Ad Code

Responsive Advertisement

‘டாணாக்காரன்’ விமர்சனம்: ஓடிடிக்கும் தமிழ் சினிமாவுக்கும் இருக்கும் ராசியை உடைத்ததா?

மீண்டும் ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் விக்ரம் பிரபு நடித்திருக்கும் படம்... வெற்றிமாறனின் துணை இயக்குநர், ‘ஜெய்பீம்' படத்தில் போலீஸ் எஸ்.ஐயாக நடித்து ஈரக்குலையை நடுங்கவைத்த தமிழ் இயக்கியிருக்கும் படம் ‘டாணாக்காரன்’. மோசமான போலீஸாக நடித்தவரே போலீஸைப்பற்றி இயக்கியிருக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்புகளுடன் நேரடியாக ஓடிடியில் வெளியாகியிருக்கிறது ’டாணாக்காரன்’.

’நாம பாதிக்கப்பட்டு புகார் கொடுக்கப்போகும்போது, அங்க ஒரு நேர்மையான போலீஸ் இருந்திருந்தால் தீர்வு கிடைத்திருக்குமல்லவா?’ என்ற கேள்வியுடன், தன் அப்பாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு, நேர்மையான போலீஸ் ஆகவேண்டும் என்ற வெறியோடு காவலர் பயிற்சி பள்ளிக்கு வருகிறார் அறிவழகன் (விக்ரம் பிரபு). பயிற்சிகளத்தில் காவல் பயிற்சியாளர்களால் அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள்தாம் ’டாணாக்காரன்’ கதைக்களம்.

image

அசாத்தியமான உழைப்பையும், அட்டகாசமான நடிப்பையும் கோரும் கதாபாத்திரம். அதனை உணர்ந்து நல்லதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ரம் பிரபு. இதுபோன்ற, அழுத்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து விக்ரம் பிரபு நடிக்கவேண்டும். முதல் ஆளாக கேள்வி கேட்பது, எந்த பனிஷ்மெண்ட் கொடுத்தாலும் அதை செய்து முடித்துவிடுவது என ஒரு சில இடங்களைத் தவிர்த்து பெரும்பாலான இடங்களில் ஹீரோயிஸம் எட்டிப்பார்க்கவில்லை. இயல்பாக இருக்கிறது.

நாயகி அஞ்சலி நாயர். தீப்பிழம்புபோல அனல் கக்கிக்கொண்டிருக்கும் காக்கி மைதானத்திற்குள் கொஞ்சம் கலர்ஃபுல்லாக வலம் வந்து ஜில்லூட்டுகிறார். நடுவே வழக்கம்போல் நாயகனின் புஜபல பராக்கிரமங்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு, ரசித்துக்கொண்டேஏஏஏஏ இருப்பதுதான் அவரது முழுநேர வேலை. இடையிடையே, நாயகன் அண்ட் கோவினர் படும் துன்பங்களைப் பார்த்து ‘உச்’ கொட்டுகிறார். அவ்வளவுதான். மற்றபடி, அவருக்கு பெரிதாக எந்த பணியையும் இயக்குநர் கொடுக்கவில்லை. தொழில்நுட்பத்தில் தமிழ் சினிமா சாதிப்பதெல்லாம் இருக்கட்டும். இந்த ‘லிப் சிங்க்’ பிரச்னைக்குத் தீர்வே இல்லையா?

காவலர் பயிற்சிப்பள்ளியில் நடக்கும் அவலங்களைப் பற்றி படம் எடுக்கவேண்டும் என்று முயற்சி செய்ததற்கே இயக்குநர் தமிழைப் பாராட்டலாம். அதேநேரத்தில், இரண்டு டீமிற்கான பிரச்சனையாக இல்லாமல் இன்னும் பல தகவல்களைச் சொல்லியிருக்கலாம். 

image

ஒரே இடத்தில் மட்டுமே நடக்கும் திரைக்கதையை கொஞ்சம் போர் அடிக்காமல் கொண்டுசெல்வது மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவுதான். அனல் தெறிக்கும் மைதானத்தையும் பரேட் காட்சிகளையும் சிறப்பாக பதிவு செய்து படத்திற்கு ‘ரேட்டிங்’ ஏற்றியுள்ளார். ஜிப்ரானின் பின்னணி இசையும் சாமின் சண்டைக் காட்சிக்காட்சிகளும் திரைக்கதைக்கு பலம் கூட்டியிருக்கின்றன.

