ஆயிஷா நூல் தன் வாழ்வில் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கத்தை பற்றி பேசியுள்ளார் இயக்குநர் சமுத்திரகனி.
ஆயிஷா நூலின் 2 லட்சமாவது பிரதி புத்தக வெளியீட்டு விழா தேனாம்பேட்டையில் உள்ள அரும்பு நூல் அரங்கத்தில் இது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி, தோழர் ஜி.ஆர், எழுத்தாளர் பவா செல்லதுரை உட்பட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர். ஆயிஷா நூலின் 2 லட்சமாவது பிரதியை இயக்குநர் சமுத்திரகனி வெளியிட, அந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மானசி அதை பெற்றுக்கொண்டார்.
விழாவின்போது, ஜி.ஆர் பேசுகையில், “ஒரு பெண்ணாக இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர் மேடம் கியூரி மட்டுமே. அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக ஒரு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது, ஹரிஷ் ஸ்பீச்சேர் எழுதிய `அங்கிள் டாம் கேபின்’ என்ற நூல். இது கறுப்பின மக்களின் விடுதலைக்காக பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. ரூபி பிரிட்ஜ் என்னும் குழந்தை, கறுப்பின மக்களுக்குகான பள்ளியில் படிக்க மறுத்து வெள்ளையர்கள் பயிலும் பள்ளியில் போராடி படித்துத் பட்டம் பெற்றது. இப்படி கறுப்பின மக்களுக்கு எதிரான போரட்டத்தில் குழந்தைகளின் பங்கு பெரியது. அதே போல் இந்த ஆயிஷா நூல் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிஷாவிற்கு முன் மற்றும் பின் என்ற நிலையை உருவாக்கி உள்ளது. இந்த புத்தகத்தில் மந்திர சக்தி உள்ளது. ஆசிரியர்கள் பயிற்று முறையில் பல்வேறு மாற்றத்தை இது ஏற்படுத்தும்” என்றார்.
தொடர்ந்து இயக்குநர் சமுத்திரகனி பேசுகையில், “ஆயிஷா நூலை திரும்ப திரும்ப 3 முறை படித்தேன். அது எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பல நினைவுகளை சிந்தைக்கு கொண்டுவந்தது. ராஜேந்திரன் என்னும் என் பள்ளி தோழன் வகுப்பறையில் அதிக கேள்வி கேட்பான். விடை தெரியாமல் ஆசிரியர்களும் அவனை `உட்காரு’ என்பார்கள். உடனே அனைத்து மாணவர்களும் ஆசிரியரை பார்த்து சிரிப்பார்கள். இதனால் கோபமுற்று அவனை அடிப்பார் எங்கள் ஆசிரியர். அவன் தற்போது ராஜபாளையத்தில் ஏதோ ஓர் இடத்தில் மூக்குத்தி செய்து வருகிறான். அன்று ஆசிரியர்கள் அவனை ஊக்கபடுத்தி இருந்தால் பெரிய நிலைமைக்கு வந்திருப்பான். என் படங்களான சாட்டை, அப்பா போன்றவைக்கெல்லாம் காரணம் ஆயிஷா போன்ற மாணவர்கள் தான். தைரிய லக்ஷ்மி என்ற பெண் தற்கொலை செய்து கொண்டது என்னை மிகவும் உலுக்கியது. இங்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எத்தனை விதமாக உள்ளனர் என்று யோசித்தேன். அப்போது தான் அப்பா படம் எடுத்தேன்.
இங்கு ஆசிரியர்கள் இருவிதமாக இருக்கிறார்கள். படித்த ஆசிரியர்கள், படித்துக்கொண்டு இருக்க கூடிய ஆசிரியர்கள். மாணவர்களும் 4 விதம் உள்ளனர். அவற்றை குறித்து எடுக்கப்பட்டது தான் சாட்டை திரைப்படம். அப்படமும் பெரும் வெற்றியை பெற்று தந்தது. ஆசிரியர்கள் திரும்ப திரும்ப கற்க வேண்டும். மாற்றம் வரவேண்டும். ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களிடையே சக மாணவனாக பழக வேண்டும். ஆங்கிலம் என்றால் எனக்கு பயம். என்னுடைய ஆசிரியர் ஒருநாள் வந்து, `நான் எழுதின கதையை வாசி’ என்றார். வாசித்து முடித்ததும் கைதட்டுங்கள் என்று பிற மாணவர்களிடம் சொன்னார். அப்போது தான் எனக்கு நம்பிக்கையே வந்தது.
இப்போது நான் இங்கு இயக்குனராக உள்ளேன் என்றால், அந்த ஊக்கமே அதற்கான காரணம். கல்லூரியிலும் எனக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தார்கள். அவர்கள் வழி நடத்தியதால் மட்டுமே நான் பட்டம் பெற்றேன். இந்த உலகத்தில் அநேக நல்ல ஆசிரியர்கள் உள்ளனர். பிற ஆசிரியர்களும் அப்படியே இருக்க வேண்டுமென நினைக்கிறேன். நம் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று நம்புவோம்” என்றார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/9pXw5sZ
0 Comments