Ad Code

Responsive Advertisement

வாழ்வின் மீது ஏதோ ஒரு நம்பிக்கையை நிச்சயம் விதைக்கும்! - “நித்தம் ஒரு வானம்” திரைப்பார்வை

வாழ்வின் மீது விரக்தி கொண்ட இளைஞனுக்கு, ஒரு பயணமும், சந்திக்கும் மனிதர்களும், உடன் வரும் துணையும் வாழ்க்கையைப் பற்றி என்ன புரிதலைக் கொடுக்க முடியும் என்பதே ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் ஒன்லைன்.

அர்ஜூன் (அஷோக் செல்வன்) எங்கும் சுத்தம், எதிலும் டிசிப்ளின் என வாழும் இளைஞர். யாருடனும் சிரித்துப் பேசக் கூட தயங்கும் அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடாகிறது. ஆனால், சில காரணங்களால் அந்த திருமணம் நின்றுவிட, வாழ்கையின் மீதே விரக்தியாகிறார். அந்த சமயத்தில் அவர் கேட்கும் இரண்டு காதல் ஜோடிகளின் கதைகள், அவரைக் கொல்கத்தா நோக்கியும், சண்டிகர் நோக்கியும் பயணிக்க வைக்கிறது. இந்தப் பயணத்தில் அவர் என்ன தெரிந்து கொள்கிறார், அது வாழ்வின் மீதான அவரது பார்வையை மாற்றியதா இல்லையா? என்பதெல்லாம் தான் மீதிக் கதை.

image

மிக எளிமையான ஒரு கதையை சொல்லி, அதன் மூலம் வாழ்வின் மீது நம்பிக்கை விதைக்கும் இயக்குநர் ரா.கார்த்திக்கின் முயற்சி பாராட்டத்தக்கது. அதை மிக இயல்பான ஒரு படமாகவும், சுவாரஸ்யமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர். மூன்று விதமான கதாபாத்திரங்களில் அசோக் செல்வன் கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். எதிலும் நாட்டமில்லாமல் விலகியே இருக்கும் அர்ஜூன், முரட்டுத்தனமான மதுரை இளைஞன் வீரா, குறும்பும் அப்பாவித்தனமுமாக கோவை இளைஞன் பிரபா என மூன்று கதாபாத்திரங்களையும் வித்தியாசப்படுத்தி நடித்திருக்கிறார். சுபா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரித்து வர்மாவுக்கு அடுத்து என்ன நடந்தது என தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் பயணிக்கும் வேடம். அதை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மீனாட்சியாக வரும் சிவாத்மிகா குறைந்த காட்சிகளே வந்தாலும், நிறைவான நடிப்பைக் கொடுக்கிறார்.

சிவாத்மிகாவை விடவும் குறைவான நேரமே வரும் ஷிவதாவின் நடிப்பு அட்டகாசம். மொத்தப் படத்திலும் நம்மை அதிகமாகக் கவர்வது மதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளிதான். அப்பாவுடன் மல்லுகட்டி வீம்பாக திருமணத்தை நிறுத்த திட்டமிடுவது, அஷோக் செல்வனை அதட்டி மிரட்டுவது, உண்மை தெரிந்த பிறகும் மிக குறும்பாக அதை எதிர்கொள்வது என அசத்துகிறார்.

image

எந்தக் கதையைப் படித்தாலும் அதில் ஹீரோவாக தன்னை உருவகம் செய்து கொள்வான் அர்ஜூன் என வடிவமைத்ததும், அந்த உத்தியை வைத்து கதை சொல்வதும் படத்தை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும் ஐடியா. திரைக்கதையாகவும் மூன்று கதைகளையும் அடுத்து என்ன என்ற ஆர்வத்தை தூண்டும் படி அமையும் இடைவேளை பார்வையாளர்களான நமக்கும் ஒரு ஆர்வத்தைத் தூண்டுகிறது. நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும், அதைக் குழப்பாமலும், சோதிக்காமலும் சொன்ன விதம் அருமை. அடுத்தபடியாக நம்மைக் கவர்வது விது ஐயனாவின் ஒளிப்பதிவு. மூன்று கதைக் களங்களுக்கு தகுந்தபடி காட்சிபடுத்தியது, அதோடு சேர்த்து ஒரு ரோட் மூவிக்கான உணர்வையும் ஒளிப்பதிவில் கடத்தியிருக்கிறார். தரண்குமாரின் பின்னணி இசையும் படத்தின் எமோஷன்களை அழகாக அடிக்கோடிட்டு காட்டுகிறார். கோபி சுந்தர் இசையில் பாடல்கள் பெரிய ஏமாற்றம்.

image

படத்தின் சில சிக்கல்கள் எனப் பார்த்தால், உணர்வு ரீதியாக கடத்தப்பட வேண்டிய பல விஷயங்களை வசனங்கள் மூலம் திணிப்பாக படத்தில் இடம்பெறச் செய்திருப்பது. இந்த படமே ஒரு இளைஞனின் மனமாற்றத்தை பற்றியது. ஆனால் அது பார்வையாளர்களுக்கு வெறுமனே வசனங்கள் மூலமாக மட்டும் சொல்லப்படுவதால், பெரிய தாக்கம் எதுவும் ஏற்படவில்லை. வீரா - மீனாட்சி மற்றும் பிரபா - மதி, இவர்களின் கதையில் நடக்கும் ஒரு முக்கியத் திருப்பமும் ஷாக்கிங் எலமெண்ட்டாக மட்டுமே இருக்கிறதே தவிர, கதையின் இயற்கையான போக்கில் நடப்பது போல தோன்றவில்லை. அபிராமி கதாபாத்திரம் ஒரு மனநல மருத்துவர், மகப்பேறு மருத்துவர், சிறுகதை எழுத்தாளர் எனப் பல முகங்களுடன் காட்டப்படுகிறது, இந்தக் கதையில் அவர் யார் என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவுடன் சொல்லியிருக்கலாம். அதே போல் OCD பிரச்சினையை ஏனோ அவர் இன்ட்ரோவெர்ட்டுங்க அதுதான் என்பதாக டீல் செய்வதெல்லாம் காமெடி.

இப்படியான சில குறைகள் இருந்தாலும், படம் முடியும் போது ஒரு ப்ளசண்டான உணர்வை தர தவறவில்லை. வாழ்வின் மீது ஏதோ ஒரு நம்பிக்கை விதைக்கத்தான் செய்கிறது. அதற்காகவே கண்டிப்பாக ஒரு விசிட் அடிக்கலாம்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/4XDi7tn

Post a Comment

0 Comments