இயக்குநர்கள் ராஜமௌலியும், மணிரத்தினமும் சண்டையிட்டுக் கொள்ளவில்லை என்றும், படைப்பாளிகளின் படைப்புகளை ரசிக்க வேண்டுமே தவிர, ரசிகர்கள் சண்டையிட்டு கொள்ளக் கூடாது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் காவல்கிணறு சக்கரவர்த்தி திரையரங்கில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் பார்க்க நடிகர் சரத்குமார் வந்திருந்தார். பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், “கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ கதையை சிறப்பாக இயக்கி உள்ளார் மணிரத்தினம். ‘பாகுபலி’ சிறந்ததா, ‘பொன்னியின் செல்வன்’ சிறந்ததா என்கிற போட்டியே வேண்டாம். ரசிகர்கள் ஒற்றுமையுடன் படைப்பாளிகளின் படைப்புகளை பார்க்கவேண்டும்.
மேலும் கதையை படித்தவர்கள், படிக்காதவர்கள் என பிரித்து பார்க்காமல் அனைவரும் பார்க்கவேண்டும். நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்து உள்ளார்கள் என அறிய இது ஒரு நல்ல வாய்ப்பு. இப்போது உள்ள இளைஞர்கள் அதி புத்திசாலிகள். கதைகளை படிக்காமலேயே புரியும் தன்மை உள்ளவர்கள். இந்தப் பகுதி சிறிய கிராம பகுதியாக இருந்தாலும், இங்குள்ள மக்கள் ரசித்து பார்ப்பதே இந்தப் படத்தின் வெற்றி . மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இதைவிட சிறப்பாக இருக்கும். நாகர்கோயில் பகுதியில் இன்னும் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு உள்ளது . சென்னைக்கு சென்று அங்கும் ரசிகர்களுடன் படத்தை பார்ப்பேன். இதில் நடித்து உள்ள அனைவருமே சிறந்த நடிகர்கள்” எனக் கூறினார்.
தொடர்ந்து, சமூக ஊடகங்களில் ராஜமௌலியா? மணிரத்தினமா? என்று சண்டையிட்டுக் கொள்ளும் ரசிகர்கள் பற்றி கூறுமாறு செய்தியாளர்கள், நடிகர் சரத்குமாரிடம் கேட்டபோது, “ராஜமௌலியும், மணிரத்தினமும் சண்டையிடவில்லை. ரசிகர்களுக்குள் யார் பெரியவன் என்று போட்டி ஏற்பட்டுள்ளது. அனைத்து படைப்பாளிகளின் படைப்புகளையும் பார்க்க வேண்டும். ரசிகர்கள் இடையே சுமூகமான உறவு வர வேண்டும். பொழுதுபோக்கு அம்சத்தில் இந்தப் போட்டி தேவை இல்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3CEcNaj
0 Comments