இசையமைப்பாளர் இளையராஜா தமிழ் சமூகத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம். தன்னுடைய கான மழையால் கோடிக்கணக்கான மக்களின் மனங்களை குளிரச் செய்தவர். இசைஞானி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இளையராஜா குறித்த விவாதங்களும் அவ்வப்போது எழுவதுண்டு. தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தில் இளையராஜா குறித்த விவாதத்தை முன் வைத்துள்ளார்கள். இந்த விவாதம் சொல்ல வருவது என்ன? மிகவும் தைரியமாக முன்னெடுக்கப்பட்டு இந்த விவாதம் ஆரோக்கியமானதுதானா? என்பது குறித்து சற்றே யோசிக்க வேண்டியுள்ளது. படத்தில் என்ன விவாதம் வைக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கும் முன் சமீபகாலமாக அவர் தொடர்பாக பேசப்பட்டு வரும் விவாதங்களையும் அதன் தொடர்ச்சியாக படத்தில் பேசப்படும் அரசியல் விவாதத்தையும் பார்க்கலாம்.
தொடரும் விவாதங்கள்:
இளையராஜா குறித்த சர்ச்சைகளும், விவாதங்களும் அவ்வப்போது நிகழ்வது வழக்கம் தான். இந்த விவாதங்களை இரு வகைகளில் பிரித்து பார்க்கலாம். ஒன்று இளையராஜா நடந்து கொள்ளும் விதங்கள் குறித்தும், அவர் எடுத்த சில முடிவுகள் குறித்தும் இருக்கும். மற்றொன்று இளையராஜா குறித்த அபிப்ராயத்தால் மற்றவர்கள் ஒருவருக்கு ஒருவர் விவாதங்கள் செய்து கொள்வது.
முதல் வகையைப் பொறுத்தவரை சில நேரங்களில் ரசிகர்களிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் விவாதத்திற்குள்ளாகும். பெரும்பாலும் ஒரு கலைஞனுக்கே உண்டான சில குணாம்சங்களை அவர் வெளிப்படுத்தும் போதுதான் இத்தகைய சிக்கல்கள் வரும். தன்னுடைய பாடல்களுக்கான காப்புரிமை விவகாரத்தில் எஸ்.பி.பி உடன் முரண்பட்டது என இன்னும் சில விஷயங்களும் விவாதத்திற்கு உள்ளன. ஆனாலும், எல்லாவற்றையும் கடந்து ரசிகர்கள் தங்கள் மனதில் அவருக்கு சிம்மாசனம் போது அமர வைத்துள்ளார்கள். ஏனெனில், இசை உலகில் அவர் செய்துள்ள மகத்தான சாதனைகளுக்கு முன்பு சின்ன சின்ன முரண்களையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதை ரசிகர்களின் எண்ணமாக இருந்தது.
ஆனால், எந்த காலத்திலும் இளையராஜாவை அவரது பிறப்பின் அடிப்படையில் விமர்சிக்கும் போக்கும் பெரிய அளவில் முன் வைக்கப்படதில்லை. அப்படி யாரேனும் இளையாராஜாவை தவறி விமர்சித்துவிட்டால் பெரும் படையே திரண்டும் அவருக்காக குரல் கொடுப்பார்கள். அந்த அளவில் தமிழ் சமூகத்தில் அவருக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் இளையராஜாவை அவரது பிறப்பின் அடிப்படையிலே ஏற்க மறுக்கிறார்கள்’ என்ற கருத்தினை இயக்குநர் முன் வைக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜவின் ரசிகர்கள் இடையே அவர்களது இசை குறித்து ரசிகர்கள் செல்லச் சண்டைகள் போடும் போது கூட இப்படியான விவாதங்கள் நடந்ததில்லை. இயக்குநர் ரஞ்சித் வைக்கும் இந்த விவாதத்திற்கு முன்பாக, பாஜகவோடு தொடர்புப்படுத்தி இளையராஜா குறித்து எழுப்பப்படும் விவாதங்களை சற்றே பார்க்கலாம்.
மோடி புத்தகத்திற்கு முன்னுரையும் தொடரும் விவாதங்களும்!
இளையராஜா குறித்த சமீபத்திய விவாதங்களுக்கு தொடக்க புள்ளியாக அமைந்தது, ”மோடியும், அம்பேத்கரும்; சீர்திருத்தவாதியின் சிந்தனையும் செயல்வீரரின் நடவடிக்கையும்” என்ற புத்தகத்திற்கு அவர் எழுதிய முன்னுரைதான். ‘பாஜக தொடர்ச்சியாக பட்டியலின ஆளுமைகளை குறிவைத்து தன்பக்கம் ஈர்த்து வருகிறது; அந்த வரிசையில் இளையராஜாவும் ஐக்கியமாகிவிட்டார்’ என்ற விமர்சனங்கள் எழுந்தன. அவர் நியமன எம்.பி ஆக ஆன போதும், பாஜக தலைவர்கள் பலரும் அவரை ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என அழுத்தமாக குறிப்பிட்டு, வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து தன்னுடைய உழைப்பால் உச்சத்தை அடைந்தவர் என்று கருத்து தெரிவித்தனர்.
