பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்றிரவு காலமானநிலையில், நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் பல்வேறு புதுமைகளை புகுத்தியும், முயற்சித்தும் பார்ப்பவர் கமல்ஹாசன். இவரின் கனவுப் படமான ‘மருதநாயகம்’ 85 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கடந்த 1997-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி துவங்கப்பட்டது. எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் நடந்த இந்த துவக்க விழாவில் தலைமை விருந்தினராக கமல்ஹாசன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கலந்துகொண்டார். சுமார் 20 நிமிடங்கள் அவர் அந்த விழாவில் கலந்துகொண்டதாகவும் கூறப்பட்டது. அப்போது அவருக்கு சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘மருதநாயகம்’ படத்தின் சண்டைக் காட்சிகள் காட்சியிடப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
ராணி இரண்டாம் எலிசபெத் கலந்துகொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு இதுவாகத்தான் என்று கமல்ஹாசன் பல நிகழ்ச்சிகளில் பெருமையாக கூறிவந்த அதேவேளையில், ராணி ஒருவர் திரைப்பட விழாவில் கலந்துகொண்டது அப்போது அதிகளவில் பேசு பொருளானது. ஆனால் இதையெல்லாம் ராணி இரண்டாம் எலிசபெத் கண்டுக்கொள்ளவோ, விளக்கமளிக்கவோ இல்லை. மேலும் அந்த விழாவில், ராணி இரண்டாம் எலிசபெத்துடன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனார், நடிகரும், பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி, சிவாஜி கணேசன், பாலிவுட் நடிகர் அம்ரீஷ் பூரி ஆகியோரும் கலந்துகொண்டனர். அத்துடன் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகாவும் கலந்துகொண்டு ராணியுடன் உரையாடியிருந்தார்.
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் இந்து - வேளாளர் இனத்தில் பிறந்த மருதநாயகம், தன்னுடைய இளமைப்பருவத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை விரும்பி ஏற்று ,'முகமது யூசுப்கான்' என்று அழைக்கப்பட்டார். அவரின் வீரதீர செயல்களை கண்டு ஆங்கிலேயப் படைகளும், நவாப் படைகளும் நடுங்கின. வஞ்சகத்தால் 1764-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி தூக்கிலடப்பட்ட அவரை, மாயஜாலங்கள் செய்து உயிர்த்து எழுந்துவிடுவார் என அஞ்சி, அவரது உடலை தலை, கை, கால்கள் என தனித்தனியாக வெட்டி வெவ்வேறு ஊர்களில் புதைத்தது ஆங்கிலேய அரசு.
சுதந்திரப் போராட்ட மாவீரனான மருதநாயகத்தின் கதையைத் தான், அவரது மறைவு நாளில், கமல்ஹாசன் அப்போதே பெரும் பொருட்செலவில் தயாரித்து வந்தார். அதில்தான் ராணி இரண்டாம் எலிசபெத் கலந்துகொண்டார். பல காரணங்களால் அந்தப் படம் ஒத்திவைக்கப்பட்டநிலையில் தான், ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். (3/3)
— Kamal Haasan (@ikamalhaasan) September 9, 2022
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/L4lb8qc
0 Comments