துணிவு படம் வெளியாவதற்கு முன்பு வரை பேட்டிகள், நேர்காணல்கள் தலை காட்டாமல் இருந்த அ.வினோத், துணிவு படத்திற்கு பிறகு பல நேர்காணல்களில் அவரை காண முடிந்தது. குறிப்பாக தன்னுடைய வாழ்க்கை முறை, சமூக பொருளாதாரம் என பல பரிமாணங்களை பற்றி பேசியதும் சினிமா ரசிகர்களை மிகவும் ஈர்த்திருந்தது.
இந்த நிலையில், வாரிசு, துணிவு படங்களுக்கு கொடுத்த வரவேற்பை கடைசி விவசாயி படத்துக்கும் கொடுத்திருக்க வேண்டும் என இயக்குநர் அ.வினோத் பேசியிருந்ததுதான் தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அஜித்தின் துணிவும், விஜய்யின் வாரிசு படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ம் தேதி திரையில் வெளியிடப்பட்டது. இரு படங்களும் வெளியாவதற்கு முன்பும், வெளியாகி ஒரு மாதம் ஆகியும் இன்னும் அதன் மீதான ஜோரில் இருந்து ரசிகர்கள் வெளியே வந்தபாடில்லை.
இன்றளவும் வாரிசு, துணிவு படத்தின் கலெக்ஷன்கள் என்னென்ன உள்ளிட்ட விவரங்களை பகிர்ந்து ட்ரெண்டிங்கிலேயே இருக்கச் செய்து வருகிறார்கள் இருதரப்பு ரசிகர்களும். இதில் துணிவு படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும் வெளியாகியிருப்பதால் அதையும் சேர்த்து அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
இப்படி இருக்கையில், துணிவு படத்தின் இயக்குநர் அ.வினோத் தனியார் பத்திரிக்கை குழும நம்பிக்கை விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்றிருந்தார். அப்போது விழா மேடையில் அவர் பேசியதுதான் தற்போது ரசிகர்களை பெருவாரியாக கவர்ந்திருக்கிறது.
அதாவது, “பிசினஸ் இருக்கும் இடத்தில் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. வாரிசு, துணிவு படங்களுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு கடைசி விவசாயி படத்திற்கும் கொடுத்திருக்க வேண்டும்” என பேசியிருக்கிறார்.
அ.வினோத்தின் இந்த பேச்சு குறித்து அறிந்த ரசிகர்கள், நெட்டிசன்கள் உள்ளிட்ட பலரும், “தன் படத்தை குறையாக பேசினாலும் ஏற்றுக் கொள்கிறார், பிறரது படத்துக்கு கொடுக்காத வரவேற்பை பற்றியும் வருத்தப்படுகிறாரே.. என்னா மனுஷன்யா” என்றெல்லாம் பதிவிட்டிருக்கிறார்கள்.
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், இன்று (பிப்.,11) கடைசி விவசாயி படம் வெளியாகி ஓராண்டாகிறது. ஏற்கெனவே படத்தின் முதலாமாண்டு வெளியீட்டு குறித்த பதிவுகள் பகிரப்பட்டு வரும் வேளையில் அ.வினோத் பேசியதும் பெரிதளவில் கவனத்தை பெற்று வருகிறது.
முன்னதாக இயக்குநரும், நடிகருமான மிஷ்கினும் கடைசி விவசாயி படம் குறித்து அற்புதமாக சிலாகித்து அண்மையில் பேசியிருந்ததும் இதனூடே வைரலாகி வருகிறது. அதில், “உலகின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக கடைசி விவசாயி படத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. நாமெல்லாம் வெட்கி தலைகுனிய வேண்டும்.
500, 400 கோடி கலெக்ஷன் என ஓடும் நேரத்தில் கடைசி விவசாயி படத்துக்கு 30 கோடி ரூபாய்கூட நாம் கொடுக்கவில்லை. ஆனால் ஒரு நல்ல படைப்பாளி நமக்கும் நம் குழந்தைகளுக்கும் எப்படி வாழவேண்டும் என சொல்லிக் கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட படத்தை அது வெளியான சமயத்தில் தியேட்டரில் நாம் பார்க்கவில்லை. இதை அனைவரும் உணர வேண்டும்.” என மிஷ்கின் பேசியிருந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/dWVgXuq
0 Comments