பெரும் பொருட்செலவில் ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்தியா முழுவதும் இன்று ரிலீஸ் ஆனது.
இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக பலரால் கருதப்படும் எஸ்எஸ் ராஜமவுலி, “பாகுபலி” படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து “ஆர்.ஆர்.ஆர்” என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில், ஆந்திர மாநிலத்தில் வாழ்ந்த அல்லூரி சீதாராமராஜு, கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதையை கற்பனையாக எழுதி படமாக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் ஆகியோர் படத்தில் நடித்ததால் துவக்கம் முதலே படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் மத்தியிலும் உற்சாகம் அதிகமாக இருந்தது. ஜூனியர் என்டிஆர், “இந்தத் திரைப்படம் உங்கள் இருக்கைகளைப் பிடித்துக் கொண்டு அமரும் காட்சிகள் நிறைந்ததாக, ஒரு உணர்ச்சிகரமான ரோலர்கோஸ்டராக இருக்கும்” என்று தெரிவித்து இருந்தார்.
கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி ஆர்ஆர்ஆர் தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்த நிலையில், தியேட்டர்கள் திறக்கப்படாததால் ஜனவரி 7 க்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. அந்த தேதியையும் மாற்றி மார்ச் 25 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்த நிலையில், இந்தியா முழுவதும் இன்று திரைப்படம் வெளியாகியுள்ளது. காலை முதலே டிவிட்டர் டிரெண்டிங்கிலும் ஆர்ஆர்ஆர் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்திலும் நிறைய தியேட்டர்களில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாகியுள்ளது. பகுபலிக்கு பிறகு ராஜமவுலிக்கு படங்களுக்கு தமிழிலும் நல்ல வரவேற்பு உள்ளது. மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்கில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். காலை 6 மணிக்கு வெளியான முதல்காட்சியை காண ஏராளமானோர் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/4R61oBc
0 Comments