அடையாள தக்கவைப்பிற்குத் தானே இத்தனை மெனக்கெடல்களைச் செய்கிறான் மனிதன். தன்னை சிலையாக வடித்துக் கொள்வதில் துவங்கி, இன்று தினம் பத்து செல்ஃபி எடுத்து சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டுக் கொள்வது வரை மனிதனுக்கு தன் அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதில்தான் எத்தனை ஆசை. எத்தனை வெறி. ஆனால், காலம் அனைத்தையும் புறங்கையால் ஓரம் தள்ளிவிட்டு தகுதியானதை மட்டுமே தக்கவைத்து தனதாக்கிக் கொள்ளும். உண்மையில் நமக்கு பிறகு நம்மை மற்றவர்கள் நினைத்து என்னவாகப் போகிறது. இல்லை, மறந்து தான் என்னவாகப் போகிறது. ஒரு சொல்லாக வேணும் மிஞ்சிவிட வேண்டும் என போராடும் சராசரி மனிதர்களுக்கு மத்தியில் போகிற போக்கில் கல்வெட்டாகி விடுகிறார்கள் படைப்பாளிகள். அப்படியொரு கவிதையாக தன் வாழ்வை எழுதிக்கொண்ட மேற்கு வங்க இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் மறைந்த தினம் இன்று (மே 30). 20 ஆண்டுகள். 20 படங்கள். பல்வேறு சர்வதேச விருதுகள் என வெற்றியின் எஸ்கலேட்டரில் நிதானமாக பயணத்தவர் கோஷ்.
மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் 1963 ஆகஸ்ட் மாதம் 31’ஆம் நாள் பிறந்தவர் ரிதுபர்னோ கோஷ். இவரது பெற்றோரும் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான். தந்தை சுனில் ஓவியர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். பெங்காலில் புகழ் பெற்ற இயக்குநர் சத்யஜித்ரேவின் தீவிரமான ரசிகர் கோஷ். தனக்கு ஜித்ரே போல வரவேண்டும் என்பதே ஆசை எனச் சொல்வார். அதை சாத்தியப்படுத்தியும் காட்டினார். ஜித்ரேவைப் போலவே தனிமனித உணர்வுகளை அழகாக படம் பிடித்தார் கோஷ். உறவுகளின் முரணை அன்பை வாழ்வின் நிலையற்ற தன்மையை கோஷ் எடுத்துப் பேசும் பாணி தனி. தன் மானசீக குருவான சத்யஜித் ரேவைப் போலவே இவரும் நாவல்களை படமாக்குவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
துவக்க காலத்தில் விளம்பர நிறுவனமொன்றில் வசனம் எழுதும் பணியில் வேலை செய்தார் கோஷ். பிறகு விளம்பரப்பட இயக்குனராக உயர்ந்தார். இந்த அனுபவங்களைக் கொண்டு மெல்ல சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். 1994ம் ஆண்டு ‘ஹைரர் அங்தி’என்ற பெங்காலி திரைப்படம் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். இந்தப்படம் ‘ஸ்ரீ ஷெண்டு முகோபாத்யாய்’ என்ற வங்காள மொழி எழுத்தாளரின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து 20 ஆண்டுகள் வங்கள சினிமாவின் ஷட்டர் ஸ்பீட் கோஷின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இந்தி உலகின் உச்ச நடிகர்கள் பலரும் ரிதுபர்னோ கோஷின் அழைப்புக்காக காத்திருந்தனர். ஐஸ்வர்யா ராய், ரிதுபர்னோ கோஷின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டு விரும்பி நடித்த படம் ‘சோக்கர் பாலி’. அதன் பிறகு கோஷ் இயக்கத்தில் ‘ரெயின்கோட்’ என்ற படத்திலும் அவர் நடித்தார். ரவீந்திரநாத் தாகூரின் படைப்பான சோக்கர் பாலியை இயக்குவது என கோஷ் முடிவு செய்தபோது பலர் அதை வரவேற்றனர். சிலருக்கு பயமும் இருந்தது. ரபிந்திரநாத் தாகூரின் படைப்பை கோஷ் சரியாக படம் பிடித்துவிடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் கோஷ் தாகூரின் படைப்பில் இருந்த ஆன்மாவை சற்றும் குறைவின்றி திரையில் கடத்தி இருந்தார்.
