Ad Code

Responsive Advertisement

'நடிகர் விமல் மீதான புகாரை திரும்பப் பெறுங்கள்' - தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு ஜாமீன்

பண மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு எதிரான புகார்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மாதத்தில் நடிகர் விமலுக்கு எதிராக மன்னர் வகையறா படம் தொடர்பாக தயாரிப்பாளர் சிங்காரவேலன், கோபி, விநியோகஸ்தர் கங்காதரன் மற்றும் தயாரிப்பாளர் கனேஷ் மகள் ஹேமா கணேஷ் ஆகியோர் அடுத்தடுத்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பண மோசடி செய்ததாக புகார் அளித்தனர்.

image

இந்த புகார்கள் அனைத்தும் போலி ஆவணங்கள் அடிப்படையில் பொய்யாக கொடுக்கப்பட்டுள்ளது என நடிகர் விமல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆதாரங்களுடன் மனு ஒன்றை அளித்து விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்தில் நடிகர் விமல் பேசிய பழைய ஆடியோவை மர்ம நபர்கள் தவறாக சமூக வலைதளத்தில் பயன்படுத்தி பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்தினர்.

குறிப்பாக நடிகர் விமல் விருகம்பாக்கத்தில் மன்னர் வகையறா படம் விவகாரம் தொடர்பாக, போலி கணக்குகள் காட்டி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் கோபி உள்ளிட்ட நபர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களையும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தார்.

image

இந்நிலையில் நடிகர் விமல் கொடுத்த பண மோசடி புகாரில் விருகம்பாக்கம் போலீசார் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தயாரிப்பாளர் சிங்காரவேலனை போலீசார் கடந்த மாதம் 26 தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஜாமீன் கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிங்காரவேலன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதற்கு எதிப்பு தெரிவித்து இடையீட்டு மனுதாரராக நடிகர் விமல் மனுத்தாக்கல் செய்தார்.

அதில் தொடர்ந்து போலி ஆவணங்களை பயன்படுத்தி தனக்கு எதிராக பொய் புகார்களை அளித்து அவதூறு பரப்பும் வகையில் சிங்காரவேலன் செயல்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஆதாரங்கள் கிடைக்கக்கூடும் என்ற அடிப்படையில் ஜாமீன் வழங்கக்கூடாது என நடிகர் விமல் மனு தாக்கல் செய்திருந்தார் .

image

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது நடிகர் விமலுக்கு எதிராக எந்த வகையிலும் செயல்பட மாட்டேன் எனவும், நடிகர் விமலின் எதிர்காலத்தில் வரும் படங்களுக்கு தொந்தரவு அளிக்க மாட்டேன் என்ற அடிப்படையிலும் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மேலும் நடிகர் விமல் இடம்பெற்ற ஆவணங்களை திருப்பித் தருவதாகவும், அவர் மீது கொடுக்கப்பட்ட புகார்களை திரும்பப் பெறுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்காரவேலன் வாக்குறுதிகளாக தாக்கல் செய்த மனுவை ஏற்று நடிகர் விமல் சமாதானமாக செல்வதாக கூறி, மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி கௌதமன், முதற்கட்டமாக நடிகர் விமல் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்டு சிங்காரவேலனுக்கு ஜாமீன் தர முடியாது என உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சிங்காரவேலன் சில வாக்குறுதிகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நடிகர் விமல் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் சில நிபந்தனைகளை விதித்து ஜாமீன் தருவதாக நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

image

அந்த அடிப்படையில் சிங்காரவேலன் மற்றும் மேலும் இருவர் 25 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி பிணை பத்திரம் கொடுக்க வேண்டும் எனவும், சிங்காரவேலன் மனுவில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், பிணையில் வெளிவந்த மூன்று நாட்களுக்குள் நடிகர் விமலிடம் பெற்ற ஆவணங்களை திரும்பி ஒப்படைக்க வேண்டும் எனவும், நடிகர் விமலுக்கு எதிராக கொடுக்கப்பட்ட பொய் புகார்களை ஏழு நாட்களுக்குள் திரும்பப்பெற வேண்டும்.

அதுவரை விசாரணை அதிகாரி முன்பு தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திடவும் நிபந்தனை விதித்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் தானாக கொடுக்கப்பட்ட ஜாமீன் ரத்தாகிவிடும் எனக்கூறி, தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி கௌதமன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/cFsjHb2

Post a Comment

0 Comments