Ad Code

Responsive Advertisement

இசை படைப்புகளுக்கான சேவை வரி: ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி!

இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை எதிர்த்து, பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளுக்கு, 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என, சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. ஆணையர் கடந்த 2019ஆம் ஆண்டு அவருக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கடந்த 2020ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

image

ஏஆர் ரஹ்மானின் அந்த மனுவில், “இசை படைப்புகளின் காப்புரிமையானது பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான். அதற்கு என்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம்” எனவும், இந்த உத்தரவானது தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் ஜி.எஸ்.டி. ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், “வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜி.எஸ்.டி. துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் கூறப்பட்டிருந்தது.

image

இதேபோல, 1.84 கோடி ரூபாய் சேவை வரி செலுத்த கூறி, ஜி.எஸ்.டி ஆணையர் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரண்டு வழக்குகளையும் விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனுதாக்கலானது விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஜி.எஸ்.டி. ஆணையரின் உத்தரவை எதிர்த்து ஜி.எஸ்.டி. மேல் முறையீட்டு அதிகாரியிடம், நான்கு வாரங்களில் மேல் முறையீடு செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டார்.

image

ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அனிதா சுமந்த், ஜி.எஸ்.டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி அவருக்கு உத்தரவிட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/wdCnAaH

Post a Comment

0 Comments