Ad Code

Responsive Advertisement

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: ரிலீஸில் துவங்கிய சர்ச்சை முதல் நடாவ் கருத்து வரை-என்னதான் பிரச்னை?

இந்தியாவில் ஜம்மு - காஷ்மீர் நிலப்பகுதி என்றாலே காலங்காலமாக சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்ததில்லை. அதேபோல், அங்கு 1980 முதல் 1990-களில் நடந்ததாகக் கூறப்படும், காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றம் மற்றும் படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாவதில் எழுந்த சட்டப்பூர்வ சிக்கல், இன்று இஸ்ரேல் நாட்டு தூதர் மன்னிப்பு கேட்கும் வரை சர்ச்சைகளாகவே சென்றுள்ளது. சொல்லப்போனால் ஒரு வருடத்திற்குள் பல்வேறு வகையான சர்ச்சைகளை இந்தப் படம் சந்தித்துள்ளது. இதுகுறித்து இங்குக் காணலாம்.

விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், பிரபல பாலிவுட் நடிகர்களான அனுபவம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தேஜ் நாரயண் அபிஷேக் அகர்வால், விவேக் அக்னி ஹோத்ரி, அவரது மனைவி பல்லவி ஜோஷி ஆகியோர் தயாரித்திருந்த இந்தப் படத்தை ஜி ஸ்டூடியோஸ் வெளியிட்டு இருந்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, 340 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. இந்தப் படம் கடந்த வந்த பாதை குறித்துப் பார்க்கலாம்.

1. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ (18+) சான்றிதழ் வழங்கியிருந்தது. இதேபோல் ரத்தம் தெறிக்கும் வன்முறை சம்பவங்கள் இருப்பதாகக் கூறி, பிரிட்டன் (15+), ஆஸ்திரேலியா (18+), நியூசிலாந்து (18+) சான்றிதழ்கள் வழங்கின.

2. இந்தப் படத்தை சிங்கப்பூரில் வெளியிட அந்நாட்டு திரைப்பட தணிக்கை வாரிய அதிகாரிகள், சிங்கப்பூர் உள்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியப் பின்னர் தடை விதித்தனர். இஸ்லாமியர்கள் பற்றி ஒருதலைப்பட்சமாக காட்டப்பட்டிருப்பதாக கூறி இந்தப் படத்தை வெளியிடுவதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

3. பட வெளியீட்டிற்கு முன்னதாக, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் ட்ரெயிலரில் காஷ்மீரில் வாழ்ந்த இந்து பண்டிட்களை, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்வதாக காட்சிகள் வெளியானதால் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து, இந்தப் படத்திற்கு தடைக் கோரி உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரால் பொதுநல வழக்கு ஒன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

4. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் பிரிமீயர் ஷோவைப் பார்த்த மறைந்த இந்திய விமானப் படை அதிகாரி ரவி கண்ணாவின் மனைவி நிர்மல் கண்ணா, படக்குழுவிடம் தனது கணவரை உண்மைக்குப் புறம்பாக காட்டியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். தனது கணவரின் தியாகத்தை தவறாக சித்தரித்து காட்டப்பட்டதை நீக்குமாறு அவரது மனைவி நிர்மல் கண்ணா வலியுறுத்தியும் படக்குழு செவிமடுக்காததால், ஜம்மு மாவட்ட நீதிமன்றத்தை அவர் நாடியிருந்தார். ஆனால், மறைந்த விமானப் படை அதிகாரி ரவி கண்ணாவின் காட்சிகளை காட்சிப்படுத்த மட்டும் தடை விதித்த நீதிமன்றம், படத்தை வெளியிட தடை விதிக்கவில்லை. இதனால் படம் திட்டமிட்டப்படி மார்ச் 11-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

5. முதலில் இந்தப் படத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் காட்சிகள் எதுவும் நீக்கப்படாமல், அந்தத் தடை சில நாட்களிலேயே விலக்கிக் கொள்ளப்பட்டது.

6. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்த்த பிரதமர் மோடி, படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும் படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அவர், உண்மையை அப்படியே கூறியிருப்பதாகவும் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

7. 90-களில் காஷ்மீரைச் சேர்ந்த இந்து மக்கள் எதிர்கொண்ட துயர சம்பவங்களை அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளதாகக் கூறி, பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா, குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கோவா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பீகார், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது.

8. மேலும் பல பாஜக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாநில நிர்வாகிகள் படத்தைப் பார்க்க ரசிகர்களை வலியுறுத்தி வந்தனர். மத்தியப் பிரதேசத்தில் ஒருபடி மேலேபோய், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்க்க மாநில காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசே உத்தரவிட்டது.

9. பாலிவுட்டில் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில், தென்னிந்தியாவில் கர்நாடகாவைத் தவிர மற்ற மாநிலங்களில் ரசிகர்களை பெரிதாக இந்தப் படம் கவரவில்லை. எனினும், மாநில தலைவர்கள் படத்தை பார்ப்பதற்கு சிறப்புக் காட்சிகளும் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னை ரோகினி சில்வர் ஸ்கிரீன்ஸில் இந்தப் படம் திரையிடப்பட உள்ளதாக அறிவித்து ட்வீட் செய்திருந்தார்.