படத்தின் ப்ளஸ் என்றால் லத்தியால் அடித்ததுபோன்று பேசப்படும் வசனங்களும் கதைக்களமும், கதாப்பாத்திர தேர்வும், அவர்களின் புழுதி பறக்க வைக்கும் நடிப்பும்தான். ”டேய் தம்பி இந்த சிஸ்டம் இருக்கே, இது மொரட்டு வெள்ளக்காரனுக்கும் முட்டாத்தனமான அரசியல்வாதிக்கும் பிறந்த குழந்தைடா . இங்க நேர்மையா இருக்கணும்னு நினைக்கிறவன் தான் கஷ்டப்படுவான்” என்கிற எம்.எஸ். பாஸ்கரின் விரக்தியான வசனம், ‘அதிகாரம் இல்லாத உணர்ச்சி உன்னை எரிச்சி கொன்னுடும்’, ’இங்க சிஸ்டம் உனக்கு எதிரானது. அந்த சிஸ்டத்தில் அதிகாரத்தை கைப்பற்ற தேவையான அத்தனை கதவுகளையும் திறந்து வச்சிருக்கேன். அதிகாரத்தை கைப்பற்றி சிஸ்டத்தை சரி பண்ணிக்கோங்க. சிஸ்டத்தை சரிபண்ணவே நாம் அதிகாரத்தை கைப்பற்றவேண்டியிருக்கு’" என்று சுட்டிக்காட்டும் போஸ் வெங்கட்டின் பல்வேறு வசனங்களும், சாதியை வைத்து இழிவுப்படுத்த முயலும் லால் பேசும் வசனங்களும் போலீஸ் வேலைக்கு மட்டுமல்ல அத்தனை அரசுப் பணிகளுக்கும் வந்து உயரதிகாரிகளின் நெருக்கடிகளாலும் சாதிய வன்மங்களாலும் பணியை விட்டு விலகிச்செல்ல நினைக்கும் ஒவ்வொருவர் மனதிலும் பதியவேண்டியவை.

இந்த அழுத்தமான வசனங்கள் பல முன்னாள் ஐ.பி.எஸ்கள், ஐ.ஏ.எஸ்.கள் தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி சிஸ்டத்தை சரிசெய்யாமல் வேலையை விட்டு வந்துகொண்டிருப்பதை நினைவூட்டி அங்கிருந்தபடியே தனது அதிகாரத்தை வைத்துக்கொண்டு நேர்மையாக போராட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ’புத்திசாலித்தனம்’ முக்கியம் என்பதை விழிப்புணர்வூட்டிய தமிழுக்கு பரேடுடன் கூடிய வணக்கங்கள்.

லாலுவுக்கே டஃப் ஃபைட் கொடுக்கும் அளவிற்கு அத்தனை கதாப்பாத்திரங்களையும் நன்றாகவே ஷூட்டிங் மைதானத்தில் ‘பரேட்’ செய்திருக்கிறார் தமிழ். அவர், நடந்துவரும் ஒவ்வொரு காட்சியும் மைதானமே பீதியில் புழுதி பறக்கிறது. இன்ஸ்பெக்டராக நடித்துள்ள மதுசூதனன் காவலர்களுக்கே உரிய ’சூழ்ச்சுமம்- சூழ்ச்சி’ என மிரட்டியிருக்கிறார். உயரதிகாரிகள் கட்டளையிடுவதை எந்திரம்போல் செய்யாமல் மனிதனாக சிந்தித்து கேள்வி எழுப்பினால் எப்படியெல்லாம் பனிஷ்மெண்ட் கொடுக்கப்படும் என்று பார்க்கும்போதே பகீரிட வைக்கின்றன.

image

இன்ஸ்பெக்டர், ஏசி மட்டுமல்ல பயிற்சிப்பள்ளியின் முதல்வராக வரும் ஐ.பி.எஸ்ஸும் மிக தத்ரூபமாக கதிகலங்கவைக்கிறார். தன்னை அசிங்கமாக திட்டிய உயரதிகாரியைக் கோபத்தில் தாக்கியதால், இன்ஸ்பெக்டர் ஆகவேண்டியர் காவலராகவே தொடர்கிறார் என்ற எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பு இதயம் கனக்கச் செய்துவிடுகிறது.

