'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தமிழ் இதயங்களை கொள்ளையடித்த செம்ம ஹிட்டுக்குப் பிறகு, துல்கர் சல்மானின் நேரடி தமிழ்ப்படம் ‘ஹே சினாமிகா. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் துல்கர் சல்மானின் படம்... பிருந்தா மாஸ்டர் இயக்கியுள்ள முதல் படம்... ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் தமிழில் தயாரித்திருக்கும் முதல்... இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ரிலீஸ் ஆகியுள்ள ‘ஹே சினாமிகா’, அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா?
ஓவர் அக்கறையுடன் கவனித்துக்கொண்டு… பேசிக்கொண்டேஏஏஏ… இருக்கும் ஹவுஸ் ஹஸ்பண்டை பிரிய வித்தியாசமான முடிவை எடுக்கும் மனைவி. அதனால், ஏற்படும் விபரீதம்தான் ’ஹே சினாமிகா’ படத்தின் ஒன்லைன்.
ஹீரோக்களின் எண்ட்ரி என்றாலே பறந்து வந்து ஸ்லோமோஷனில் உதைப்பார். வில்லன் பறந்து விழுவான். ஆனால், ஹே சினாமிகாவில் யாழனாக நடித்திருக்கும் துல்கர் சல்மானோ ஒரு சிலம்பம் குச்சியைக்கூட கொண்டு வரவில்லை. மாறாக, வீட்டை சுத்தம் செய்யும் ‘மாப்’ குச்சியுடன் எண்ட்ரி கொடுக்கிறார். உலகத்தில் இப்படியெல்லாம்கூட உணவுகள் இருக்கின்றனவா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு புதிய புதிய டிஷ்களை மனைவிக்குச் சமைத்துக் கொடுத்து அசத்துகிறார். நம்ம ஊரு கணவன்மார்கள் பலருக்கு வெந்நீரே வைக்கத் தெரியாது. அவர்களிடம் காஃபியை எங்கே எதிர்பார்ப்பது? ஆனால், துல்கர் சல்மானோ மூடுக்கு ஏற்றார்போல் சமைக்கிறார். டென்ஷனாக இருந்தால், சந்தோஷமாக இருந்தால்... என சூழ்நிலைக்கு ஏற்ப வித விதமாக காஃபி போட்டு கொடுக்கிறார். வீட்டைப் பெருக்கிவிடுகிறார், பாத்திரங்களைக் கழுவிவிடுகிறார், சமைத்து கொடுத்து மனைவியை அவசர அவசரமாக ஆஃபிஸ் கிளப்புகிறார், இரவு சமைத்து கொடுத்து சீராட்டுகிறார். 24 மணி நேரமும் அவரது கண்களில் மனைவியின் மீதான காதல், டூயட் ஆடிக்கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட ஹவுஸ் ஹஸ்பண்டை யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால், துல்கரின் மனைவி மெளனாவாக நடித்திருக்கும் அதிதிக்கு பிடிக்காமல் போகிறது.
காரணம்... ஒன்றுதான், பேச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சு. பேச்சுன்னா கொஞ்ச நஞ்ச பேச்சுல்ல. வாய்க்கு ப்ளாஸ்திரி ஒட்டும் அளவுக்கு துல்கர் பேசிக்கொண்டே இருப்பதால் அவரிடமிருந்து தப்பிக்க விபரீத முடிவை எடுக்கிறார் அதிதி. அதற்கு, சைக்காலஜிஸ்ட் மலர்விழியாக நடித்திருக்கும் காஜல் அகர்வாலின் உதவியை நாடுகிறார். பிறகு, ’ஏந்தான் காஜலின் உதவியை நாடினோமோ’ என்று தலையில் அடித்துக்கொள்கிறார் அதிதி. காரணம், படத்தில் ஒரு ஹீரோ, இரண்டு கதாநாயகிகள் இருந்தால் என்ன நடக்குமோ அது நடந்துவிடுகிறது. அதற்குப்பிறகு, யாருடன் துல்கர் சல்மான் சேர்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.
அவசர அவசரமாக எழுந்து… சமைத்து… கணவன்களை ஆஃபிஸுக்கு கிளப்பும் ஹவுஸ் ஒய்ஃப் காட்சிகளையே பார்த்து பார்த்து போர் அடித்துப்போன நமக்கு, ஹவுஸ் ஹஸ்பண்ட்டாக வந்து ’தூள்’ கிளப்புகிறார் துல்கர் சல்மான். இப்படிப்பட்ட கதையை தேர்ந்தெடுத்ததற்காகவே துல்கர் சல்மானை ‘தில்’கர் சல்மான் எனப் பாராட்டலாம்.