10. தமிழக பா.ஜ.கவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, “‘Kashmir files’ என்கிற இந்திப் படம் பார்த்தேன். இது சினிமா அல்ல, ஆவணம், சரித்திரம் என்றே கூற வேண்டும். 1990-ல் ஃபரூக் அப்துல்லா தலைமையிலான ஆட்சியில் இந்துக்களுக்கு எதிரான கொலை வன்முறை, 5,00,000-க்கும் மேற்பட்ட இந்துக்கள் காஷ்மீரைவிட்டு விரட்டியடிக்கப்பட்டது ஆகியவற்றைத் தத்ரூபமாகக் காண முடிகிறது" எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

11. பாலிவுட் சினிமா இதுவரை செய்த பாவங்கள் அனைத்தையும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் சுத்தம் செய்துள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார்.

12.‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்க்க மக்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு வருவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்திருந்தார்.

13. இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் உங்களின் இதயத்தைக் கசக்கிப் பிழியும் என்றும், அதனால் காஷ்மீர் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வகையில், நீங்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

14. அதேநேரத்தில் கேரள காங்கிரஸ் கமிட்டி, ‘#Kashmir_Files Vs Truth’ எனும் தலைப்பில் ஒன்பது எதிர்க் கருத்துகளைத் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தது. குறிப்பாக 1990-களில் காஷ்மீர் இந்துக்கள் வெளியேற்றப்பட்டபோது, பாஜக ஆதரவு தந்த வி.பி. சிங் ஆட்சி மத்தியில் இருந்தது என்றும், அதுகுறித்து பாஜக எதுவும் ஆளும் அரசுக்கு தெரிவிக்கவில்லை என்றும் ட்வீட் செய்திருந்தது. இதற்கு இந்தப் படத்தில் ‘புஷ்கர் நாத்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த அனுபம் கெர், கொஞ்சம் கூட யோசிக்காமல் அபத்தமான கருத்துக்களை கேரள காங்கிரஸ் கூறுகிறது என பதிலடி தந்திருந்தார்.

15. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் எடுக்க முடியுமென்றால், ‘லக்கீம்பூர் ஃபைல்ஸ்’ படத்தையும் எடுக்க முடியும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார். ஏனெனில், வேளாண் சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது பாஜக மத்திய இணை அமைச்சரின் மகன் கார் மோதியதில் 4 விவசாயிகள், ஒரு செய்தியாளர் கொல்லப்பட்டதை அவர் சுட்டிக்காட்டும் வகையில் அவ்வாறு பேசியிருந்தார்.

16. இந்தப் படத்தில் அளவுக்கு அதிகமான பொய்கள் முன்வைக்கப்படுவதாக ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றஞ்சாட்டியிருந்தார்.

17. எதிர்வரும் குஜராத், ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காகவே ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை பாஜக பயன்படுத்தி வருவதாக சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவரும், எம்.பியுமான சஞ்சய் ராவத் புகார் தெரிவித்திருந்தார்.

18. இந்தப் படம் ஒரு திட்டமிட்ட பிரச்சாரத் திரைப்படம் என்று இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத் குற்றஞ்சாட்டியிருந்தார்.

19.கர்நாடகா மாநிலத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் ‘ஜேம்ஸ்’ திரைப்படம் ஓடும் திரையரங்குகளில் அந்தப் படத்தை நிறுத்திவிட்டு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை திரையிடுமாறு பாஜகவினர் வற்புறுத்துவதாக அம்மாநில காங்கிரஜ் எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா விமர்சனம் செய்திருந்தார்.

20. இந்தப் படத்திற்கு வரி விலக்கு கோரி, டெல்லி சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத் தொடரில் குறுக்கிட்டபோது, ‘அந்தப் படத்தை யூட்யூப்பில் போடுங்கள், அனைவரும் பார்க்க இலவசமாக கிடைக்கும்’ என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவர் வீட்டு முன்பு போராட்டம் நடைபெற்றது.

image

21. காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதற்கு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமே காரணம் என அம்மாநில முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக் கட்சித் தலைவருமான மெகபூபா முஃப்தி காட்டம் தெரிவித்திருந்தார்.

22. #KashmirFilesMovie, #Islamophobia உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் இரண்டு தரப்பிலிருந்தும் ட்விட்டர் டிரெண்டிங் செய்யப்பட்டு வந்தன.

23. காஷ்மீரில் பண்டிட்டுகளின் படுகொலைக்கும், பசுவுக்காக மனிதர்கள் தாக்கப்படுவதற்கும், எந்த வித்தியாசமும் இல்லை என தென்னிந்திய நடிகை சாய் பல்லவி கூறியதற்கு, பஜ்ரங் தள் சார்பில் காவல்நிலையத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டது. இதேபோல், பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மாவும் இந்தப் படத்தை வமர்சித்திருந்தார்.

24. கடைசியாக நேற்று கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தயாரிக்கப்பட்ட மோசமான திரைப்படம் என்று சர்வதேச திரைப்பட போட்டிக் குழுவின் தலைவரும், இஸ்ரேல் நாட்டின் இயக்குநருமான நடாவ் லாபிட் கருத்துத் தெரிவித்துள்ளார்.

25. நடாவ் லாபிட்டின் கருத்துக்கு, இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரி, அவரின் மனைவியும், நடிகையுமான பல்லவி ஜோஷி, நடிகர் அனுபவர் கெர் பதிலடி கொடுத்துள்ளனர். மேலும் நடாவ் லாபிட்டின் கருத்துக்கு, தேர்வுக் குழு விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் நாட்டு தூதர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/9bQVgxn

Post a Comment

0 Comments