லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை செலுத்தாதது தொடர்பான வழக்கில், சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.
விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடனை செலுத்தாமல் ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிடக்கூடாது என்றும், வெளியீட்டுக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், விஷால் தரப்புக்கு `15 கோடி ரூபாயை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் மூன்று வாரங்களில் வங்கியொன்றில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும்’ என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் விஷால் ஆஜராகி லைகா நிறுவனம் மேல்முறையீடு சென்றதால் தான் பணத்தை செலுத்தவில்லை என்றும், தனக்கு ஒரே நாளில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதை அடைக்கவே படங்களில் நடித்துவருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து விஷாலின் விளக்கத்தையும், சொத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யவும், மீண்டும் ஆஜராகவும் உத்தவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது நடிகர் விஷால் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுப்படி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, நடிகர் விஷால் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2i4bcdH
0 Comments