Ad Code

Responsive Advertisement

'டெல்லியில் அவமானப்பட்டேன்; இந்தி சினிமாவுக்கே முக்கியத்துவம்'- 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி

தேசிய விருது வாங்கும் நிகழ்ச்சியில் இந்தி சினிமாவுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும். இதனால் தான் அவமானப்பட்டதாகவும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகில் சமீபகாலமாக இந்தி மொழிக்கும், பிராந்திய மொழிகளுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. கடந்த வாரம் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், "நம் நாட்டின் தேசிய மொழி இந்தி" என பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தியாவுக்கு தேசிய மொழி என்ற ஒன்றே கிடையாது என்றும், அலுவல் மொழிகளில் ஒன்றுதான் இந்தி எனவும் நெட்டீசன்கள் சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்ததை அடுத்து அஜய் தேவ்கான் வருத்தம் தெரிவித்தார்.

image

இதேபோல, பல இந்தி நடிகர்களும் தென்னிந்திய மொழி படங்கள் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அண்மையில் ஆர்ஆர்ஆர், புஷ்பா போன்ற தென்னிந்திய திரைப்படங்கள் 'பான் இந்தியா' படங்களாக வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றிகளை குவித்தன. இதனை சகிக்க முடியாமல்தான் இதுபோன்ற கருத்துகளை இந்தி நடிகர்கள் கூறி வருவதாக தென்னிந்திய திரைப்படத்துறை கூறி வருகிறது.

இந்நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ஆச்சார்யா திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சிரஞ்சீவி பேசியதாவது:

image

ஒருகாலத்தில் இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமா என்று எண்ணும் அளவுக்கு அந்த மொழி திரைப்படங்கள் ப்ரமோட் செய்யப்பட்டன. பிராந்திய மொழி திரைப்படங்கள் நன்றாக எடுக்கப்பட்ட போதிலும், தேசிய அளவில் அது என்றைக்கும் பேசப்படாது. இதுகுறித்து பேசும்போது, நான் தேசிய விருது வாங்கிய நிகழ்வு நினைவுக்கு வருகிறது. 1988-ம் ஆண்டு வெளிவந்த 'ருத்ரவீணா' திரைப்படத்துக்கு எனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. விருதை வாங்குவதற்காக நானும், படக்குழுவினரும் டெல்லிக்கு சென்றோம்.

அப்போது விழாவுக்கு முன்பு நடந்த விருந்து நிகழ்ச்சியில், இந்தி சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்களை மட்டுமே வைத்து அரங்கம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, அந்த நிகழ்ச்சியில் இந்திய திரைப்படங்களுக்காக காண்பிக்கப்பட்ட பிரத்யேக காட்சியில் இந்தி திரைப்படங்களின் சீன்களே காட்டப்பட்டன. தென்னிந்திய திரைப்படங்கள் சார்பில் தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர் - ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டன. தென்னிந்தியாவில் எத்தனையோ திறமைவாய்ந்த நடிகர்கள் உள்ளனர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், என்.டி. ராமாராவ், ராஜ்குமார் போன்ற ஏராளமான நடிப்பு சக்கரவர்த்திகள் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் எங்களுக்கு கடவுள் போன்றவர்கள். ஆனால், அவர்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு இந்தி நடிகர்கள் மட்டுமே அந்நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். உண்மையிலேயே அந்த நிகழ்ச்சியில் நான் அவமானப்பட்டேன்.

ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற 'பான் இந்தியா' திரைப்படங்கள் தெலுங்கு சினிமாவை பெருமைக் கொள்ள செய்திருக்கின்றன. மிக நீண்டகாலத்துக்கு பிறகு நான் பெருமிதமாக உணர்கிறேன். நான் தெலுங்கு திரையுலகில் இருக்கிறேன் என இப்போது என்னால் மார்தட்டி சொல்ல முடியும். இந்திய திரையுலகில் உருவாக்கப்பட்டிருந்த தடைகளை அடித்து நொறுக்கி தெலுங்கு சினிமா இன்று இந்திய திரையுலகின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. நமது வெற்றியை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். இவ்வாறு சிரஞ்சீவி பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/DnIOUN8

Post a Comment

0 Comments