படியாக படம் முழுக்க வலது சிந்தனைகளும், ஒற்றைச் சார்பு கருத்தியலுமே புரையோடிக் கிடக்கிறது. இதுதான் 'ருத்ர தாண்டவம்'. சாதிய பாகுபாடுகள் இல்லவே இல்லை; நாம் எல்லோரும் சொர்க்கத்தின் பிள்ளைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நினைத்துக் கொண்டிருக்கும் இயக்குநருக்கு இறுதியாக ஒரு கேள்வி: இந்திய நிலத்தில் பட்டியல் சமூகம் என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களை பிரித்துவைக்க காரணமாக இருந்தது எது? ஏன்?
கருத்துகளை தவிர்த்துப் பார்த்தாலும் படத்தின் ஒளிப்பதிவு, இசை, திரைக்கதை அமைப்பு, நடிகர்களின் நடிப்பு தேர்வு என அனைத்துமே சொதப்பல்தான். குறைந்தபட்சம், முழுமையாக எங்கேஜிங்காக இருக்கக் கூடிய அளவுக்காவது படம் இருக்கிறதா என்று கேட்டால், அதற்கு விடை சொல்வதற்கும் அசதி ஏற்படுகிறது. கருத்து ரீதியில் மட்டுமின்றி, திரைமொழியை உள்வாங்குவதும் சினிமா படைப்பாளிகளுக்கு அடிப்படை என்பதை உணரவைத்திருக்கிறது 'ருத்ர தாண்டவம்'.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3uwiYSY
0 Comments