தமிழில் சோலோ, சில்லுக்கருப்பட்டி, பாவக்கதைகள், கசடதபற, புத்தம்புது காலை, குட்டி லவ் ஸ்டோரி போன்ற ஆந்தாலஜி படங்களைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ஆந்தாலஜி `விக்டிம்’. இதில் பா.இரஞ்சித், ராஜேஷ், சிம்பு தேவன், வெங்கட்பிரபு ஆகிய இயக்குநர்கள் `தம்மம்’, `மிராஜ்’, `கொட்டப்பாக்கு வெத்தலையும் மொட்டமாடி சித்தரும்’, `கன்ஃபஷன்’ ஆகிய குறும்படங்களை இயக்கியிருக்கிறார்கள்.
படத்தின் தலைப்புக்கேற்ப ஒவ்வொரு கதையும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி பேசுகிறது. சாதி ரீதியான ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட, மனசிதைவால் பாதிக்கப்பட்ட, லே-ஆஃப் காரணமாக வேலை இழந்து பாதிக்கப்பட்ட, சமூக அழுத்தங்களால் பாதிக்கப்பட்ட என நான்கு கதைகளின் அடிப்படையும் விக்டிம்களின் பக்கம் நின்று சொல்லப்படுகிறது.
தம்மம்:
அழகியலோடும், அழுத்தமாகவும், எளிமையாகவும் சொல்ல வேண்டியதை சொல்லிப் போகிறது இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள `தம்மம்’. கொஞ்சம் நிலம் வைத்து அதில் விவசாயம் செய்ய வேண்டும் என நினைக்கும் குரு சோமசுந்தரம் சந்திக்கும் பிரச்சனைகள்தான் களம். சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட ஒருவனுக்கு சொந்தமான நிலம், அவனை அடிமைப்படுத்த நினைக்கும் ஒருவனுக்கு தரும் எரிச்சல் இதை மையமாக வைத்து சொல்லப்பட்டிருக்கிறது. உளவியலாக சாதிய மனம் எப்படி இயங்குகிறது என்பதை மிகக் குறைந்த வசனங்கள் மூலமாக பளிச் என தெளிவாக சொல்லியிருக்கிறார் இரஞ்சித். குரு சோமசுந்தரம், கலையரசன், லிஸி ஆண்டனி நடிப்பும் மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது.
மிராஜ்:
எம்.ராஜேஷ் தன்னுடைய காமெடி ஜானரை த்ரில்லருடன் மிக்ஸ் செய்து எடுத்திருக்கும் படம் ’மிராஜ்’. பிசினஸ் கான்ஃபரன்ஸுக்காக சென்னை வந்திருக்கும் ப்ரியா பவானி சங்கர், நகரத்திற்கு வெளியே இருக்கும் ஹோட்டலில் தங்குகிறார். அந்த ஹோட்டலின் மேனேஜர் நட்ராஜ். யாருமே இல்லாத அந்த ஹோட்டலில் தனியாக தங்கும் பிரியா சந்திக்கும் சிக்கல்களே படத்தின் கதை. அடிப்படை த்ரில்லர் என்றாலும், அதை தன்னுடைய காமெடி ட்ரீட்மெண்டில் தர முயற்சித்திருக்கிறார் ராஜேஷ். ஆனால் எடுத்துக்கொண்ட கதையும், அதில் வரும் ட்விஸ்ட்டும் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. மனச்சிதைவு பற்றி இந்தக் கதையில் பேசுவது எதற்காக? உண்மையில் இந்தக் கதை மூலம் என்ன சொல்ல முயற்சிக்கிறார்? என்று எதுவுமே புரியும்படி இல்லை.
