மிக மோசமானவராகவும், மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லதவராகவும் இருக்கும் ஒருவரை, ஒரு பயணம் எப்படி மாற்றுகிறது என்பதே ’அயோத்தி’ படத்தின் ஒன்லைன்.
அயோத்தியில் வசிக்கும் இந்திக் குடும்பம் பல்ராமுடையது (யஷ்பால் ஷர்மா). ரொம்பவே மத நம்பிக்கைகளும், குடும்ப நபர்களிடம் பாசமே இல்லாமல் மோசமாக நடந்து கொள்வதுமாக இருக்கிறார். இவர் தன்னுடைய மனைவி, மகள், மகனுடன் இணைந்து புனித யாத்திரையாக ராமேஷ்வரம் கிளம்பிச் செல்கிறார். அங்கு செல்லும்போது நடக்கும் ஒரு விபத்திற்குப் பிறகு இந்தப் பயணத்தில் சசிக்குமாரும், புகழும் இணைந்துகொள்ளும் சூழல் உருவாகிறது. இதன்பின் இந்தப் பயணத்தில் நடப்பவை என்ன? சசிக்குமாருக்கும், புகழுக்கும் வரும் சிக்கல்கள் என்ன? தன்னுடைய தவறுகளை பல்ராம் உணர்ந்து, திருந்துகிறாரா? இவை எல்லாம் தான் `அயோத்தி’ படத்தின் மீதிக்கதை.
ஒரு குடும்பம் மேற்கொள்ளும் பயணம், அதில் முன் பின் அறிமுகமில்லாதவர்கள் இணைவது, இந்தக் களத்தின் மூலம் ஒரு சின்ன மெசேஜ் சொல்வது என மிக எளிமையான ஒரு கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர் மந்திர மூர்த்தி. ஒரே நாளில் எப்படி இவ்வளவும் செய்ய முடியும் என்று நம்மை யோசிக்கவிடாத அளவுக்கு, எமோஷனலான காட்சிகளை வைத்து கதையை நகர்த்தியிருந்த விதமும் சிறப்பு. பர்ஃபாமன்ஸாக நம்மை அதிகம் கவர்வது ஷிவானி கதாபாத்திரத்தில் வரும் (ப்ரீத்தி அஸ்ராணி).
படம் முழுக்க சீரியஸான ரோல், பல இடங்களில் கண் கலங்கியபடி அவர் கொடுத்திருக்கும் நடிப்பு படத்துக்கு வலுசேர்க்கிறது. சசிக்குமார் வழக்கம்போல் தன்னுடைய இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அது கதைக்கும் பொருத்தமான அளவில் இருக்கிறது. நடிகர் புகழை வைத்து காமெடி எதுவும் முயற்சி செய்யாமல், ஒரு கதாபாத்திரம் என்ற அளவிலேயே நிறுத்திக்கொண்டதும் பாராட்டுக்குரியது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு, விபத்துக் காட்சியோ, எமோஷனலான காட்சி எல்லாவற்றிலும் ஒரு இயல்புத் தன்மையை கொடுத்திருக்கிறது.
இந்தப் படத்தின் குறைகள் எனப் பார்த்தால், எதேச்சையாக ஒரு உதவி செய்யப்போய், அதன் பிறகு துவங்கும் சிக்கல்கள் எனக் கதையாக கேட்க சுவாரஸ்யமாக இருந்தாலும், ஒரு படமாக பார்க்கும் போது நிறைய அமெச்சூர்த்தனங்கள் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் சில காட்சிகள் சீரியல் பார்ப்பது போன்ற அயர்ச்சியை கொடுக்கிறது. இதற்கு ஒரு வகையில் என்.ஆர்.ரகுநந்தன் பின்னணி இசையும் காரணம். அவரது இசையில் பாடல்கள் நன்றாக இருந்தாலும், பின்னணி இசை பல இடங்களில் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே ஒலிக்கிறது.
படத்தின் மைய கதாபாத்திரமே யஷ்பால் ஷர்மா நடித்திருக்கும் பல்ராம் தான். ஆனால் யஷ்பாலின் செயற்கையான நடிப்பு படம் முழுக்க நிறைந்திருக்கிறது. அவருடைய கதாபாத்திரத்தின் வேலை வெறுமனே கூச்சலிடுவது, பான் மெல்லுவது மட்டும் தான் என்ற ரீதியில் படம் முழுக்க அவற்றை மட்டும் செய்கிறார். நடிப்பால் எதையும் கடத்தவில்லை. இது கதாபாத்திரம் எழுதப்பட்டதில் இருந்த போதாமையா, நடிப்பில் உள்ள சிக்கலா எனத் தெரியவில்லை. இதனாலேயே படத்தில் பல முக்கியமான காட்சிகள் சரியான வகையில் பார்வையாளர்களான நமக்கு வந்து சேரவில்லை.
இது மொத்தமாக மனிதத்தைப் பற்றி பேசக் கூடிய படம், ஆனால் குறிப்பிட்ட ஒரு காட்சியில் ஒரு மத நல்லிணக்க படமாகவும் மாறுகிறது. ஆனால் அந்தக் காட்சி இன்னும் கொஞ்சம் இயல்பாக இருந்திருக்கலாம். வெறுமனே அந்தக் காட்சியின் உணர்ச்சியைக் கூட்ட மட்டும் பயன்படுத்தியிருப்பதாகத் தோன்றியது. இது பெரிய குறை இல்லை என்றாலும், குறிப்பிடத்தகுந்த பிழை, படத்தில் பல காட்சிகளில் இந்தி வசனங்கள் வருகிறது. அவற்றுக்கு தமிழ் சப்டைடிலும் வருகிறது. அந்த தமிழ் சப்டைட்டிலில் எக்கச்செக்க பிழைகள். அது படத்தைப் பார்க்கும்போது பெரிய தொந்தரவாக இருந்தது.
மொத்தத்தில் படம் எப்படி இருக்கிறது என்றால், படத்தின் மூலம் ஒரு மெசேஜ் செல்ல விரும்பியதைப் போல, அதே மெனக்கெடலுடன் படத்தின் மேக்கிங்கிலும் ஈடுபட்டிருக்கலாம். அப்படி செய்திருந்தால், மிகச் சிறப்பான படமாக இருந்திருக்கும். ஆனாலும், மிக மோசமான படம் இல்லை, ஒரு ஒன்-டைம் வாட்சபுள் படமாக இருக்கிறது இந்த அயோத்தி.
- ஜான்சன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/aWSftuv
0 Comments