பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் பிரதாப் போத்தன். வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வாழ்வே மாயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் உள்ளிட்ட படங்களை பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளியானவையாகும்.
ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பிரதாப் போத்தன் பெற்றுள்ளார். பல விருது நிகழ்ச்சிகளுக்கு தேர்வுக்குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார். மலையாளம் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமான பிரதாப் போத்தன், அழியாத கோலங்கள் படம் மூலமாக தமிழில் அறிமுகமாகியிருந்தார். தமிழில் இறுதியாக துக்ளக் தர்பார் என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அவர் நடித்திருந்தார்.
பிரதாப் போத்தனுக்கு, வயது 69 ஆகும். சென்னை கீழ்பாக்கத்தில் ஈகா தியேட்டர் அருகே உள்ள Clave Chateau அடுக்குமாடி குடியிருப்பில் ஏழாவது மாடியில் வசித்து வந்தார். சுகர் பி.பி இருந்து வந்ததால் வீட்டிலிதுந்து சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். இன்று காலை அவர் வீட்டில் பணிபுரியும் மேத்யூ என்பவர் காபி கொடுப்பதற்காக அவரை எழுப்பிய போது அவர் எழுந்திருக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் கார் ஓட்டுநர் ரமேஷுடன் இணைந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு தகவல் தந்திருக்கிறார். மருத்துவர்கள் வந்து பார்த்தபோது பிரதாப் போத்தன் உடல்நல குறைவின் காரணமாக ஏற்கனவே உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதனையடுத்து தகவலறிந்து முன்னாள் மனைவி அமலா சத்யநாத், மகள் கேயா போத்தன் ஆகியோர் இல்லத்துக்கு வந்துள்ளனர். பிரதாப் போத்தன் இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெறும் என சொல்லப்படுகிறது. பிரதாப் போத்தனின் உறவினர் பலரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் வந்ததும் இறுதிச்சடங்கு பற்றி முடிவெடுப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/OKZifEV
0 Comments