Ad Code

Responsive Advertisement

ஆஸ்கர் வென்ற 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' இயக்குநருக்கு தமிழக முதல்வர் ஊக்கத்தொகை!

ஆஸ்கார் விருது பெற்ற 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்-க்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகையாக ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துமுடிந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ஆவண திரைப்பட பிரிவில், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது. இந்தப்படம், நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் தாயை பிரிந்த இரண்டு குட்டி யானைகளுக்கும், அவற்றின் பராமரிப்பாளர்களான காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதிக்கும் இடையிலான பிணைப்பை சித்தரித்து எடுக்கப்பட்டிருந்தது.

நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை உதகையைச் சேர்ந்த பெண்ணான கார்த்திகி கொன்சால்வ்ஸ் இயக்கியிருந்தார். ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்திய குறும்படம் என்ற சாதனையை 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' படைத்திருந்தது. ஆஸ்கர் விருதை வென்றபின், சென்னைக்கு வந்த இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆஸ்கர் விருதை அவரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊக்கத்தொகையாக ஒரு கோடி ரூபாயையும் வழங்கினார். மேலும், ‘முகம்தெரியாத பலரின் உழைப்பைத் தம் படைப்பால் உலகறியச் செய்த இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்-க்குப் பாராட்டு’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 15-ம் தேதி, ஆஸ்கார் விருது பெற்ற 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப் படத்தில் இடம் பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதியர்களை சென்னை தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து அங்கு அவர்களை பாராட்டி, தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை இருவருக்கும் வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/EPlDGt4

Post a Comment

0 Comments