“அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது” என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்ததாக அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
அம்பேத்கருடன் பிரதமர் மோடி ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா கூறிய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரனிடம் புதிய தலைமுறை சார்பில் பேசினோம். அப்போது பேசிய அவர், “இதுகுறித்து இளையராஜாவிடம் பேசினேன். அப்போது என்னுடைய பேசுகையில், `நான் எழுதிய கருத்து தவறு என்று மன்னிப்பு கேட்க வேண்டுமா? மற்றவர்கள் எப்படி கருத்து சொல்கிறார்களோ அதே போன்று நான் என்னுடைய கருத்தைக் கூறினேன். அதற்கு எனக்கு எதிரான விமர்சனங்கள் வந்தாலும், நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய எண்ணத்தில் மோடி எப்படி இருக்கிறாரோ, அதுவே என் பேச்சில் வந்துள்ளது.
பதவி வாங்குவதற்காகவெல்லாம் நான் மோடியை வேண்டுமென்று புகழ்ந்து பேசவில்லை. சொல்லப்போனால் எனக்கு அப்படியான எந்தப் பதவியும் தேவையில்லை. நான் கட்சிக்காரணும் இல்லை. தனிப்பட்ட முறையில் மோடியை எனக்கு பிடிக்கும்... அவ்வளவுதான். நான் பல பாட்டுக்கு இசை அமைக்கிறேன். `சில பாட்டு நல்லா இருக்கு என்பார்கள். சில பாடல் நல்லா இல்லை’ என்பார்கள். அதைப் போன்றுதான் எனது இந்தக் கருத்தும். இந்த விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன்.
எனக்கு கருத்து சொல்ல சுதந்திரம் உள்ளது. மோடியை எந்த அளவுக்கு பிடிக்குமோ அதை நான் கூறியுள்ளேன். ஒரு புத்தகத்தை கொடுத்து என்னிடம் முன்னுரை எழுத சொன்னார்கள். நான் ரெண்டு பேரையும் அலசி ஆராய்ந்து என்னுடைய எண்ணத்தை எழுதினேன். இதற்காக நான் எழுதிய கருத்து தவறு என்று மன்னிப்பு கேட்க முடியுமா? நான் எழுதிய ஏதாவது தவறு இருக்கிறதா? நான் பாஜக சேர்ந்தவன் இல்லை. எனக்கு மோடியையும் பிடிக்கும்; அம்பேத்கரையும் பிடிக்கும். அதனால் இரண்டு பேரையும் ஒப்பிட்டு எனது கருத்தைத் தெரிவித்தேன். என் பார்வையில் அம்பேத்கர் சொன்னதையெல்லாம் மோடி செய்து வருகிறார். அதை நான் கூறியது தவறா?
மோடியை பற்றியோ அல்லது அம்பேத்கரைப் பற்றியோ நான் தவறாக பேசியிருந்தால், அதைப் பற்றி விமர்சிக்கையில் அதற்கு நான் பதில் அளிக்க தயார்’ என்று இளையராஜா என்னிடம் கூறினார்” என்று கங்கை அமரன் கூறினார்.
சமீபத்திய செய்தி: திமுக பெண் கவுன்சிலர் தந்தை கொலை வழக்கு: சிறுவன் உட்பட 3 பேர் கைது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/h3WOTPV
0 Comments