கார்த்தியின் ‘சர்தார்’, சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ ஆகியப் படங்கள் நேற்று வெளியான நிலையில், இரண்டு படங்களின் முதல் வசூல் நிலவரம் குறித்து வெளியாகியுள்ளது.
தீபாவளி தினத்தை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக நிலையில், வளர்ந்து வரும் நடிகர்களான கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயனின் படங்கள் நேற்று ஒரேநாளில் வெளியாகின. இதில் சிவகார்த்திகேயனின் படம் அதிகாலையிலேயே வெளியாகிய நிலையில், கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படம் முதல் காட்சி 8 மணிக்கு தான் வெளியானது.
‘டாக்டர்’, ‘டான்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை அடுத்தடுத்து கொடுத்திருந்ததால், சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் காமெடி மற்றும் காதல் கதையம்சம் கொண்டு உருவான இந்தப் படம், பார்வையாளர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அமெரிக்காவில் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல் ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய வெற்றி திரைப்படங்களை கொடுத்த கார்த்தியின், அடுத்தப் படமாக ‘சர்தார்’ நேற்று வெளியானது. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் இந்தப் படம், முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் சுமார் 6 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. உளவாளி மற்றும் தண்ணீர் பிரச்சனையை மையமாக வைத்து பி.எஸ். மித்ரன் இயக்கிய இந்தப் படம் 45 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருந்தது. நல்ல வரவேற்பு கிடைத்தாலும் முதல் நாள் வசூலில் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தை விட, கார்த்தியின் ‘சர்தார்’ படம் குறைவான வசூலையே இந்தப் படம் ஈட்டியுள்ளது. எனினும் தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் வரும் நாட்களில் அதிக வசூல் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/149560/Karthi-s-Sardar-and-sivakarthikeyan-s-prince-first-day-collection-Status.html
0 Comments