'அமராவதி' அர்ஜுன் தொடங்கி ‘வலிமை’ அர்ஜுன் என கதாப்பாத்திர பெயர்கள் அமைந்தாலும் தமிழ் சினிமாவில் 31 ஆண்டுகளாக, ஒரு ‘ஏகலைவன்’ போல் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டே இருக்கிறார் அஜித்.
படம் ரிலீஸ் ஆவதற்குமுன்பே ‘வருங்கால முதல்வரே…பிரதமரே… ஜனாதிபதியே…’ என்றெல்லாம் ரசிகர் மன்றங்களை உருவாக்கி கட்-அவுட், போஸ்டர்கள், பாலாபிஷேகம் என ஓவர் பில்ட் அப் கொடுத்து பொதுமக்களை ரணகளமாக்கிக் கொண்டிருக்கும் காலமிது. ஆனால், ரசிகர்களையும் மன்றங்களையும் உருவாக்கவில்லை அஜித். அவரது நடிப்பால், உழைப்பால் எல்லாமே தானாக உருவானது. அதனாலேயே, என்னவோ தனக்கு விஸ்வாசமான ரசிகர்களுக்கு மேலும் விஸ்வாசமாக இருக்க நினைத்தார் அஜித்.
சுயநலமில்லாத சுயம்பு!
இந்தியாவிலேயே ஒரு சினிமா நடிகரை முதல்வராக்கிய முதல் மாநிலம் என்ற பின்னணியைக் கொண்டது தமிழ்நாடு. ’நாடோடி மன்னன்’ எம்ஜிஆரை தமிழ்நாடாளும் முதல்வராக்கியது. அதுமட்டுமல்ல, சினிமாத்துறையைச் சேர்ந்த 5 பேரை முதல்வராக்கியதும் இதே தமிழ்நாடுதான். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா என ஐந்து பேருமே சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள். இந்தத் தமிழ் மாடல்தான் பின்னாளில் ஆந்திர ’சூப்பர் ஸ்டார்’ என்.டி ராமா ராவை ஆட்சியில் அமர்த்தியது. இந்தியாவுக்கும் தமிழகமே மாடலாய் விளங்கிக்கொண்டிருக்கிறது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நிகழாத ஒன்று கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிகழ்ந்தது. முதல்வர் வேட்பாளர்களாக போட்டியிட்ட கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் என மூவருமே கலைத்துறையைச் சேர்ந்தவர்கள். இப்படி, சினிமா ஸ்டார்களை அரசியலிலும் ஸ்டார்களாக பிரகாசிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது அவர்களது ரசிகர்களும் ரசிகர் மன்றங்களும்தான்.
இப்படி, அரசியலில் சினிமா ரசிகர்கள் பின்னிப் பிணைந்த தமிழ்நாட்டில், ”நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. ரசிகர்கள் தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துகளுக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது எனது எண்ண ஓட்டத்திற்கு உகந்ததாக இல்லை. நலத்திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம். நல்ல உள்ளமும் எண்ணமும் போதும் என்பதே என் கருத்து. எனது தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்” என்று 40 வது பிறந்தநாளின்போது அதிரடி ஸ்டேட்மெண்ட் விட்டு அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதோடு, சுயநலத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்றவர் அஜித். இப்படி கூறிய நடிகர் அஜித் மட்டுமே.
’அரசிலுக்கு வரவேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வருவேன்’ என்றெல்லாம் ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டி ஏமாற்றவில்லை. தனது ரசிகர் மன்றங்களை கடந்த 2011-ம் ஆண்டு, அதுவும் தனது பிறந்தநாளைக் கொண்டாட உற்சாகமாகத் தயாராகிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என்று அக்கறையாக தடை போட்டவர். ’தல’ என்று இருந்தாலும் ’அரசியல் தலயாக’ உருவெடுக்க தனது ரசிகர்களைப் பயன்படுத்தாத சுயநலமில்லாத சுயம்பு இவர்.
நேர்கொண்ட நெஞ்சம்!
