Ad Code

Responsive Advertisement

ஓடிடி திரைப் பார்வை: ’ஏலே’-முத்துக்குட்டியின் நகைச்சுவையால் குலுங்கிச் சிரிக்கும் கிராமம்!

சினிமாவை இரண்டு விதமாக அணுகலாம். ஒன்று அறிவு கொண்டு இன்னொன்று மனது கொண்டு. மனது கொண்டு அணுகும் சினிமாக்கள் பெரும்பாலும் உங்கள் மண்சார்ந்து உங்களின் தனிப்பட்ட வாழ்வு சார்ந்து பேசக் கூடியவையாக இருக்கும். அப்படியாக தென் தமிழகத்தின் மண்சார் வாழ்வியலை டார்க் ஹியூர் பாணியில் பேசியிருக்கிறது ஹலிதா சமீம் இயக்கிய ஏலே.

image

கிராமத்தில் சைக்கிள் வண்டியில் ஐஸ் விற்கும் முத்துக்குட்டிக்கு இரண்டு பிள்ளைகள். பார்த்தி, மீனா. தாயை இழந்த பிள்ளைகளை முத்துக்குட்டி அன்பு குறையாமல் வளர்த்தாலும்கூட முத்துக்குட்டியின் பல செயல்கள் அக்குழந்தைகளுக்கு அவமானத்தை தருகின்றன. தகப்பன் மீது ஒருவித வெறுப்புடன் வளரும் பார்த்தி. தகப்பனின் இறப்பு செய்தி அறிந்து ஊருக்கு வருவதே படத்தின் முதல்க் காட்சி. நடுவீட்டில் அப்பன் முத்துக்குட்டியின் உடல் கிடத்தப்பட்டிருப்பதைக் கண்டு துளியும் கண்கலங்காத மகன் பார்த்தி அடுத்த பஸ் ஏறி அருகிலிருக்கும் நகருக்கு புரோட்டா சாப்பிடப் போகிறார். கிடத்தப் பட்டிருக்கும் முத்துக்குட்டியின் சடலத்தைப் பார்த்து பார்த்தியின் நினைவிலாடும் ப்ளாஸ் பேக் காட்சிகள் தான் இப்படத்தின் திரைக்கதை.

மண்வாசனை நிறைந்த முழுமையான ஒரு நகைச்சுவை சினிமாவாக ஏலே இருக்கிறது. வட்டார வழக்கின் அடர்த்தியை கொஞ்சம் தவற விட்டிருந்தாலும். இக்கதையில் காட்டப்படும் மனிதர்களின் குணம், உடை என அனைத்திலும் நுட்பமான கவனம் செலுத்தப்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. உள்ளூர் பண்ணையாரின் மகள் நாச்சியாளும் முத்துக்குட்டியின் மகன் பார்த்தியும் காதலிக்கும் காட்சிகள் மனதில் நிறைகின்றன.

image

இப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவம் மிக்கவை. மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டவை. முத்துக்குட்டியின் கதாபாத்திரம் ஒரு வெள்ளந்தி மனிதரின் அசல் வடிவமைப்பு. திருட்டுக் குற்றத்தில் இரண்டுவகையுண்டு. ஒன்று தண்டனைக்குறிய திருட்டு இன்னொன்று ரசனைக்குறிய திருட்டு. இதில் ரசனைக்குறிய திருடனாகத் தான் முத்துக்குட்டியின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பக்கத்து வீட்டு கோழியை திருடி குழம்பு வைத்து சாப்பிடுவது. சலூன் கடையில் முடிவெட்டிவிட்டு காசு கொடுக்காமல் தப்புவது. என யாருக்கும் பெரிய பாதகமில்லாத சின்னத் திருட்டுக்கு சொந்தக்காரன் முத்துக்குட்டி. அவரது இறப்பிற்கு ஊரே கூடி அழும் போதும் பார்த்தி அழவில்லை. அப்பாவின் செயல்களை சிறுவயதிலிருந்து தன் அவமானமாக நினைத்து வளர்ந்த பிள்ளை அவன். இடையில் காணாமல் போகும் முத்துக்குட்டியின் சடலம். அதன் பின்னே வைக்கப்பட்டிருக்கும் குறும்புத்தனமான காரணம், அப்பா மகன் செண்டிமெண்ட், நண்பர்களின் அன்பு, ஊராரின் பாசம், காதல் என ஒரு ரூரல் மசாலாவாக அமைந்திருக்கிறது இந்த சினிமா.

image

தேனி ஈஸ்வரின் கேமரா அழகுணர்சியால் மின்னுகிறது. படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். வட்டார மொழியில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். இசை ரொம்பவே சுமார். ஏற்ற இறக்கங்களற்ற திரைக்கதை ஒரு டிவி சீரியல் பார்த்த உணர்வைத் தருகிறது. இன்னும் கொஞ்சம் மெனக்கட்டிருந்தால் ஏலே இன்னுமே சிறப்பாக வந்திருக்கும். முத்துக்குட்டியாக வரும் சமுத்திரக்கனியும் அவரது மகன் பார்த்தியாக வரும் மணிகண்டனும் சிறப்பான தேர்வு. படத்தில் அவர்களது பங்களிப்பும் சிறப்பாக உள்ளது.

ஏலே என்கிற இந்த சினிமா திரையரங்கில் வெளியாகி இருந்தால் சி சென்டரில் மிகப்பெரிய வசூல் வேட்டையாடியிருக்கும். தற்போது எலைட் ரசிகர்களுக்காக நெட்பிளிக்ஸில் காணக் கிடைக்கிறது. லாக்டவுன் காலத்தில் பார்த்து சிரித்து மகிழவும், ஒரு நல்ல ஸ்ட்ரெஸ் பஸ்டராகவும் இந்த சினிமா நிச்சயம் இருக்கும்.

- சத்யா சுப்ரமணி

முந்தைய ஓடிடி திரைப் பார்வை: குழந்தையாக மாறும் முதியவர்... 'ஆகையால் அப்படியே இருங்கள்!'

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2TiS9CW

Post a Comment

0 Comments