திருநேல்வேலி மாவட்டம் பொழிலாறு காவலர் பயிற்சிப்பள்ளியில் 1998 ஆம் ஆண்டில் நடப்பதுபோல் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கு நடக்கும் அவலங்கள் என்னவோ 2022 ஆம் ஆண்டிலும் நடப்பதைப்போலத்தான் உள்ளது. கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படும் காட்சிகள் உண்மையிலேயே காவலர் பயிற்சி மையங்களில் நடக்கும் மனித உரிமை மீறல்களில் ஒன்று. இப்படி, அனைத்து மனித உரிமை மீறல்களையும் கடந்து காவலர் பயிற்சிப்பள்ளியிலிருந்து வருவதால்தான் பெரும்பாலான காவலர்களுக்கு மனிதர்களின் உரிமைகள் தெரியாமல் போய்விடுகிறதோ என்ற கேள்வியை எழுப்ப வைத்துவிடுகிறது.

படத்தில் சில குறைகளும் உள்ளன. நாயகனும் நாயகியும் எப்படி கடைசிவரை படத்தில் ஒன்றுசேரவில்லையோ, அப்படித்தான் அவர்களது காதலும் ஏதோ தாமரை இலை நீரைப்போல ஒட்டாமலேயே போய்விடுகிறது. படத்தின் ஓப்பனிங்கிலிருந்து எண்டிங்வரை ஆங்கிள்தான் மாறுகிறதே தவிர, ஒரே லொகேஷனில் எடுக்கப்பட்டது என்பது அயர்ச்சியாக இருக்கிறது. விக்ரம் பிரபுவின் ஃப்ளாஷ்பேக் காட்சிகள், ஜெயிப்பதற்காக க்ளைமாக்ஸில் செய்யும் தந்திரங்கள் போன்றவை ஏற்கனவே பார்த்த வழக்கமான சினிமா காட்சிகளைப்போல் இருப்பதால் மனதில் ஒன்ற மறுக்கின்றன.

முருகன் என்கிற கதாப்பாத்திரத்தை மையப்படுத்திதான் கதை நகர்கிறது. அவர், கருணை அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால், இப்படி போலீஸ் வேலைக்கு உடற்தகுதியில்லாத நபரை நிச்சயமாக தேர்ந்தெடுத்திருக்கவே மாட்டார்கள். அப்படியே கருணை அடிப்படையில் தேர்ந்தெடுத்திருந்தால் காவல்துறையிலேயே இருக்கும் அமைச்சுப்பணியில் அவரை வேலைக்கு அமர்த்தியிருப்பார்கள் என்று கூறுகிறார்கள் இதுகுறித்து அறிந்தவர்கள். மேலும், சீனியாரிட்டி அடிப்படையிலான வழக்குகள் நடப்பது உண்மைதான். ஆனால், 45 வயதில் காவலர் பயிற்சிப்பள்ளியில் ட்ரெயினிங் எடுக்க வருகிறார்கள் என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை.

காவலர் பயிற்சிப் பள்ளியில் கட்டளையை மீறினால் மைதானத்தில் மிகக்கடுமையான பனிஷ்மெண்ட்கள் கொடுக்கப்படும். ஆனால், பயிற்சி ஆசிரியோரோ லத்தியால் அடிக்கிறார், காலால் எட்டி உதைக்கிறார் போன்ற காட்சிகளும் நம்பும்படியாக இல்லை. க்ளைமாக்ஸ் திடீரென்று முடிவதுபோல் உள்ளது. ஒரு மெடலுக்காக இவ்வளவு ப்ளான் எல்லாம் செய்து, தோற்ற லாலுக்கு கொடுப்பார்களா என்ற கேள்வியும் எழும்புகிறது.

இன்னும் கொஞ்சம் பயிற்சி இருந்திருந்தால் மிகப்பெரிய அளவுக்கு பேசப்பட்டிப்பான் இந்த ‘டாணாக்காரன்’. இருந்தாலும் இதுவரை பார்த்திடாத ஒரு களத்தைக் காட்டியதற்காகவே இந்த டாணாக்காரனுக்கு நம் பாராட்டுகள்.


-வினி சர்பனா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/XIWP0Aa

Post a Comment

0 Comments