ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் தளபதி 67 மற்றும் ஏகே 62 குறித்த பதிவுகளாகவே இருக்கின்றன. விஜய்யின் தளபதி 67 குறித்த அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கும் வேளையில் அஜித்தின் 62வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
லோகேஷ் கனகராஜின் தளபதி 67-ல் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜூன் உட்பட திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதனால் அந்த படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வமும் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. இதுபோக மாஸ்டர் போலில்லாமல் தளபதி 67 முழுக்க முழுக்க தன்னுடைய பாணியிலான படமாகவே இருக்கும் என்று லோகேஷே கூறியிருந்ததும், அதனைதொடர்ந்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர்கள் பட்டியலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனியாகவே இருக்கிறது.
இப்படி இருக்கையில், ஏகே 62 குறித்து எதாவது அறிவிப்போ, தகவலோ வந்துவிடாதா என அஜித்தின் ரசிகர்கள் இலவு காத்த கிளி போல மிகுந்த ஆர்வமாக பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் ஏகே 62-ஐ அஜித்தின் தீவிர ரசிகரான விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் கூறிய ஒன்லைன் அஜித்துக்கு பிடித்து போயிருந்தாலும் முழுக்கதை அவருக்கு திருப்தியளிக்காமல் இருந்ததால் லண்டனுக்கு சென்று லைகா நிறுவனம் மூலமாக விக்னேஷ் சிவன் ஓகே செய்திருப்பதாக தகவல்கள் எழுந்துள்ளது.
இந்த விஷயம் அஜித் காதுக்கு செல்ல அதற்கு அவர் யெல்லோ சிக்னல் போட்டு அந்த கதையை கிடப்பில் வைத்திருக்கிறாராம். ஏனெனில், லோகேஷ் இயக்கத்திலான விஜய்யின் தளபதி 67 நிச்சயம் நல்ல கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்பதால் அதற்கு நிகரான கதைக்களத்தில் நடிக்க வேண்டும் என்ற திட்டத்தில்தான் விஷ்ணுவர்தன் அல்லது மகிழ் திருமேனியை ஏகே 62 இயக்குநருக்கான பட்டியலில் அஜித் சேர்த்திருக்கிறாராம்.
ஏற்கெனவே அஜித் விஷ்ணு வர்தன் கூட்டணி பில்லா ரீமேக் மற்றும் ஆரம்பம் படங்களுக்காக இணைந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருந்தது. இதனால் ஏகே 62-க்காக இதே கூட்டணியை உருவாக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். இதற்காக ரஜினியின் பாட்ஷா படத்தின் ரீமேக் அல்லது பாட்ஷா 2 ஆக எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், அப்படி எடுத்தால் அது மிகப்பெரிய ஹைப்பை உருவாக்கும் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும் பாட்ஷா படத்தை தயாரித்த சத்யா மூவிஸ் நிறுவனத்திடமும் இதற்கான அனுமதியை விஷ்ணு வர்தன் தரப்பு பெற்றிருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது. இதுபோக தடம், தடையறத் தாக்க, மீகாமன், கலகத் தலைவன் போன்ற ஆக்ஷன் படங்களை இயக்கிய மகிழ் திருமேனியும் அஜித்தின் 62வது படத்தை இயக்குவதாகவும் உலா வருகின்றன.
விஷயம் இப்படியாக இருக்க, விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பயோவில் இருந்து இதுவரை AK62 என்ற வாசகத்தை நீக்கவில்லை. முன்னதாக ஏகே 62 படத்தை தன்னுடைய பாணியிலேயே இயக்குவதற்கு படக்குழுவும் அஜித்தும் முழு சுதந்திரம் கொடுத்திருந்ததாக விக்னேஷ் சிவனே அண்மையில் நடந்த இயக்குநர்களுக்கான வட்டமேஜை நேர்காணலில் கூறியிருந்தார்.
ஆனால் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் ஆக்ஷன் படங்களாகவே நடித்து வரும் நிலையில் விக்னேஷ் சிவன் பாணியிலான கதையில் நடித்தால் அது ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக வருமா என்றும் அவருக்கு ஐயப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறதாம். அப்படி சாஃப்ட்டான கதைக் கொண்ட படத்தை விஜய்யின் தளபதி 67 உடன் க்ளாஷாக விட்டால் நிச்சயம் எதிர்ப்பார்க்கப்பட்ட வரவேற்பு கிடைக்காது என்பதால் இப்போதைக்கு விக்னேஷ் சிவனின் கதை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதாம்.
கூடுதலாக விக்னேஷ் சிவன் கொடுத்த படத்தின் பட்ஜெட் நிலவரப்படி நடிகர் நடிகைகளுக்கான சம்பளம் மட்டுமே 150 முதல் 180 கோடி ரூபாய் வரை எட்டுவதால் இந்த கதைக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டா என்றும் தயாரிப்பு குழு தரப்பில் புருவம் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இதேபோல விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் 17வது படமாக உருவாக இருந்த லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி (LIC) என்ற ஃபாண்டசி ரொமான்டிக் கதையும் பட்ஜெட் காரணத்தால் கதை விவாதத்துடனேயே நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
துணிவு படம் முடித்த கையோடு விக்னேஷ் சிவனின் படத்திற்கான பணிகளை மேற்கொள்ள அஜித் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போதும் எந்த பணியும் ஆரம்பிக்கப்படாமல் உள்ளது. புதிய இயக்குநரை தேர்வு செய்தால் அவர்களுக்கு கதைக்கான நேரத்தை கொடுத்தால் அதற்கு எப்படியும் 4-6 மாதங்கள் ஆகிவிடும். அதனால், ஏற்கனவே தனக்கான கதையை தயார் நிலையில் வைத்திருக்கும் ஏதேனும் ஒரு இயக்குநரை அஜித் டிக் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/t6X7LrP
0 Comments