அப்போதும் கூட சொற்பமான சிலரை தவிர மற்றவர்கள் கன்னியமாகவே விமர்சனம் செய்தார்கள். ‘இளையராஜா தமிழர்களை தாலாட்டிய தாய். தவறிழைத்தவர் தாயாயினும் சுட்டிக்காட்டும் பிள்ளைகளே அறிவார்ந்த சமூகமாக இருக்க முடியும். அவர் கருத்தை வெறுக்கிறோம், அவரை அல்ல. ராஜாசார் இசை எங்கள் மூச்சு. அய்யா அம்பேத்கர் எங்கள் தன்மானம். சுவாசிப்பதற்காக தன்மானத்தை என்றும் இழக்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்’ என்று இயக்குநர் ஒருவர் குறிப்பிட்டு இருந்தார். அந்த அளவிற்கு அவரை விட்டுக் கொடுக்காமல் அவரது அரசியல் நிலைப்பாட்டை விமர்சனம் செய்தார்கள். அதாவது இளையராஜாவை பிறப்பின் அடிப்படையில் முன்னிலைப்படுத்தியதை பலரும் புறக்கணித்தனர்.
’நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் என்னதான் பேசியிருக்கிறார்கள்?
ஆனால், தற்போது நட்சத்திரம் நகர்கிறது படத்தில் அவரது பிறப்பை மனதில் வைத்துக் கொண்டு அவரது பாடல்களையே கேட்க மறுக்கிறார்கள் என்ற வாதம் வலுவாக வைக்கப்படுகிறது. திரைப்படம் தொடங்குவதே இளையராஜா இசை குறித்த உரையாடலுடன் தான். ’உனக்கு பாட்டு பிரச்னை இல்லை; இளையராஜா தான் பிரச்னை’ என ரெனே சொல்ல அப்படியெல்லாம் இல்லையென இனியன் மறுக்கிறார். இனியனுக்கும், ரெனேவுக்குமான அந்த உரையாடலுடன் அவர்கள் பிரிந்துவிடுகிறார்கள். இளையராஜா இசை குறித்து இருவருக்கும் இடையே அவர்கள் பழகத் தொடங்கிய ஆரம்பம் முதலே இருந்து கொண்டே இருப்பதையும் படத்தில் பின்னால் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ’இளையராஜாவை உனக்கு பிடிக்காதா’ என ரெனே ஒரு இடத்தில் கேட்கிறார். அத்துடன், இளையராஜாவை பிடிக்காதவங்களோடு எனக்கு வேலை இல்லை என கராராக சொல்கிறார். ஆனால், இனியனின் காதலுக்கு ஏன் அவர் ஓகே சொல்கிறார் என்பது முரண்பாடாக உள்ளது.
இந்த இடத்தில் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். இளையராஜா குறித்து இனியன் என்ன கருத்தினை முன் வைத்தார் என்பதே காட்சிப்படுத்தப்பட்டிருக்காது. ஒரு விஷயத்தை பேச தொடங்கிவிட்டால் இருதரப்பிலும் என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்துதானே விவாதத்தை நகர்த்த முடியும். ரெனே என்ன நினைக்கிறார் என்பதைத்தான் திரும்ப திரும்ப பதிவு செய்கிறது படம். ஆனாலும், விமர்சனத்திற்கு பதிலாக, ‘என்ன இருந்தாலும் அந்த பாசம் விட்டுப் போகவில்லை’ என்று இனியன், ரெனே பார்த்து சொல்வதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் அவ்வளவு வெளிப்படையாக படத்தில் பேசப்படுகிறது. இந்தப் படத்தில் ரெனேவின் கதாபாத்திரம் வழியாகத்தான் இயக்குநர் தன்னுடைய கருத்துக்களை முன் வைக்கிறார். ரெனேவின் கதாபாத்திரம் மூலம் மற்ற கதாபாத்திரங்களின் முரண்பாடுகளை சுட்டிக்காடி சரிசெய்கிறார். அதனால், ரெனே சொல்லும் வார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகிறது.
இளையராஜா பாடல்களை கேட்டு காதை பொத்திக் கொள்ளும் கதாபாத்திரம் என்பதை தமிழ் சமூகத்தில் காணவியலாத ஒன்று. எங்கோ ஒரு மூலையில் அரிதினும் அரிதாய் உள்ள சிலர் இருந்தாலும் அவர்களை கொண்டு வந்து ஒரு குணாம்சமாய் சேர்த்துக் கொள்வது வலிந்து திணிப்பதே அன்றி வேறில்லை. இளையராஜா தமிழ் சமூகத்தின் மூலை முடுக்கெல்லாம் நீக்கமற நிறைந்துவிட்டார். எல்லோர் வாழ்விலும் பிரிக்கமுடியாத ஒன்றாகே இன்னும் ஆண்டுகள் பல அது நீடித்துக் கொண்டிருக்கும். தன்னை அறியாமலேயே அவர்கள் இன்னும் பல காலத்திற்கு இளையராஜாவின் இசையை தமிழ் சமூகம் சுமந்து செல்லும். இதில் இப்படியான குணாம்சத்தை உள்ளே கொண்டு வருவது அவரை ஒரு சாதிய வட்டத்திற்கு வைத்து உரையாட வேண்டும் என்பதற்காக வலிந்து திணிப்பதாகவே உள்ளது.
