தேசத் துரோகி அப்பா, அந்தக் கறையை துடைக்க நினைக்கும் மகன். இதற்கு இடையே நாட்டின் தண்ணீர் பிரச்னை, அரசாங்கத்தின் உளவாளி விஷயங்களையும் என்டர்டெயின்மென்டுடன் கலந்து கொடுத்தால், அதுதான் ‘சர்தார்’.
ஊரில் என்ன பிரச்னை நடந்தாலும் அதை பயன்படுத்தி தனக்கு சாதகமாக்கி பப்ளிசிட்டி தேடும் இன்ஸ்பெக்டர் விஜய் பிரகாஷ் (கார்த்தி). அப்பாவால் தன் குடும்பத்தின் மேல் விழுந்த தேசத்துரோகி கறையை அழிக்கப் போராடுகிறார். இந்த சமயத்தில் எதேச்சையாக சமூகப் போராளி லைலாவின் ஒரு வழக்கு அவர் கைக்கு வருகிறது. அதை விசாரிக்க துவங்கும்போது தண்ணீரை வியாபாரமாக மாற்ற நினைக்கும் மஹாராஜ் (சங்க்கி பாண்டே) பற்றியும், இந்திய அரசாங்கத்துக்காக உளவாளியாக பணியாற்றிய தன் தந்தை பற்றியும் பல விஷயங்கள் தெரிய வருகிறது. அதன்பின் என்ன ஆனது, கார்த்தியின் தந்தை சர்தார் யார்? அவருக்கு என்ன நடந்தது? வில்லனின் சதித் திட்டத்தை எப்படி முறியடித்தார்கள் என்பதே மீதிக்கதை.
மித்ரன் தன்னுடைய டீட்டெய்லிங் மெட்டீரியல்களை வைத்து அதை ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையில் கொடுத்திருக்கிறார். நீர் வளத்தை கைப்பற்ற நடக்கும் சூழ்ச்சிகள், ஸ்பை ஏஜென்ட்டை லோக்கலைஸ் செய்து, அதில் என்ன எல்லாம் நடக்கிறது என்பதையும் படத்தில் அழகாக இணைத்திருக்கிறார். படத்தின் பெரிய பலம் சுவாரஸ்யமான கதைக்களம். அதை கமர்ஷியலாகவும், தொய்வில்லாமலும் நகரும் படி கதையை சொல்லியிருக்கிறார்.
அடுத்த ப்ளஸ் கண்டிப்பாக கார்த்தி தான். கிராமத்தைச் சேர்ந்த கூத்துக் கலைஞன், யாரிடமும் சிக்காத ஸ்பை, கறாரான போலீஸ் என ரவுண்ட் கட்டி அசத்துகிறார். தேசத் துரோகி என்று முத்திரையுடன் வாழும் வலியை சொல்லும் மகனாக ஒருபுறம் என்றால், நாட்டுக்காக துரோகி முத்திரையையும் ஏற்கும் உளவாளியாக மறுபுறம் என தன்னுடைய பர்ஃபாமன்சால் கவர்கிறார். நடிகைகளில் கொஞ்சம் அழுத்தமான வேடம் ரஜிஷா விஜயனுக்கு. சில காட்சிகள்தான் என்றாலும் தன்னுடைய அழுத்தமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். ராஷி கண்ணா, லைலா தங்களது பங்கை சிறப்பாக செய்கிறார்கள். மஹாராஜா கதாபாத்திரத்தில் சங்க்கி பாண்டே வழக்கமான வில்லனாக வந்து போகிறார். கதைக்கு முக்கியமான பாத்திரம் இல்லை என்றாலும் முனீஸ்காந்த் தன்னுடைய இயல்பான நகைச்சுவையாலும், எமோஷனலான நடிப்பாலும் ஸ்கோர் செய்கிறார்.