சிறந்த பெங்காலி மொழிப்படம் என இப்படம் தேசிய விருதையும் பெற்றது. பிறகு இந்தி மற்றும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட இத்திரைப்படம் வசூலிலும் வென்றது. ரிதுபர்னோ கோஷின் சிறப்புகளில் இதுவும் ஒன்று. கமர்சியல் சினிமாக்களைப் போலவே இவரது படைப்புகள் வசூலிலும் வெல்லும் அதே நேரம் படைப்பின் சர்வதேச தரத்தில் சமரசமும் செய்து கொள்ளாது. ஐஸ்வர்யாராயைத் தொடர்ந்து ‘த லாஸ்ட் லியர்’ படத்தில் அமிதாப் பச்சனையும் இயக்கி இருப்பார் கோஷ். பச்சன் குடும்பத்தில் அனைவரையும் இயக்கிய இயக்குநர் என இவரைச் சொல்லலாம். பாலிவுட்டின் பல கலைஞர்கள் ஐஸ்வர்யாராய், அமிதாப் பச்சனைப் போல அவரது படத்தில் நடிக்க விரும்பி ஆசைப்பட்டு நடித்தனர்.
‘ஹைரர் அங்தி’யைத் தொடர்ந்து அவர் இயக்கிய இரண்டாவது சினிமா ‘உனிஸ் ஏப்ரல்’. இப்படத்திற்கு சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகள் கிடைத்தன. மனைவி ரெடி என்ற தமிழ் படத்தில் பாண்டியராஜனுக்கு ஜோடியாக நடித்திருந்த தேவஸ்ரீராய் இப்படத்தில் நடித்திருந்தார். தேவஸ்ரீராய்க்கு கிடைத்த முதல் தேசிய விருது அது.
மாற்று சினிமாவிற்கான வலிமையான தளத்தை உருவாக்கியவர்களில் கோஷ் குறிப்பிடத்தக்கவர். தோசர், தகான், உத்சப், ரெயின்கோட், கேலா, சன்கிளாஸ், அபோகோமென், அந்தர் மஹால், தி லாஸ்ட் லீயர் என இவர் இயக்கத்தில் உருவான படங்களாகட்டும் இவர் நடித்த 'மெமரீஸ் இன் மார்ச்' போன்ற திரைப்படங்களாகட்டும் எல்லாமே வழக்கமான சினிமா பாணியின் சுற்றுவட்டப் பாதைக்கு வெளியிலேயே பயணித்திருக்கும்.
தன்பாலின உறவை வெளிப்படையாக ஆதரித்த வெகுசிலரில் ரிதுபர்னோ கோஷும் ஒருவர். "நான் ஒரு தன்பாலின உறவு ஆதரவாளன். தன்பாலின உறவின்போதுதான், மனம் முழு திருப்தியடைகிறது, அதில்தான், உணர்ச்சிகள் சரியாக பிரதிபலிக்கின்றன’ என்று ஒரு நேர்காணலில் கோஷ் பேசினார். இந்த நேர்காணலுக்குப் பிறகு சராசரி சமுதாயம் இவரது படைப்புகளை ஒதுக்கிவிட்டு இவரது கருத்து குறித்தே பெரிதும் விவாதித்தது. அது அவருக்கு பெரிய மன உளைச்சளை உருவாக்கி மரணம் வரை தள்ளியது.
‘அரெக்ட்டி ப்ரேமர் கொல்போ’ என்ற படத்தில் தன்பாலின உறவாளராக நடிக்க ரிது பர்னோஷோஸ் மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அது அவரது உடல் நிலையை மேலும் மோசமாக்கியது. தன்பாலின உறவு தம்பதிகளை மையமாகக் கொண்டு உருவான மற்றுமொரு சினிமா ‘மெமரீஸ் இன் மார்ச்’. இந்த சினிமாவில் கோஷ் நடித்திருப்பார். இந்தியாவில் இந்திய திரைக்கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஆங்கில மொழிப்படம் இது.