இளையராஜாவே புறக்கணித்த ஒன்று!
தன்னை பட்டியலினத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு பேசுவதை இளையராஜாவே விரும்புவதில்லை. அவர் வழக்குப் போட்ட வரலாறுகளும் உண்டு. அவர் பிராமணிய தன்மையை நோக்கி போகிறார் என்ற விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் இளையராஜா கண்டுகொண்டதேயில்லை. இந்த நேரத்தில் இளையராஜா குறித்து சாதி ரீதியான விவாதத்தை முன்னெடுப்படுப்பது எந்தவிதத்தில் ஆரோக்கியமானது என்று தெரியவில்லை. ’வாழ்வின் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து இந்த நிலைமைக்கு அவர் வந்திருப்பதே ஒரு எம்பவர்மெண்ட் தான் என்று ரெனே கதாபாத்திரம் அழுத்தமாக சொல்கிறது’. ஒரு ஆளுமையை ஆதரிப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களை அசிங்கப்படுத்தமும் முடியும் என்பதுபோல் தான் இது உள்ளது. இளையராஜாவை சாதியை பார்த்து புறக்கணிக்கிறீர்கள் என்று திரும்ப திரும்ப சொல்வது என்பது அத்தகைய பார்வையை ஊக்குவிப்பதில் போய் முடிந்துவிடாதா?.
இசையையாவது கொண்டாடி இருக்கிறார்களா?
இளையராஜா மீதான அரசியலை எப்படி பேசியிருக்கிறார்கள் என்பதை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு பார்த்தாலும், இசைஞானியையாவது அழகாக உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்கிறார்களா என்றால், அதுவும் நிச்சயமாக இல்லை. படம் முழுக்க இளையராஜாவின் பாடல்கள் வந்து கொண்டே இருக்கிறது. தென்றல் வந்து தீண்டும் போது பாடலையும் ரெனே பாடுகிறார். ஆனால், இது எதுவுமே உணர்வுபூர்வமாக இல்லை. இசை குறித்த குறைவான புரிதல் உள்ள ஒரு ரசிகரும் தென்றல் வந்து தீண்டும்போது பாடலை இன்னும் நன்றாகவே சிலாகித்து பேசுவார்கள்.
சமீபத்தில் வெளிவந்த பல படங்கள் இளையராஜா இசையால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்திருக்கின்றன. அந்த வகையில் குக்கூ, மெஹந்தி சர்க்கஸ் போன்ற படங்களை இசைஞானியை அப்படி கொண்டாடி இருப்பார்கள். இந்தப் படங்கள் முழுவதும் இளையராஜா நீக்கமற நிரம்பியிருப்பார். இத்தனைக்கும் இந்த இரண்டு படங்களிலும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்திருக்கும். ஏன், படல் (கோடி அருவி) வரிகளில் கூட, “நள்ளிரவும் ஏங்க நம்ம இசைஞானி மெட்டமைச்சா பாட்ட பொங்கி வழிஞ்ச” என்று இசைஞானியை நிரப்பி இருப்பார்கள். குக்கூ படத்தில் இளையராஜா, பீத்தோவன் படங்களை ஒட்டி இருப்பார்கள். இயக்குநர் ரஞ்சித் தன்னுடைய கபாலி படத்தில் கூட ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலை அழகாக பின்னணியில் பாட வைத்து காட்சிப் படுத்தியிருப்பார்கள். அது கபாலி கதாபாத்திரத்தின் காதல் நினைவுகளை மின்னல் போல மின்ன வைத்து செல்லும். ஆனால், நட்சத்திரம் நகர்கிறது படத்தில் சற்றே ஆத்மார்த்தமாக இல்லை.
இறுதியாக ஒன்றை நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். இளையராஜாவை எல்லாம் கடந்து கொண்டாட வேண்டிய கடமை தமிழ் சமுதாயத்திற்கு உள்ளது. அது அவர் இசை உலகில் செய்த சாதனைக்கு. ஆனால், இசையை தாண்டிய அவரது நடவடிக்கைகளுக்கு விமர்சனங்கள் எழுவதும் இயற்கையானது. அதனை, கடந்துதான் செல்ல வேண்டும். ஏனெனில் யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. ஆனால், ஒரே நிபந்தனை யார் ஒருவரையும் செயலின் அடிப்படையில் விமர்சிக்கவோ, புறக்கணிக்கவோ வேண்டுமே தவிர பிறப்பின் அடிப்படையில் அல்ல.
இதையும் படிக்க: "விக்டர் கதாபாத்திரம் போல் மீண்டும் ஒரு கதாபாத்திரம் கிடைத்தால்.." - அருண் விஜயின் ஆசை!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/4XOLcJA
0 Comments