ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கி இருக்கும் திரைப்படம் திட்டம் இரண்டு. சோனி லைவில் வெளியாகி இருக்கும் இத்திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு புதுசு. காவல் துறை அதிகாரியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் தோழி காணாமல் போகவே புலனாய்வில் இறங்குகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். நீளும் புலனாய்வில் அவர் சந்திக்கும் திடுக்கிடும் திருப்புமுனைகளே இப்படத்தின் திரைக்கதை.
சுபாஷ் செல்வத்தை பேருந்துப் பயணத்தில் சந்திக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடன் பயணிக்கும் சுபாஷின் அணுகுமுறைகளால் ஈர்க்கப்படுகிறார். காதலாக மலரும் அந்த உறவுக்குப் பின்னே ஒளிந்திருக்கும் அதிர்ச்சிரக க்ளைமேக்ஸ் எளிதில் யூகிக்கக் கூடியதல்ல. கோகுல் பெனாயின் ஒளிப்பதிவு இந்த த்ரில்லர் கதைக்கு நிறைவாக அமைந்திருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பொது சமூகத்தில் யாரும் கவனிக்காத ஒரு க்ரே லைனை எடுத்துக் கொண்டு அதனை த்ரில்லர் வகைமைக்குள் கதையாக்கித் தந்திருப்பது பாராட்டத்தக்கது.
துவக்கத்தில் தமிழ் சினிமாவானது திருநங்கைகளை பகடி என்ற பெயரில் கேலியும் கிண்டலும் செய்து வந்தது., பிறகு அந்நிலை மெல்ல மாறியது. அதே நேரம் பெண்ணாகப் பிறந்து தன்னை முழு ஆணாக உணரும் திருநம்பிகள் குறித்து இதுவரை யாரும் பேசியதாகத் தெரியவில்லை. தமிழில் திருநம்பிகள் குறித்து பதிவாகும் முதல் சினிமா திட்டம் இரண்டாக இருக்கலாம். அதே நேரம் திருநம்பிகள் குறித்து இயக்குநரின் அணுகுமுறை நிறைவாக இருக்கிறதா என்றால் சந்தேகம் தான். வசனங்களில் சில இடங்களில் திருநம்பிகளை திருநங்கைகளை மாற்றுத்திறனாளிகள் என்பதுபோல புரிந்து கொண்டு வசனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் மேல் கரிசனம் காட்டப் பணிக்கிறது இயக்குநரின் பார்வை. உண்மையில் இவையெல்லாம் ஒரு குறைபாடு அல்ல. ஆண் பெண் போல திருநம்பிகள் மற்றும் திருநங்கைகளும் இயற்கை அங்கீகரித்த பாலினங்கள் தான்.
ஆக்ஷன் அதிரடி காட்சிகள் இல்லாமலேயே ஐஸ்வர்யா ராஜேஷ் காவல்துறை அதிகாரியாக கெத்து காட்டி அசத்தியிருக்கிறார். அதே நேரம் ஒரு பெண்ணாக அவரது தனிப்பட்ட வாழ்வை பதிவு செய்யும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். கொஞ்சம் பிசகினாலும் மிகப்பெரிய எதிர்ப்பை இக்கதை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் அதனை ஓரளவு தெளிவாக கையாண்டிருக்கிறார் இயக்குநர். சஸ்பன்ஸ் த்ரில்லராக மட்டுமே இப்படத்தைப் பார்த்தால் திரைக்கதை கொஞ்சம் சொதப்பல் தான். சதிஸ் ரகுநாதனின் இசை ஓகே ரகம்.
கிட்டத்தட்ட மனிதர்களை 50 வகையான பாலினங்களாகப் பிரிக்கலாம் என்கிறது ஓர் ஆய்வு. நாம் இப்போதுதான் ஆண் பெண் திருநங்கை தாண்டி திருநம்பிகள் குறித்து பேசத்துவங்கியிருக்கிறோம். தமிழ் சினிமாவில் திருநம்பிகள் குறித்த முதல் விவாதத் திறப்பை ஏற்படுத்தியதற்கு திட்டம் இரண்டு குழுவிற்கு பாராட்டுகள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3f9Zblu
0 Comments