Ad Code

Responsive Advertisement

‘வாரிசு’ படம் ஆந்திராவில் திட்டமிட்டப்படி வெளியாகுமா? - தயாரிப்பாளர் சங்கம் முற்றுப்புள்ளி

விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் திட்டமிட்டப்படி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி தெரிவித்துள்ளார்.

விஜய், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சங்கீதா, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், தமிழில் ‘வாரிசு’ என்றப் பெயரிலும், தெலுங்கில் ‘வரசுடு’ என்றப் பெயரிலும் இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், "தெலுங்கு திரைப்படத் துறையைக் காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில் சங்கராந்தி மற்றும் தசரா ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் உள்ளது. எனவே வினியோகஸ்தர்கள் இந்த முடிவைப் பின்பற்றவேண்டும்" என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இதனால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ‘வாரிசு’ திரைப்படம்  பொங்கல் பண்டிகையின்போது அங்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

image

இதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் லிங்குசாமி, பேரரசு மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோர் விஜய்க்கு ஆதரவாக பேசினர். தெலுங்கில் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையின்போது வெளியாகவில்லை என்றால், ‘வாரிசு’க்குப் பின், ‘வாரிசு’க்கு முன் என்ற நிலை உண்டாகும் என்று காட்டம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, "பண்டிகை நாட்களில் தமிழ் படங்களை தெலுங்கில் வெளியிடக் கூடாது என்று அங்கு ஒரு தீர்மானம் போட்டிருக்கிறார்கள். அவர்களிடம், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனக் கூறியிருப்பதை திரும்பப் பெற வேண்டும். மொழி எல்லைகளைக் கடந்த ஒரு கலை தான் சினிமா. இதனை ஒரு மாநிலத்திற்கானது எனக் கருதி மொழிப் பிரச்சனையாக பிரித்திட வேண்டாம் என அவர்களுக்கு நாங்கள் சொல்லியிருக்கிறோம்.

image

இந்தச் சிக்கல் தொடர்பாக நாங்கள் விரிவாகப் பேசியுள்ளோம். இது சம்பந்தமாக அவர்கள் கூறியதைத் திரும்பப் பெறுவதாகசொல்லியிருக்கிறார்கள். அத்துடன் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அந்தத் தீர்மானத்தை வாபஸ் பெற வேண்டும். எங்களையும் இது போன்று தீர்மானத்தை எடுக்க வைத்துவிடாதீர்கள் எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்ப முடிவெடுத்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.

அவர்கள் எங்களிடம் பேசியதை வைத்து பார்க்கையில் ‘வாரிசு’ படத்திற்கு எந்த சிக்கலும் இருக்காது. தயாரிப்பாளர்கள் சங்க கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்து சிக்கல் இல்லாமல் ரிலீசாகும் என அவர்கள் உறுதி அளித்துள்ளனர். சங்கராந்தி அன்று சிரஞ்சீவி, பாலய்யா படங்கள் ரிலீசாக இருக்கிறது. நமது ஊரில் பண்டிகை தினத்தில் திரையரங்குகளில் நமது கதாநாயகர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். அதுமாதிரி தான் அங்கேயும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொன்னவிதம் தவறு. அதையும் அவர்களிடம் தெரிவித்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/c6TR1Ew

Post a Comment

0 Comments