
இந்திய சினிமாவின் உச்ச இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இன்று அவருக்கு பிறந்தநாள். 65-வது அகவையில் அடியெடுத்து வைத்துள்ளார் மணிரத்னம். பலரும் தொடத் தயங்குகிற நிஜ வாழ்க்கையின் கதையை தனது திரைப்படத்தின் கதைக் களமாக வைத்து, அதற்கு புனைவுடன் உயிர் கொடுக்கும் வல்லமை படைத்தவர்.
எம்.பி.ஏ படித்த அவர் திரைத் துறையில் என்ட்ரி கொடுக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்தது. அவரது குடும்பம் முழுவதும் சினிமா துறையை நம்பி தொழில் செய்து வந்ததே இதற்கு ஒரு காரணம். மறுபக்கம் அவரது ஆர்வம். அதனால் 'பல்லவி அனுபல்லவி' என்ற கன்னட மொழி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அவர் இயக்கிய முதல் சில திரைப்படங்கள் தோல்வியை தழுவியதாகவும் சில தகவல்கள் சொல்கின்றன. ஆனால் அதையெல்லாம் முற்றிலுமாக மடைமாற்றியது ‘மெளன ராகம்’. இந்தப் படத்தின் வசனங்கள் தொடங்கி அனைத்துமே ரசிகர்களை கவர, படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது.

தொடர்ந்து 'நாயகன்', 'அக்னி நட்சத்திரம்', 'கீதாஞ்சலி', 'அஞ்சலி', 'தளபதி' என பிஸியாக படம் இயக்கி அசத்தினார் மணிரத்னம். 'தளபதி' திரைப்படத்தில் நடிகர் ரஜினியை முற்றிலும் மாறுபட்ட ஆக்ஷன் ஹீரோவாக வடித்திருப்பார். நிதர்சன உலகின் புராண கதாபாத்திரமான கர்ணனை மையமாக வைத்து மகாபாரதத்தை தனது ஸ்டைலில் ரீ-ரைட் செய்திருப்பார். இதுதான் திரைக்கதையில் அவர் வித்தியாசமான அணுகுமுறையை அணுக ஆரம்பித்த காலம் என குறிப்பிடலாம்.
வழக்கமாக மணிரத்னம் படம் என்றால் வசனங்கள் மிகக் குறைவு என சொல்வதுண்டு. ஆனால் அவரது படைப்புகள் காட்சியின் ஊடாக காவியம் பேசியிருக்கும்.
ரோஜா: இதிகாச கதையாக சொல்லப்படும் சத்தியவான் - சாவித்திரி கதையை அடித்தளமாக கொண்டு காஷ்மீரில் நிலவும் பயங்கரவாத சூழலையும், அதனால் இந்தியாவுக்கு ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் சொல்லி இருப்பார். 1992இல் வெளியான இந்தப் படம் பரவலாக வரவேற்பை பெற்றது. முதல் பாதியில் காஷ்மீரின் இயற்கை முகத்தையும், பிற்பாதியில் பயங்கரவாதிகளால் அந்தப் பகுதியில் நிலவும் சூழலையும் காட்சி செய்திருப்பார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றிருந்தது.

பம்பாய்: 1992 - 93 காலக்கட்டத்தில் பம்பாயில் (இன்றைய மும்பை) நடைபெற்ற மதக் கலவரத்தின் உண்மைகளை அடிப்படைகளை வைத்து கதை அமைத்திருப்பார். இருவேறு மதத்தை சேர்ந்த காதலில் ஆரம்பித்து அவர்களது குடும்பத்தில் இந்த கலவரத்தால் என்ன நடக்கிறது என்பதை சொல்லியிருப்பார்.
இருவர்: இந்திய அரசியலின் இரு பெரும் இமயங்களாக போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் கருணாநிதியின் வாழ்க்கையை இன்ஸ்பிரேஷனால் இந்தப் படத்தை இயக்கியிருப்பார் மணிரத்னம். இந்தக் கதையை திரைப்படமாக இயக்க நெஞ்சில் உரம் வேண்டும்.
கன்னத்தில் முத்தமிட்டால்: இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையை திரைமொழியில் வெளிப்படுத்த முன்றிருப்பார். இலங்கையில் பிறந்த பெண் குழந்தையை வளர்த்து வரும் இந்திய பெற்றோரின் ஊடாக கதை நகரும். ‘விடை கொடு எங்கள் நாடே’ பாடலில் இலங்கைத் தமிழர்கள் கண்ணீருடன் தங்கள் நாட்டிற்கு எப்படி விடை கொடுக்கிறார்கள் என நம் கண் முன்னே கடத்தியிருப்பார். வைரமுத்து இந்தப் பாடலை எழுதியிருந்தார்.
இதேபோல 'உயிரே', 'ராவணன்' முதலான படங்களிலும் நிஜத்தின் அடிப்படையில் திரைக்கதையாக அமைத்து அசத்தியிருப்பார்.
இது தவிர இடையிடையே கிளாசிக் ரக காதல் ரொமான்டிக் திரைப்படங்களையும் மணிரத்னம் இயக்கியுள்ளார். 'அலைபாயுதே', 'ஓ காதல் கண்மணி' முதலான படங்கள் அதற்கு உதாரணம். இதில் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ்வது குறித்து சொல்லியிருப்பார்.
தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் பிஸியாக இயங்கி வருகிறார் மணிரத்னம்.
- எல்லுச்சாமி கார்த்திக்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2TzUQAm



0 Comments