படத்தின் திரைக்கதை மூலம் சர்தார் மற்றும் விஜய் பிரகாஷ் என இரண்டு பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தர நினைத்திருக்கிறார்கள். அதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட சில காட்சிகள் ஆரம்பத்தில் ரசிக்கும்படி இருந்தாலும், போகப்போக ஒரு சலிப்பை ஏற்படுத்துகிறது.
சர்தார் கார்த்திக்கு வைக்கப்பட்ட ஏறு மயில் ஏறி, ரஜிஷா - கார்த்திக்கு வைக்கப்பட்டிருக்கும் பாடல் இது இரண்டும் கதையோடு பொருந்தியிருக்கிறது. ஆனால் மீதமுள்ள இரண்டு பாடல் படத்திலும் சரி, தனிப்பாடலாக கேட்கவும் சரி பெரிதாக ஈர்க்கவில்லை. வெறுமனே கமர்ஷியல் ஃபார்மெட்டுக்கு கொண்டுவர ஓப்பனிங்க் சாங், ஹீரோயினுடன் டூயட் என்ற அளவிலேயே வழக்கமாக இருக்கிறது. ஆனால் பின்னனி இசை மூலம் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுகிறார் ஜி.வி.பிரகாஷ்.
ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு படத்தை மிகத்தரமாக கொடுத்திருக்கிறது. திலீப் சுப்பராயணின் சண்டை வடிவமைப்பு பல இடங்களில் அட்டகாசமாக இருந்தது. கலை இயக்குநர் கதிரின் பங்களிப்பும் படத்துக்கு பெரிய அளவில் உதவியிருக்கிறது. ஆண்டனி ரூபன் படத்தொகுப்பும் பல இடங்களில் கவனிக்கும் படி அமைந்திருந்தது.
‘இரும்புத்திரை’யில் தொழிநுட்பம், ‘ஹீரோ’வில் கல்வி போன்றவற்றில் இருக்கும் பிரச்னைகளைப் பேசிய மித்ரன், இந்த முறை கையில் எடுத்திருப்பது தண்ணீரை தனியார் மயமாக்குவதைப் பற்றி. ப்ளாஸ்டிக் பாட்டிலுக்கு என விலை வைத்து, தண்ணீரை விற்கும் நிறுவனங்கள், அதன் மூலம் உடலுக்கு வரும் ஆபத்து, நீர் வளத்தை வைத்து நடக்க இருக்கும் பிரச்னைகள் எனப் பலவற்றை அழுத்தமாக, பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தும்படி காட்சிபடுத்தியிருந்தது சிறப்பு. கூடவே இந்த நீர் பிரச்னை தலைமுறை கடந்து எவ்வளவு பெரிதாக வளர்கிறது என்ற ஆபத்தை இயல்பாக திரைக்கதைக்குள் கொண்டு வந்த விதமும் கச்சிதம்.
இன்னொரு பக்கம் தேசத்தை பாதுகாப்பதில் ஸ்பையின் பங்கைப் பற்றி பதிவு செய்ய நினைத்திருக்கிறார். அது கார்த்தியின் சாகசங்கள், அவரின் டெக்னிக் போன்ற அளவில் நம்மைக் கவர்கிறது. ஆனால் தேசப்பற்று, நாட்டுக்கு செய்யும் தியாகம் என மிக வழக்கமான வசனங்கள் மூலம் கடத்த நினைத்தது பெரிதாக கைகொடுக்கவில்லை. குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நாடகத்தன்மையைக் குறைத்து இன்னும் கொஞ்சம் இயல்பாகக் கொடுத்திருக்கலாம்.
ஒரு விறுவிறுப்பான ஸ்பை த்ரில்லருக்கு உள்ளே, தண்ணீர் பிரச்னையை பேசியிருக்கும் விதம் படத்துக்கு பெரிய ப்ளஸ். அதற்குள் இருந்த சின்னச்சின்ன குறைகளையும் களைந்திருந்தால் சர்தாருக்கு அழுத்தமான சல்யூட்டை அடித்திருக்கலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/9W6wenD
0 Comments