இப்படத்தின் இயக்குநர் பிருந்தா மாஸ்டர் தனக்குக் காதல் படங்கள்தான் இயக்கப் பிடிக்கும் என்றார். அவர், கூறியதுபோலவே முழுக்க முழுக்க காதல், ரொமான்ஸ் என கலர்ஃபுல்லாக ‘ஹே சினாமிகா’வை சமைத்திருக்கிறார். ஆயிரம் பாடல்களுக்குமேல் நடன மாஸ்டராக பணிபுரிந்திருப்பவர் இப்படத்தில், இயக்குநராக ‘ஆயிரத்தில் ஒருவள்’ என்று சொல்லும் அளவுக்கு அழுத்தமாக தடம் பதித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த எண்ணிக்கை தயாரிப்பாளர்களின் எண்ணத்தை மாற்றி இன்னும் வெல்கம் சொல்ல வைக்கும். குறிப்பாக, இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன், எடிட்டர் ராதா ஸ்ரீராம் என பெண்களுக்கும் வாய்ப்பளித்ததற்காக பிருந்தா மாஸ்டருக்கு நடனமுடன் கூடிய பெரிய பாராட்டைக் கொடுக்கலாம்.
பெண் இயக்குநர் என்றாலே ஆண் இயக்குனர்கள் அளவுக்கு இய(ங்)க்கமாட்டார்கள் என்ற தவறான பிம்பத்தை உடைத்து ‘ஹே சினாமிகா’ வை சீன் பை சீன் அழகியலோடும் நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தி டைரக்ஷனிலும் ’மாஸ்டர்’ என்பதை நிரூபித்திருக்கிறார். நடனக்காட்சிகளில் சொல்லவா வேண்டும்? குறிப்பாக, துல்கர் சல்மான் பாடியுள்ள ‘அச்சமில்லை அச்சமில்லை’ ராப் பாடலின் கொரியோகிராஃபி ‘ராக்’ சொல்ல வைக்கிறது.
மனநல மருத்துவர், மனநல ஆலோசகர் இருவருக்குமுள்ள வித்தியாசத்தை லேசாகத் தெளிவு படுத்திவிட்டு செல்கிறார் இயக்குநர். மனநல ஆலோசகராக வரும் காஜல் அகர்வாலின் கதாப்பத்திரம் வெறும் ஆலோசகராக மட்டுமல்லாமல், கொஞ்சம் டிடெக்டிவ் வேலையையும் செய்வது கூடுதல் சுவாரஸ்யம். உண்மையைக் கண்டுபிடிக்க முடியாமல் உளவியல் ஆலோசனைகளால் மட்டுமே தீர்வு கொடுத்துவிடமுடியாது என்பதைச் சுட்டிக்காட்டிவிடுகிறது. கணவனோ மனைவியோ திருமணத்தைத் தாண்டிய உறவில் இருப்பது உண்மையாக இருந்தால் சந்தேகப்படுகிறவர்களுக்கு எத்தனை ஆலோசனைகள், சிகிச்சைகள் வழங்கினாலும் தீர்வு கிடைக்காது என்ற தகவலையும் சொல்லாமல் சொல்லிவிட்டு போகிறது காஜல் அகர்வாலின் ஆலோசனை மையக்காட்சிகள்.
நடிகை அதிதி. அதீத நடிப்பை வழங்கியிருக்கிறார். காதல், துல்கர் சல்மானின் அதீத அன்பால் வெறுப்பது, காஜலுடன் நெருங்கிப் பழகும்போது பொறாமைக் கொள்வது என ஏ டூ செட் காட்சிகளிலும் அதீதமாக நம்மை ஆக்கிரமித்துக்கொள்கிறார். அதிதியை தவிர வேறு யாரையும் மெளனா கதாபாத்திரத்தில் நம்மால் பொருத்திப் பார்க்க முடியாத அளவிற்கு வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக, க்ளைமேக்ஸில் ’சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமாய்’ பேரழகாகக் காட்சியளிக்கிறார். இதுவரை, அவரின் அழகை அழகாக படம்பிடித்துக் காட்டியது ‘ஹே சினாமிகா’வின் இறுதிக்காட்சி எனலாம்.
மதன் கார்க்கி எப்போதும் பாடல், வசனங்களில் புதுமைகளை புகுத்தி புத்துணர்வூட்டுகிறவர். அவரது கதை(தழுவல்), திரைக்கதையான ’ஹே சினாமிகா’விலும் ஹவுஸ்ஹஸ்பண்ட் என்ற புதுமையை புகுத்தி ’புத்தி’யுணர்வு ஊட்டுகிறார்.
