Ad Code

Responsive Advertisement

`சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டுமா?’- ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன நச் பதில்!

''தீட்டு என்ற பெயரில் பெண்கள் கோவிலுக்குள் வர வேண்டாம் என்று எந்த கடவுளுமே சொல்லியதில்லை. இது நாமே உருவாக்கியவை'' என்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

மலையாளத்தில் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், அவர் எடுக்கும் முடிவு ஆகியவற்றை சொல்லிய படம் இது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் ஆர்.கண்ணன். நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தை தமிழில் ஏற்று நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படம் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

image

இந்நிலையில் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம் செய்தியாளர்கள் தரப்பில், “இப்படத்தின் மலையாள வெர்ஷனில் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டுமென சொல்லியிருப்பார்கள். தமிழில் எப்படி சொல்லியிருக்கின்றீர்கள்? இவ்விஷயத்தில் உங்கள் நிலைபாடு என்ன?” என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “இந்தப் படத்தில் சொல்லியிருப்பதை, படம் வெளிவரும்போது பாருங்கள். மலையாள கருத்தே இதிலும் இருக்கும். சபரிமலை என்றில்லை... எந்தக் கோயிலிலும் எந்தக் கடவுளும் `என் கோயிலுக்கு இவங்க வரக்கூடாது - இது பண்ணக்கூடாது - இது சாப்பிடக்கூடாது - இதெல்லாம் தீட்டு’ என சட்டம் வைக்கவில்லை; எல்லாமே மனிதர்கள் உருவாக்கியதுதான். கடவுளுக்கும் இந்த சட்டங்களுக்கும் சம்பந்தமேயில்லை. பெண்கள் கோவிலுக்குள் வர வேண்டாம் என்று எந்த கடவுள் சொன்னார் சொல்லுங்கள் பார்ப்போம். 

image

பெண்கள் மாதவிடாய்க்காலத்தில் வீட்டுக்குள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படக்கூடாது என்ற கருத்துக்கு எதிராகவும் இப்படத்தில் பேசப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் க/பெ. ரணசிங்கம் படத்தில் `தீட்டு என்ற பெயரில் பெண்கள் கோவிலுக்குள் வர வேண்டாம் என்று எந்த கடவுளுமே சொல்லியதில்லை. இது நாமே உருவாக்கியவை' என நான் ஒரு டயலாக் சொல்லியிருப்பேன். அதையே இப்போதும் சொல்கிறேன். நான் இதுபோன்ற கட்டுப்பாடுகளை எப்போதும் நம்புவதில்லை.

கடவுள் எல்லோருக்கும் ஒன்றுதான் ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. எந்தக் கடவுளுமே என்னுடைய கோவிலுக்கு அவர்கள் இவர்கள் வரக்கூடாது என எந்த கடவுளும் சொல்லவில்லை” என்றார்.

தொடர்ந்து படம் பற்றி பேசுகையில், “இப்பொழுதும் கூட ஆணாதிக்கம் இருக்கிறது. ஆணாதிக்கம் என்பது கிராமத்து பக்கம் நிறைய இருக்கின்றது என்பது எனது கருத்து. நகரத்திலும் இருக்கிறதுதான். பெண்களுடைய வாழ்க்கை சமையலறையோடு முடிவடைந்து விடக்கூடாது. அவர்களின் திறமை வெளியே வரவேண்டும்” என்றார். பின், “நான் படத்தின் நாயகியாகவே பல படங்களில் நடித்து வருகிறேன். இதில் என்ன தவறு? ஏன் நான் அப்படி நடிக்கக்கூடாது?” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Y9nA1Oc

Post a Comment

0 Comments