பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவின் கதாபாத்திரம் என்ன என்பது தொடர்பாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
முன்னனி திரை நட்சத்திரங்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம் என பலரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் மணிரத்னம் இயக்கத்திலும் உருவாகும் இப்படத்தின் முதல் பாகம், வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்துகான ப்ரமோஷன் வேலைகளில் பரபரப்பாக இயங்கி வருகிறது படக்குழு.
10-ம் நூற்றாண்டில் சோழப்பேரரசின் அரியணைக்காக நிகழ்ந்த உட்பூசல்களையும், துரோகங்களையும், தியாகங்களையும் அடிப்படையாகக் கொண்டு இளவரசன் அருண்மொழிவர்மன் பேரரசன் ராஜ ராஜனாகப் பதவியேற்று சோழர்களின் பொற்காலத்தை உருவாக்கும் முன் நிகழும் ஒரு சுவாரசியமான சாகசக் கதையாக இப்படம் தயாராவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இக்கதை 1950-களில் பத்திரிகை தொடராக வெளிவந்து, இன்றளவும் எல்லோராலும் விரும்பப்பப்படும் கல்கியின் `பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டிருக்கிறது.
அந்தவகையில் இந்த வாரம் திங்கள்கிழமை முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டு வருகின்றனர். திங்கள் கிழமை நடிகர் விக்ரம் கதாபாத்திரமான ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம்; செவ்வாய் கிழமை கார்த்தி கதாபாத்திரமான வந்தியத்தேவன் கதாபாத்திரம்; புதன்கிழமை ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரமான நந்தினி கதாபாத்திரம் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில் இன்று த்ரிஷாவின் கதாபாத்திர அப்டேட் வெளியாகியுள்ளது.
இன்று வெளியாகியுள்ள அந்த அப்டேட்டில், த்ரிஷா `குந்தவை’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என படக்குழு தெரிவித்துள்ளது. `ஆண்களின் உலகில், தைரியமிக்க பெண் அவர்’ என்ற அடைமொழியுடன் இந்த போஸ்டரை ஷேர் செய்துள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா.
இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடா ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளன. இப்படத்தின் டீசர், நாளை (ஜூலை 8) மாலை 6 மணிக்கு சென்னை டிரேட் சென்டரில் நடைபெற உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
படக்குழுவின் இந்த அடுத்தடுத்த அப்டேட்கள், ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/BR52ATk
0 Comments