பிரபல ரௌடியின் மகனுடன் மோதும் சாதாரண கான்ஸ்டபிளுக்கு என்ன நடக்கிறது என்பது தான் விஷால் நடித்திருக்கும் லத்தி படத்தின் ஒன்லைன்.
லத்தியால் ஒருவரை அடித்ததால், சஸ்பெண்டு செய்யப்பட்டு, பெரும் போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்கிறார் கான்ஸ்டபிள் முருகானந்தம். ஆனாலும் விதி அவரை வேறு ரூபத்தில் லத்தி எடுக்க வைக்கிறது. லத்தியால் அவர் தாக்கியது பிரபல ரௌடி சுறாவின் மகன் வெள்ளை என தெரிய வருகிறது. பெரிய பிரச்னைகள் முருகானந்தத்தை வந்து சூழ்கிறது. இதனிடையே அவர் குடும்பத்திலும் சில சிக்கல்கள் வருகிறது. பிரபல ரௌடி, ரௌடியின் மகன், சென்னையின் மொத்த ரௌடி என ரௌடிகள் வெர்சஸ் எந்த சக்தியும் இல்லாத அப்பாவி கான்ஸ்டபிள் என்கிற இரு முனைகளை வைத்து கதையைக் கொண்டு போயிருக்கிறார் அறிமுக இயக்குநர் வினோத் குமார்.
சத்யம் படத்தில் ACP தொடங்கி, ஆர்மி ஆஃபீஸர், கார்னல், சர்வதேச காவல்துறை அதிகாரி என காவல்துறையின் எல்லா டாப் ரேங்கிங் பதவிகளிலும் இருந்துவிட்டு தற்போது டீப்ரோமோட் செய்யப்பட்டு கான்ஸ்டபிள் முருகானந்தமாக இந்தப் படத்தில் வந்திருக்கிறார் விஷால். ஆனால், இந்தக் கதாபாத்திரம் அவருக்கு பல இடங்களில் சிறப்பாக இருக்கிறது. குடும்பத் தலைவனாக, இன்ஸ்பெக்டருக்கு அடங்கிப் போகும் சாமான்ய கீழ்நிலை காவல் அதிகாரியாக சிறப்பாகவே நடித்திருக்கிறார். கேமராவைப் பார்த்துக்கொண்டே நடிக்கிறேன் பார் என ஓடிவரும் காட்சிகள் மட்டும் தான் கொஞ்சம் பீதியைக் கிளப்புகிறது. கான்ஸ்டபிள் மனைவியாக சுனைனா. சின்ன வேடம் தான். எளிதாக நடித்துக்கொடுத்திருக்கிறார். பிரபு கேமியோ என்று சொல்லப்பட்டாலும் கொஞ்சம் அதிகமாகவே வருகிறார். வில்லனின் மகனாக வரும் ரமணா வில்லன் என்பதற்காக முறைத்துக்கொண்டே இருக்கிறார்.
சின்ன போலீஸ் வெர்சஸ் பெரிய ரௌடி ; அடித்த போலீஸ் யார் என கண்டுபிடிக்கும் காட்சிகள் என்கிற வகையில் சுவாரஸ்யமாக சில காட்சிகளை எழுதியிருக்கிறார் வினோத் குமார். வில்லனுக்கான பில்டப்பும், அதற்கு வரும் நடிகர்களும் கிளேஷேவாக இருப்பதுதான் சோகம். இரண்டாம் பாதி முழுக்கவே ஒரு கட்டிடத்துக்குள் நடக்கும் படம் என்றாலும், எந்தவித ஸ்பீட் பிரேக்கும் இல்லாமல் ஆக்ஷன் எமோஷன் காட்சிகளை அடுத்தத்தடுத்து வைத்து நல்லதொரு கமர்ஷியல் பேக்காஜியாக்கியிருக்கிறார் இயக்குநர். பீட்டர் ஹெய்னின் சண்டைக்காட்சிகள் ஒவ்வொன்றிலும் ஒரு லோடு ரத்தம். யுவனின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் ஆங்காங்கே யுவன் டச்.
விஷாலுக்கு எப்படி இத்தனை ஆயுதங்கள் என்பதற்காக வைக்கப்பட்ட காட்சியில் எந்தவித லாஜிக்கும் இல்லாததால், அதன் மீதான நம்பகத்தன்மையும் குறைந்துவிடுகிறது. அதனாலேயே இரண்டாம் பாதியில் ஆக்ஷனோடு சேர்ந்து வரும் எமோஷனலில் எந்தவித பீதியும் நம்மைத் தொற்றிக்கொள்ள மறுக்கிறது. இறுதியில் லாஜிக் தேவை என்கிற சம்பிரதாயத்திற்காக வைக்கப்பட்ட காட்சிகளில் செயற்கைத்தனம் அதிகம் என்பதால் அதனோடும் பெரிதாக ஒட்டமுடியவில்லை. 1000 பேர் இரும்பு ராடால் அடித்தாலும், விஷாலுக்கு எதுவும் ஆகாது என்பது தெரிந்தாலும் வாயில் ரத்தம் வழிய அவர் பஞ்ச் பேசுவதும், இதுவும் என் பிளான் தான் என்பதாக அவர் சிரிப்பதும் முடியல ப்ரோ ரகம்.
லத்தியை சுழற்றுவதோடு கொஞ்சம் இன்னும் புத்தியை கூர் படுத்தியிருந்தால், லத்தி இன்னும் பலமாக இருந்திருக்கும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/0jy2V91
0 Comments