பண மோசடி புகாரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீதான வழக்கில், நடிகர் சூரி, சென்னை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானநிலையில், தப்பு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக கூறி, நடிகர் சூரியிடம் பணமோசடி செய்ததாக, முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால் அவருக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரிகள், அவருக்கு சாதகமாக செயல்படுகின்றனர்' என்று தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, ‘உயர் பதவியில் இருப்பவர்கள் இதுபோன்ற பண மோசடி செயல்களில் ஈடுபடக்கூடாது’ என கருத்து தெரிவித்தார்.
மேலும், ‘கோடிக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுவதாகவும், துணை ஆணையர் பொறுப்பில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் எனவும், இதனை கூடுதல் ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரி மேற்பார்வையிட வேண்டும் எனவும்’ நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
அன்புவேல் ராஜன் மற்றும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது புதிதாக விசாரணை நடத்தி, அதை 6 மாதங்களுக்குள் முடித்து, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி முடித்து வைத்திருந்தார். இந்நிலையில், அந்த வழக்கிற்காக சென்னை மத்திய குற்றப்பிரிவின் துணை ஆணையர் மீனா முன்னிலையில் விசாரணைக்காக, நடிகர் சூரி ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூரி, “என்னுடைய வழக்கு அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். பண விவகாரத்தில் ஏமாந்து உள்ளேன். இந்த வழக்கு அடையார் காவல் நிலையத்தில் நடந்துகொண்டிருந்தது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தேன். திருப்திகரமான விசாரணை நடைபெறவில்லை என கோரிக்கை வைத்து, அதன் அடிப்படையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், துணை ஆணையர் தலைமையிலான விசாரணை நடக்கிறது.
இதுதொடர்பாக இன்று விசாரணைக்காக வந்துள்ளேன். நிச்சயம் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நினைக்கிறேன் நீதிமன்றத்தையும் காவல்துறை மட்டுமே நம்பி உள்ளேன். இன்று விசாரணை நன்றாகவே நடந்தது. கடந்த 2 ஆண்டு காலமாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. என்னை காவல்துறை அழைத்தபோது, நேரில் ஆஜராகி அனைத்து பதில்களும் தெரிவித்துள்ளேன். தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது” இவ்வாறு தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/GIUx3su
0 Comments