கதையும் காட்சிகளும் தமிழ் சினிமாவுக்கு செம்ம ஃப்ரெஷ். ’ஐ ஆம் ஏ போரிங் சாஃப்ட்வேர் என்ஜினியர்’, ‘குழந்தையா இருக்கும்போதுதான் கேள்வி கேக்குறோம். பெரியவங்களானதும் கேள்வி கேக்குறோமா?’...மனைவி ஊருக்கு போனதும் என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்று கொண்டாடுவதை மாற்றி ‘என் புருஷனோட பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா’ என்று குதூகல ஆட்டம்போடும் மனைவி....’பேச்சு எனக்கு ரத்த ஓட்டம் மாதிரி’, ’பொண்ணுங்க பேண்ட் போடலாம், பசங்க சுடிதார் போடக்கூடாதா’, ஒய்ஃப்னா பயம் இல்ல. அவ்ளோ பிடிக்கும்’ என மதன் கார்க்கியின் பல வசனங்கள் மனதில் ’ஹே சூப்பர்ப்பா’ சொல்ல வைத்துவிடுகிறது.
'என் பேரு பிரதக்ஷனா’, “எது எஸ்.கே புரடெக்ஷனா” என்று பாபாவாக ஒரே காட்சியில் வரும் யோகி பாபு, கணாமல் போன பாபுவாகிவிடுகிறார். யோகி பாபுவின் நகைச்சுவைக் காட்சிக்குப் பதில் ‘வழிவதில் 23 வகை இருக்கு’ என்று துல்கர் சல்மான், அதிதியின் நண்பரிடம் பாடம் எடுக்கும் இடத்தில், தியேட்டரே சிரிப்புடன் கைத்தட்டி கல கலக்கிறது.
அதிதியுடனான காட்சிகளில் பேசுவதுபோல் காஜல் அகர்வாலுடன் வரும் காட்சிகளில் துல்கர் அதிகமாக பேசுவதில்லை. அளவோடு பேசும் துல்கரை நமக்கும் பிடித்துவிடுகிறது, காஜலுக்கும் பிடித்துவிடுகிறது. அப்போது, அதிதிக்கும் பிடிக்காமல் போய்விடுமா என்ன? ஒரு ஆண் பெண்களிடம் வழியாமல் நல்லவனாக இருந்தால் பெரும்பாலான பெண்களுக்கு பிடிக்கும் என்பது உண்மைதான். ஆனால், அதையும் தாண்டி தனிமனித பிரைவேசிக்குள் நுழைவது, பிடிக்காத உணவுகளை எல்லாம் சமைத்துக் கொடுத்து போர் அடிக்கவைப்பது, எஃப்.எம் ரேடியோ ஜாக்கி போல் பேசிக்கொண்டே இருப்பது என எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு ’நீ நீயா இரு… நான் நானா இருக்கேன்’ என்று ஏற்றுக்கொள்வது எப்படி சரியானதாக இருக்கும் என்ற கேள்வி மட்டும்தான் எழும்புகிறது.
படத்தின் ஆரம்பத்திலிருந்து இருக்கும் துள்ளல் காட்சிகள் அவ்வப்போது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து இறுதிவரை தொடர்வது பெரும் பலம். அந்த பலத்தை ப்ரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவும் கோவிந்த் வசந்தாவின் இசையும் கூட்டியிருக்கிறது. சிலிர்ப்பான காட்சிகளுக்கு பார்க்காமலேயே பின்னணி இசையைக் கொடுத்து இதயத்தை இளமையாக்கும் கோவிந்த் வசந்தா பாடல்களில் கோட்டை விட்டிருக்கிறார்.
வானத்தில் பறந்து பறந்து வில்லன்களையும் ஜொள்ளன்களையும் புரட்டி எடுக்கும் அதிரடி ஆக்ஷன்கள், ஏய்… உய்… என உள்ளுக்குள் புகுந்து உடம்பை ரணகளமாக்கும் பஞ்சர் வசனங்கள், ட்விஸ்டுக்குள் ட்விஸ்ட் அடிக்கும் த்ரில்லர் காட்சிகள் என வழக்கமான காட்சிகள் இல்லாமல், ஜில்லென்ற ஐஸ்கிரீமாய் உள்ளுக்குள் நுழைந்து இதயத்தில் குழைந்து நம்மை உருகவைக்கிறது ’ஹே சினாமிகா’. போலிச்சாமியார், சிக்கன் கடையை வைத்து பேசும் மனிதாபிமானம் என படம் முழுக்க சமூகத்தின் மீதான கோபத்தை வெளிப்படுத்தும் சினாமிகா வேறு யாருமல்ல, அது துல்கர் சல்மான்தான். மொத்தத்தில், இந்த ’சினாமிகனை’ பிரேக் அப் செய்ய ஸ்பீடாக செல்கிறவர்கள் கொஞ்சம் பிரேக் போட்டு பார்த்துவிட்டுச் செல்லலாம்.
- வினி சர்பனா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/AG7nBjD
0 Comments