வழக்கமாக மாற்று பாலியல் ஈர்ப்பு பற்றி பேசும் பல படங்கள் பிரசார பாணியில் இருக்கும்., அல்லது வெறுமனே உணச்சிகளைப் பேசுவதாக இருக்கும். ஆனால் ‘மெமரீஸ் இன் மார்ச்’ அதில் ரொம்பவே மாறுபட்டது. விபத்தில் இறந்த மகனது உடலை பெற்றுக் கொள்ள கொல்கத்தா வருகிறார் தாய் தீப்தி நோவல். தன் மகனுடன் பணிபுரியும் சக ஊழியர்களோடு பேசும்போது தான் தெரியவருகிறது தன் மகன் தன்பாலின ஈர்ப்பாளராக இருந்ததும் அவரது இணையாக ரிதுபர்னோ கோஷ் இருந்ததும். முதலில் அதிர்ச்சியடைந்தாலும். ‘சரி அது அவனது தேர்வாக இருந்திருக்கிறது. நான் என்ன சொல்ல...’ என அதனை மிக கடந்து போவார் தாய் தீப்தி நோவல். அந்த கதாப்பாத்திரம் தான் படத்தின் பலம். கோஷ் நிகழ்த்தும் மாயமும் அது தான். ஆனால் இந்த சினிமாவை இயக்கியவர் சஞ்சய் நாக்.
சிலரது படைப்புகளைத் தான் நாம் நமது நிஜ வாழ்வோடு நெருக்கமாக இணைத்துப் பார்க்க முடியும். ரிதுபர்னோ கோஷ் தான் உருவாக்கும் அனைத்து கதாபாத்திரங்களையும் அப்படியே வடிவமைத்திருப்பார். உண்மையைச் சொல்வதானால் இவரது கதாபாத்திரங்கள் பலவும் நம் இயல்பு வாழ்வில் அடிக்கடி எதிர்கொள்ளாத அல்லது சந்திக்காத சிறப்பு வகையினராகத் தான் இருப்பர் என்றாலும் அவர்களை நாம் ஏற்றுக் கொள்ளும் படியும் நம்மாள் மறுக்க முடியாதபடியும் நம்முள் கடத்திவிடுவார் கோஷ் அது தான் அவர் திரையில் செய்யும் மாயம். அதே நேரம் நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கும் ஏதோ ஒரு சம்பவத்தோடு இவரது கதைகளுக்கு தொடர்பு இருக்கும் ‘தஹான்’ திரைப்படம் அந்த வகை தான்.
தேசிய விருது இயக்குநர் என்றே ஊடகங்கள் இவரை குறிப்பிடும். இருபதே வருடங்கள் இருபது படங்கள் தான் என்றாலும் இவரது பங்களிப்புள்ள படம் நிச்சயம் ஏதோ ஒரு பிரிவின் கீழ் தேசிய விருதைப் பெற்றுவிடும்.
சினிமா வாழ்க்கையப் போல ரிது பர்னோ கோஷின் தனிப்பட்ட வாழ்க்கை அத்தனை வெற்றிகரமாக அமையவில்லை. இறுதிகாலத்தில் உடல் நலிவுற்று மிகவும் தனிமைப்பட்டிருந்த அவர் தனது 49-வது வயதில் மே 30 2013’ல் தன் வீட்டில் மாரடைப்பால் இறந்து கிடந்தார். அமிதாப் பச்சனும் இதனை தனது தனிப்பட்ட இழப்பாக நினைத்து அழுதார். இந்திய திரையுலகமே கோஷின் எதிர்பாராத மரணத்தால் கலங்கி நின்றது. ரிது பர்னோ கோஷ் மறைந்தாலும் அவரது படைப்புகள் எப்போதும் புதியவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
- சத்யா சுப்ரமணி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3i22mho
0 Comments