தமிழ்த் திரையுலகில் ஒளிப்பதிவாளராக திரை வாழ்க்கையைத் தொடங்கி இயக்குநராகத் தடம் பதித்த கே.வி.ஆனந்தின் திரையுலக பயணத்திலிருந்து சில துளிகள்.
குமார் வெங்கடேசன் ஆனந்த் என்ற இயற்பெயரை கொண்ட கே.வி.ஆனந்த், ஒளிப்பதிவாளராக திரை வாழ்க்கையைத் தொடங்கி இயக்குநராகத் தடம் பதித்தவர்களில் முக்கியமானவர். 2005-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘கனாக் கண்டேன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கே.வி.ஆனந்த். அவரது படைப்புகளான கோ, அயன், அநேகன், மாற்றான், கவண், காப்பான் போன்ற படங்கள் வணிகரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றப் படைப்புகள் ஆகும். குறிப்பாக ‘அயன்’, ‘கோ’ ஆகிய இரு திரைப்படங்கள் மூலம் சினிமா ரசிகர்களிடையே சிறந்த இயக்குனராகப் பெயர் பெற்றார் கே.வி.ஆனந்த்.
1995-ஆம் ஆண்டு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படம் 'தென்மாவின் கொம்பத்து' என்ற மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது பெற்றார். தமிழில் முதன்முதலில் காதல் தேசம் என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். பின்னர், நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ், செல்லமே ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இயக்குனர் ஷங்கர், நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரேயா கூட்டணியில் வெளியான 'சிவாஜி' திரைப்படத்திற்காக சிறந்த தென்னிந்திய ஒளிப்பதிவாளருக்கான ஃபிலிம்பேர் விருதை கே.வி.ஆனந்த் தட்டிச்சென்றார்.
கடைசியாக, 2019-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘காப்பான்’ படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் மாரடைப்பால் நடிகர் விவேக் உயிரிழந்த சோகம் தணிவதற்குள், கே.வி.ஆனந்தின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரைத்துரையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3aOpThs
0 Comments