மனதில் தோன்றிய கருத்துகளை நேர்கொண்ட பார்வையோடு வெளிப்படையாக கூறிவிடுவார் அஜித். கடந்த 2010 ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு திரைத்துறையினரின் ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’வில் சூப்பர் ஸ்டார்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் வாழ்த்தி பேசிய மேடையிலேயே, ”சமூக நிகழ்ச்சிகளுக்கு வற்புறுத்தி நடிகர்களை வரவைக்கிறார்கள் அய்யா. எங்களுக்கு அரசியல் வேண்டாம். யாரும் கட்டாயப்படுத்தக்கூடாது. நீங்கள்தான் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்” என்று திரைத்துறையினருக்கு நிலம் ஒதுக்கியதாக நடந்த விழாவிலேயே பகீரங்கமாக தனது நிலைப்பாட்டை கூறி பரபரப்பை பற்றவைத்தார்.
அதுவும், அஜித்தின் திருமணத்திற்கு கருணாநிதி நேரில் வந்து வாழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் பர்சனல் வேறு, தொழில் வேறு என்பதை பிரித்துப்பார்த்து பார்க்கிறவர் . கருணாநிதியிடம் மேடையிலேயே அப்படி சுட்டிக்காட்டியவர்தான், அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு உடல்நலம் குன்றியிருந்தபோது மருத்துவமனைக்கே சென்று நலம் விசாரித்தார். அவரது மறைவின்போதும் நேரில் மரியாதை செலுத்தினார். ஆமாம், அஜித்துக்கு பர்சனல் வேறு; தொழில் வேறு.
பாஜகவுக்கு ஃபுல்ஸ்டாப் வைத்த ‘வலிமை’
இப்போது, பிரபலங்கள் பலர் பிரதமர் மோடியை பாராட்டி பேசுவது ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு அஜித் ரசிகர்கள் சிலர், பாஜகவில் இணைந்ததையொட்டி மோடியின் திட்டங்களை நாட்டு மக்களுக்கு கொண்டு செல்லவேண்டும் என்று தொடக்கப்புள்ளியை வைத்தார் தமிழிசை செளந்தரராஜன். அமைதி காக்காமல் கொஞ்சம்கூட தாமதிக்காமல், ”எனக்கு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை. நான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன். நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் ரசிகர்களுக்கும் அதையேதான் வலியுறுத்துகிறேன்” என்று அதிரடி ஸ்டேட்மெண்ட் விட்டு முற்றுப்புள்ளி வைத்தவர் அஜித்.
அதிமுகவை ஆஃப் செய்த ’விவேகம்’!
கடந்த பிப்ரவரி மாதம்கூட’வலிமை’ படம் ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியானதையொட்டி ‘அஜித் அரசியலுக்கு வரப்போகிறார்’ என்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் கூறியபோது, தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் ”அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை” என்று விவேகமாக விளக்கம் அளித்து அதிமுகவினரை ஆஃப் செய்தார். இப்படி, ரசிகர் மன்றங்களை வைத்து மாமன்றங்களை பிடிக்கலாம் என்று காய்நகர்த்தும் நடிகர்கள் மத்தியில் ரசிகர்கள் வீண் செலவுசெய்து வாழ்க்கையை தொலைத்துக் கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தினாலேயே நம் எல்லோரையும் அவரது ரசிகர்களாக்கிக் கொண்டிருக்கிறார் அஜித்.
‘அசல்’ வாழ்க்கை அஜித்!
நடிகர்களாக இருப்பதால் தனக்கான வாழ்க்கையை வாழ முடியவில்லை என்பார்கள் நடிகர்கள். ஆனால், அஜித் அப்படியல்ல. எப்போதும் தனது தொழில் வேறு பர்சனல் வேறு என்று அவரது வாழ்க்கையை அஜித்தாக வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறார்.
பைக் ரேஸ், கார் ரேஸ், ஏரோ மாடலிங், ஃபோட்டோகிராபி, சமீபத்தில் பைக்கில் வாகா எல்லைவரை ட்ரிப் அடித்தது, துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொள்வது என தனக்கு பிடித்தமான வாழ்க்கையை ’அசலாக’ வாழும் நடிகர் அஜித் என்று சொல்லலாம். இப்படி அஜித் குறித்த ஆச்சர்யங்கள் ஏராளம். இதில், அவரது நடிப்பை பற்றி சொல்லாமல் விடலாமா?