கொட்டப்பாக்கு வெத்தலையும் மொட்டமாடி சித்தரும்:
சிம்புதேவன் தன்னுடைய ஸ்பெஷ்லான ஃபேண்டஸி களத்தைக் கையில் எடுத்து இயக்கியிருக்கும் படம் `கொட்டப்பாக்கு வெத்தலையும் மொட்டமாடி சித்தரும்’. வாரப் பத்திரிகையில் வேலை செய்யும் தம்பி ராமையாவுக்கு கொரோனா லே-ஆஃபை நினைத்து டென்ஷன். தன்னை பணி நீக்கம் செய்யாமல் இருக்க ஒரு சிறப்பான ஸ்டோரியை பிரசுரித்து திறமையை நிரூபிக்க நினைக்கிறார். மொட்டமாடி சித்தர் பற்றி ஞாபகம் வர அவரை அழைத்து பேட்டி எடுக்க திட்டமிடுகிறார். அதன் பின் என்ன ஆனது, என்பதை தன்னுடைய ஹூமர் ஸ்டைலில் சொல்லியிருக்கிறார் சிம்புதேவன். சித்தராக நாசரும், அவரிடம் பேட்டி எடுக்கும் தம்பிராமையாவும் கதையை கலகலப்பாக்க முயல்கிறார்கள். ஆனால் எழுத்தில் அவ்வளவு சிறப்பாக எந்த ஹூமரும் இல்லை என்பதால் படத்திலும் அது ஒர்கவுட் ஆகாமல் போகிறது. படத்தின் க்ளைமாக்ஸில் வரும் திருப்பம் நல்ல ஐடியா தான் என்றாலும், ஒட்டுமொத்த படமாக கவரவில்லை.
கன்ஃபஷன்:
வெங்கட்பிரபு தனது ஹூமர், எண்டர்டெய்ன்மெண்ட் ஜானரில் இருந்து விலகி எடுத்திருக்கும் படம் `கன்ஃபஷன்’. அமலாபால் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்தவர். கணவர் க்ரிஷ் லண்டனில் இருக்க, வீட்டில் தனியாக வசிக்கிறார். திடீரென ஒரு இரவு, கான்ட்ராக்ட் கில்லர் பிரசன்னாவிடமிருந்து போன் வருகிறது. நீ வாழ்க்கையில் செய்த தவறுகளை சொல் இல்லை என்றால் கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார். இதிலிருந்து அமலாபால் தப்பித்தாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை. நடிப்பு பொருத்தவரை அமலா பால், பிரசன்னா இருவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனால், இந்தக் கதையின் நோக்கம் என்ன? இதன் மூலம் பார்வையாளர்களுக்கு என்ன தெரியப்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
எல்லா படங்களுக்கும் விக்டிம் என்பது பொதுவாக இருப்பதும், அது ஒவ்வொரு விதமாக வகைப்படுத்தப்பட்டிருப்பதும் சிறப்பு. ஆனால் அதை சரிவர சொன்ன விதத்தில் கவர்வது இரஞ்சித் இயக்கியுள்ள `தம்மம்’ மட்டும்தான். மற்ற குறும்படங்கள் எல்லாம் யூ-ட்யூப்பில் பிகினர்ஸ் எடுக்கும் வகையிலான கதையாகவும், மேக்கிங்காகவும் இருப்பது பெரிய குறை.
உதாரணமாக மிராஜ் குறும்படத்தில் டெக்னிகலாகக் கூட பல குறைகள், கூடவே அது பேசியிருக்கும் மனச்சிதைவு பாதிப்பு எதற்காக? வெறுமனே இறுதியில் மனசிதைவு பற்றிய ஸ்லைடு போட்டால் போதுமா? சிம்புதேவனின் மொட்டமாடி சித்தர் குறும்படத்தில் நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்கிற கருத்து இருக்கிறது. ஆனால் அது சொல்லப்பட்ட விதத்தில் பெரிய போதமை இருக்கிறது. வெங்கட்பிரபு தன்னுடைய ஸ்டைலில் இருந்து விலகி புதிய களத்தை முயற்சித்திருந்தது நல்ல விஷயம், ஆனால் அது முழுமையாக இல்லை என்பது பெரிய மைனஸ். இப்படியான குறைகளை சரி செய்திருந்தால் நல்ல ஆந்தாலஜியாக இடம்பிடித்திருக்கும் இந்த `விக்டிம்’.
-ஜான்சன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/jbmBGWY
0 Comments