Ad Code

Responsive Advertisement

இன்னுமா இதெல்லாம் காமெடின்னு நம்பறீங்க! சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் விமர்சனம்

சிங்கிள் பையன் ஒருவருக்கு ஸ்மார்ட்ஃபோனில் நல்லதொரு செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இணை கிடைத்தால் என்ன நடக்கும் என்பது தான் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்’ படத்தின் கதை.

உணவு டெலிவரி செயலியின் மூலம் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார் சிவா. அவருக்கு எப்படியோ விஞ்ஞானி ஷாரா கண்டுபிடித்திருக்கும் ஸ்மார்ட்ஃபோன் கைக்கு கிடைத்துவிடுகிறது. அந்த ஸ்மார்ட்ஃபோனின் உதவியுடன் எல்லா விதமான ஸ்மார்ட் வேலைகளையும் செய்து ஓவர்நைட்டில் ஒபாமா அளவுக்கு பாப்புலராகிறார் சிவா. அந்த மொபைலின் முதலீட்டளாரான பக்ஸ் ஒரு பக்கம் மொபைலைத் தேடுகிறார். மொபைலைக் களவாட KPY பாலா ஒரு பக்கம் முயல்கிறார்.

இதற்கிடையே நல்லது நடந்தா மொத்தமா நடக்கும் என்பதாக சிங்கிள் சிவாவுக்கு ஜோடியும் கிடைத்துவிடுகிறது. இதுவரை எல்லாம் நல்லதாய் போய்க்கொண்டு இருக்க, 2.0 ரெட் சிப் பொருத்தப்பட்ட எந்திரனாக மாறிவிடுகிறார் ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் சிம்ரன். சிம்ரன் ஏன் கோபம் அடைந்தார், அதை எப்படி சிவா சமாளித்தார் என்பதுதான் மீதிக்கதை.

image

சிங்கிள் ஷங்கராக சிவா. வழக்கம் போல அவர் எப்படிப் பேசுவாரோ, அப்படியே தான் இந்த படத்திலும் பேசியிருக்கிறார். அது க்ளீஷே, டெம்ப்ளேட் என எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். ஆனாலும் சிரிக்க வைத்துவிடுகிறார் மனிதர். படத்தில் சிவாவுக்கு அடுத்து நம்மை ஈர்ப்பது மேகா ஆகாஷின் நடிப்பு. ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனாக செயற்கை நுண்ணறிவு செயலியின் முகமாக மிளிர்கிறார் மேகா ஆகாஷ். 2.0, 3.0 வித்தியாச கெட்டப் க்யூட் ரகம்.

சிவாவுக்கு பக்கபலமாக KPY பாலா, ஷாரா, பக்ஸ், பாடகர் மனோ, மா.கா.பா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன் என அரை டஜன் காமெடி நடிகர்களை கோதாவுக்குள் இறக்கியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ஷா. ஆனால் அது சுத்தமாய் செட் ஆகவில்லை. சிவா மட்டும் தான் ஓரளவுக்கு கரையேறுகிறார். மற்றவர்கள் மொத்தமாய் கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க பாஸ் ரகம் தான். பக்ஸை வடமாநில சேட்டு கதாபாத்திரம் போல ஜுனூன் தமிழ் எல்லாம் பேச வைத்திருக்கிறார்கள்.

image

இன்னுமா பாஸ் இதெல்லாம் காமெடின்னு நம்பறீங்க. ஷாராவுக்கு ஒருபடி மேலே போய், கோமாவுக்குப் பின் ஊளையிடும் வியாதி. யப்பா டேய். அதிலும் ஸ்மார்ட்ஃபோன் யுகத்திலும் இன்னும் பெண்கள் ஏமாற்றுகிறார்கள்; ஆண்கள் பாவம் 'இந்த பொம்பளைகளே இப்படித்தான்' பாணியில் பாருங்க ப்ரோ காமெடி பண்றோம், சிரிங்க ப்ளீஸ் என்பது போல் நகரும் பின்பாதி நம்மை கொஞ்சம் அதிகமாகவே சோதித்துவிடுகிறது.

ஷிரினிக் விஸ்வநாதனின் வசனங்களில் டெலிவரி பசங்க படும் பாடுகளைச் சொல்லும் இடம் செம்ம. லியோன் ஜேம்ஸ் இசையில் சோறு தான் முக்கியம் மட்டும் தேறுகிறது. காமெடி படத்துக்கேற்ப இறுதியில் வரும் லோ பட்ஜெட் கிராபிக்ஸ் குழந்தைகள் ரசிக்கும் அளவில் இருக்கிறது.

சிவாவும் சிம்ரனும் மட்டுமே இந்த படத்தில் க்ளிக் அடிக்கிறார்கள். மற்றவை எல்லாமே ம்ஹூம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/FS13sD4

Post a Comment

0 Comments