திரைப்பட படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆணையர் நேரில் சென்று ஆய்வுசெய்து சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டபோது, காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் டம்மி ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்குரிய நடைமுறைகளை வகுக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி, தென் இந்திய திரைப்பட டம்மி எபக்ட்ஸ் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மும்பை போலீசார், டம்மி ஆயுதங்களுக்கு எண்ணிட்டு, உரிமம் வழங்கும் நடைமுறையை வகுத்துள்ளதாகவும், அதேபோல தமிழகத்தில் டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்குவதுடன், தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டுமென உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் வைத்திருக்க கூடிய அனைத்து டம்மி ஆயுதங்களையும் காண்பிக்க வேண்டும் எனவும், அதனைப் பரிசோதனை செய்தப்பிறகு அதற்கான அனுமதி சான்றிதழ் வழங்குவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மனுதாரர்கள் வைத்திருக்கும் டம்மி ஆயுதங்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால், சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆணையர் மனுதாரர்கள் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வுநடத்தி, அதன்பிறகு சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு, இந்த வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/pfZJqPX
0 Comments