சபாக்களில் முன்பதிவு செய்யப்படவில்லை என்றாலும், நீலம் பண்பாட்டு மையம் என்றால் புறக்கணிக்கிறார்கள்; கலைவாணர் அரங்கத்தில் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியை இந்த வருடத்தில் நடத்துவதற்கு எவ்வளவோ முயற்சி எடுத்தபோதும் நடக்கவில்லை என இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான முனைப்பாக கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது. கடந்த வருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” என்ற கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி சேத்துப்பட்டுவில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் நாளான இன்று கிராமிய இசை என்ற தலைப்பில் இசை விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புத்தர் கலை குழு, இளையராஜா மாரியம்மாள் குழுவினரின் இசை நிகழ்ச்சி, பழங்குடியின மக்களின் இசை நிகழ்ச்சி போன்றவை இன்று நடைபெற்றது.
அப்போது புதிய தலைமுறையுடன் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் நிகழ்வு என்றால் சபாக்களில் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். நிகழ்ச்சி நடத்துவதற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. தனியார் சபாக்கள் தான் இவ்வாறு நடந்து கொள்கிறது என்றால் அரசாங்க அதிகாரிகளும் இவ்வாறு தான் நடந்து கொள்கிறார்கள். கலைவாணர் அரங்கத்தில் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சி இந்த வருடத்தில் நடத்துவதற்கு எவ்வளவோ முயற்சி எடுத்தாலும், அரங்கம் முன்பதிவு செய்யப்படாமல் இருக்கும்போதே சரியான பதில் கிடைக்கவில்லை. அரசாங்க அரங்கங்களை முன்பதிவு செய்யவதற்கான அனுமதியும் கிடைக்கவில்லை. சரியான பதிலும் கிடைக்கவில்லை என்று கூறினார். மேலும் அதிக நாட்கள் இழுத்தடிக்கப்பட்டதால் வேறு அரங்கங்களில் நிகழ்ச்சி நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/yAzfPcK
0 Comments