வில்லன்களுக்கே டஃப் ஃபைட் வில்லன்!
ஸ்டார் நடிகர்களின் ரஜினிக்கு பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் வில்லத்தனம் செய்த ஹீரோ என்றால் அது அஜித்தான். ’16 வயதினிலே’, ‘மூன்று முடிச்சு’, ’அவர்கள்’, ’நெற்றிக்கண்’, ‘எந்திரன்’ என ஹீரோவாக நடிக்கும்போதே வில்லனாகவும் மிரட்டியவர் ரஜினி. அப்படி முன்னணி நடிகர்களில் ரஜினிக்கு அடுத்து வில்லனாக நடித்து ரசிகர்களிடம் ‘மங்காத்தா’ ஆடியவர் என்றால் அஜித்தான். ’வாலி’, ‘வரலாறு’, ‘பில்லா’, ‘மங்காத்தா’ என வில்லனாக நடித்த அத்தனைப் படங்களும் அட்டகாசமான ஹிட்ஸ்.
’ஆசை’, ‘காதல் கோட்டை’, ‘காதல் மன்னன்’, ’அமர்க்களம்’, ‘முகவரி’, ’கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘தீனா’, ’வரலாறு’, ‘பில்லா’, ’மங்காத்தா’, ‘வீரம்’, ‘விஸ்வாசம்’ என அவரின் மெகா ஹிட் படங்களை அடுக்கலாம். அதேநேரம், பெண்கள் மீதும் பெண் குழந்தைகள் மீதும் அவரின் அக்கறைக்கு ‘நேர்கொண்ட பார்வை’, ‘விஸ்வாசம்’ படங்களைச் சான்றாகச் சொல்லலாம். அதுவும், இரண்டுப் படங்களிலும் முன்னணி நடிகர் பெண்களுக்கான சுதந்திரம் குறித்து பேசுவது பாராட்டக்கூடியது. அதுமட்டுமல்ல, படத்தில்கூட தலைக்கவசம் அணிவது ‘தலையாய’ கடமை என்று இளைஞர்களுக்கு விழிப்புணர்வூட்டியவர்.
தன்னை அறிந்தால்!
இவர் வயதையொத்த நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன், பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா வரை இளம் நாயகிகளுடன் ஜோடி போட்டுக் கொண்டிருக்கும்போது, தனது வயதிற்கு ஈடு இணையான நாயகிகளுடன் நடிக்கிறார். ’நேர்கொண்ட பார்வை’ வித்யா பாலனே சான்று. இப்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் நயன்தாரா, ஸ்ருதிஹாசன், வித்யா பாலன், ஹீமா குரேஷி என தன்னை அறிந்து நாயகிகளுடன் நடித்துள்ளார்.
கிரீடங்களை சுட்டுத்தள்ளிய ‘ஏகே 47’!
தமிழ் நடிகர்களிலேயே கோட் சூட் என்ற செம்ம சூட்டாகும் நடிகர் அஜித்தான். பட்டங்களுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ஹீரோக்கள் மத்தியில் தனக்கு கொடுத்த ‘தல’, ‘அல்டிமேட் ஸ்டார்’ போன்ற கிரீடங்களையே ’ஏகே 47’ போல் சுட்டுத்தள்ளிய ’ஏகே 51’ இவர். சினிமா வாழ்க்கையில் ஏகே 47-ஐ விட வலிமையானது இந்த ஏகே 51.
அதேபோல், சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடியுடன் நடிக்க யோசிப்பார்கள். ஆனால், அந்த கெட்-அப்பிலேயே நடித்து செம்ம ஹிட் கொடுத்தவர் அஜித். அதனால்தான், இவர் தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட தன்னம்பிக்கையாளர். அந்த, மாபெரும் தன்னம்பிக்கையாளர் இன்று 51 வது பிறந்தாளைக் கொண்டாடுகிறார். வெற்றிச் சாதனைகள் இன்னும் இன்னும் அவரைப் பின் ‘தொடரும்’… ஹேப்பி பர்த்டே அஜித்!
-வினி சர்பனா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/nR3KVho
0 Comments