இந்தியாவில் இருந்து ஜப்பானில் வெளியாகும் படங்களில், ரஜினிகாந்தின் ‘முத்து’ திரைப்படத்தின் வசூலை, ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் இதுவரை முறியடிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘பாகுபலி’ பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ராஜமௌலி இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’. பான் இந்தியா படமாக உருவாகிய இந்தப் படத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண், ஆலியா பட், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான கற்பனைக் கதைதான் ‘ரத்தம் ரணம் ரௌத்தரம்’ எனப்படும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 5 மொழிகளில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம், 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியது. இதற்கு முன்னதாக ராஜமௌலியின் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘பாகுபலி : தி கன்குளூஷன்’ திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த நிலையில், இந்தப் படமும் அந்தச் சாதனையை படைத்திருந்தது.
உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, இந்தியாவில் இருந்து தேர்வாகாவிட்டாலும், அடுத்தாண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு 14 பிரிவுகளில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் நேரடியாக போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்தப் படம் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி ஜப்பானில் வெளியிடப்பட்டது. இதற்காக படக்குழுவும் அங்கு சென்று சுமார் 5 கோடி ரூபாய் வரை செலவு செய்து புரமோஷன் பணிகளில் ஈடுப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஜப்பானில் இந்தியப் படங்களுக்கு என்று தனி வரவேற்பு இருக்கிறது. இதனால் தான் ரஜினியின் நடிப்பில், கே.எஸ். ரவிக்குமாரின் இயக்கத்தில், கடந்த 1995-ம் ஆண்டு வெளியான ‘முத்து’ திரைப்படம் அங்கு மாபெரும் வரவேற்பு பெற்றது. சொல்லப்போனால், சீனா மற்றும் ஜப்பானில் இருந்து இங்கே வந்து ரஜினியின் முதல் நாள் முதல் காட்சி (FDFS) பார்க்கும் ரசிகர்களும் உண்டு. அந்தக் காலத்திலேயே அதாவது 27 ஆண்டுகளுக்கு முன்பே ‘முத்து’ படம் அங்கு சுமார் 23.50 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்தியாவில் இருந்து ஜப்பானில் வெளியானப் படங்களில் ரஜினியின் ‘முத்து’ படம் தான் முதலிடத்தில் இடம் பிடித்து சாதனை தக்கவைத்துக் கொண்டு வருகிறது.
இந்நிலையில், ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், இந்த சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு படம் வெளியாகி கிட்டத்தட்ட 50 நாட்களை நெருங்கியுள்ள நிலையில், இதுவரை 20 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. எனினும் ராஜமௌலியின் முந்தையப் படமான ‘பாகுபலி 2’ திரைப்படம் அங்கு 100 நாட்கள் ஓடி, 17 கோடி ரூபாய் வசூலித்ததை, ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் முறியடித்துள்ளது. மேலும் பிரபாஸின் ‘சாஹோ’ படத்தின் வசூலான 12 கோடி ரூபாய் சாதனையையும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் தாண்டியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/1gxijnc
0 Comments