பெண்களுக்கான பிரச்னைகளையும் தாண்டி சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கின்ற பெண்கள் அநேகம் இருக்கத்தான் செய்கிறார்கள். சமூக செயல்பாடுகளில் ஆண்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் எத்தனையோ பெண்கள் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி குரலற்றவர்களின் குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கும் சில பெண்கள் குறித்து இந்த மகளிர் தினத்தில் பார்த்து வருகிறோம்.
உலக மகளிர் தினத்தில் ஒவ்வொரு துறையிலும் சாதித்த பெண்களின் வரிசையில் கலைத்துறையில் முன்னேறி வரும் சமூக செயற்பாட்டாளர் லாவண்யா வேணுகோபால் பற்றித் தெரிந்துக் கொள்ளலாம். அழிந்து வரும் நாடகத்துறையை முன்னெடுத்து செல்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியான நாடகத்துறையில் தான் நடிக்கும் கதாபாத்திரங்களில் அந்த கதாபாத்திரமாகவே மாறி, நடித்து மக்களிடத்தில் பெயர் பெற்றவர்களின் வரிசையில் ”லாவண்யா வேணுகோபாலும்” ஒருவர்.
லாவண்யா வேணுகோபால் (நாட்டிய மற்றும் மேடை நாடக கலைஞர்)
இவர் பரதநாட்டிய கலைஞர். புகழ்பெற்ற நாட்டிய மேதைகள் வி.பி.தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன் அவர்களிடம் பரதநாட்டியம் பயின்றவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா முன்னிலையில் பரதத்தை அரங்கேற்றி இருக்கிறார். நாட்டியகலைஞரான இவர் நாடகத்தின் மீது அதீத ஈடுபாடு கொண்டதால், நாடகங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். இவரின் முதல் நாடகம் ”மன்னிக்கவேண்டுகிறேன்.”
இவரின் இயல்பான நடிப்பை பாராட்டி , ”இப்படிக்கு நந்தினி” என்ற நாடகத்திற்காக மயிலாப்பூர் அகடமியால் பாராட்டை பெற்றவர். நாடக உலகின் ஜாம்பவான் கலைமாமணி. திரு.காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் குழுவில் இணைந்து பல நாடகங்களில் நடித்து புகழின் உச்சியைத் தொட்டவர். கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் வழங்கிய சிறந்த நடிகைக்கான விருதினை இருமுறை பெற்றவர். திருமதி தாரணி கோமால் அவர்கள் எழுதிய பெண்மையின் நவரசங்கள் என்ற நாடகம் இவரின் தமிழ் உச்சரிப்பால் பிரபலமாகப் பேசப்பட்டது.
ஆச்சி மனோரமா நடித்து புகழ்பெற்ற கதாபாத்திரம் கோமல் அவர்களின் என் வீடு என் கணவன், என் குழந்தை என்ற நாடகம் மீண்டும் மேடை ஏற்றப்பட்டப்பொழுது அதில் ஆச்சியின் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்தவர். இவரின் திறமைகள் இன்று உலகளவில் பேசப்பட்டு வருகிறது. இவருக்கு மகளிர்தின வாழ்த்துக்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/AI2n6Ek
0 Comments