உலக அளவில் தென்னிந்தியப் படங்களின் வசூலில் அல்லு அர்ஜூனின்‘புஷ்பா’ படத்தை முந்தியுள்ளது கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படம்.
உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், செம்பன் வினோத் ஜோஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம், சந்தான பாரதி, மாரிமுத்து, சூர்யா, காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. கடந்த 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் 25 நாட்களை கடந்தும் பல திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான ‘புஷ்பா’ படத்தின் மொத்த வசூலை, ‘விக்ரம்’ படம் 25 நாட்களிலேயே கடந்து சாதனை புரிந்துள்ளது. சமீபகாலமாக தென்னிந்திய திரைப்படங்கள் வட இந்தியாவிலும், உலக அளவிலும் வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது. குறிப்பாக ராஜமௌலியின் ‘பாகுபலி’ திரைப்படத்திற்குப் பிறகு, பாலிவுட் ரசிகர்களையும் தென்னிந்திய திரைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.
அந்த வகையில், ‘புஷ்பா’ திரைப்படம் உலக அளவில் 365 கோடி ரூபாய் வசூலித்தநிலையில், அதனை முறியடித்து ‘விக்ரம்’ படம் 25 நாட்களிலேயே 409 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும், கடந்த 2019-ம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், 433 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது. தற்போதும் ‘விக்ரம்’ படம் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருப்பதால், விரைவில் ‘சாஹோ’ படத்தின் வசூலையும் முறியடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வசூலில், ‘எந்திரன்’, ‘கபாலி’, ‘பிகில்’ படங்களின் வசூலையும் ‘விக்ரம்’ படம் முந்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/q5Jfunh
0 Comments