தமிழ் சினிமாவில் நல்ல நகைச்சுவை நடிகராக வலம் வரும் சதீஸ் நாயனாக அறிமுகமாகியிருக்கும் சினிமா நாய் சேகர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த சினிமா பொங்கலுக்கு திரைக்கு வந்திருக்கிறது.
அறிமுக இயக்குர் கிஷோர் ராஜ்குமார் இயக்கியிருக்கும் இந்த சினிமாவில் சதீஸ் நாயகனாகவும் பவித்ர லட்சுமி நாயகியாகவும் நடித்துள்ளனர். ஜார்ஜ் மரியம், ஸ்ரீமன், லிவிங்ஸ்டன், இளவரசு, மனோ பாலா, கு. ஞானசம்பந்தன் உள்ளிட்டோரும் இக்கதைக்கு தங்களது நடிப்பின் மூலம் வலு சேர்த்துள்ளனர். இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இப்படத்தில் நடிகராக திரையில் தோன்றி பாடல்கள் பாடி அசத்துகிறார். இசையமைப்பாளர் சங்கர் கணேஷை ஜாலியான வில்லனாக காட்டியிருப்பது வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.
ஜார்ஜ் மரியத்தின் ஆராய்சியில் நடந்த குளருபடியினால் நாய் மனிதனாகவும் மனிதன் நாயாகவும் மாறிவிடுகிறார்கள். அதன் பிறகு நடக்கும் கலகல கலாட்டாக்களின் ஜாலியான திரைத்தொகுப்புதான் இந்த நாய் சேகர்.
தமிழ் சினிமாவிற்கு புதிய கதைக்களம். இந்தக் கதையானது ஒரு மேடை நகைச்சுவை நிகழ்ச்சிக்கான சின்ன கான்சப்ட் போலத் தோன்றலாம். ஆனால் இந்த ஐடியாவை 2 மணி நேர சினிமாவாக இயக்கி ரசிக்க வைத்திருக்கிறது படக்குழு. படத்தின் முதல் பாதியில் கதைக்குள் செல்லவே ரொம்ப நேரம் எடுத்துக் கொள்கிறார் இயக்குநர். ஆமை வேகத்தில் துவங்கும் இந்த சினிமா பிறகு வெறி நாய் வேகத்தில் ஓடுகிறது. கதைக்குள் சென்ற பிறகு முழுமையாக நம்மை ரசிக்க வைக்க முயல்கிறார் இயக்குநர்.
அனிருத்தின் இசையில் வந்திருக்கும் பாடல் முணுமுணுக்க வைக்கிறது. சாண்டி மாஸ்டரின் நாய் ஸ்டைல் நடனம் ரசிக்க வைக்கிறது. சதீஸ் இடக்கு முடக்கு பாடலில் நல்ல நடனத்தை வழங்கி அசத்தியிருக்கிறார். ரஜினி படங்களை தனது ஆராய்ச்சியின் ரெபரன்ஸ் பெயர்களாக பயன்படுத்தி இருப்பது நல்ல மசாலா ஐடியா.
அனைவரைவிடவும் கதையின் முக்கிய நாயகனாக லேப்ரடார் நாயைத் தான் சொல்ல வேண்டும். இந்த நாய்க்கு மிர்ச்சி சிவா குரல் வழங்கியிருக்கிறார். சிவாவின் குரலாகட்டும் மற்ற காட்சிகளிலாகட்டும் ஆங்காங்கே நகைச்சுவை வெடிக்கிறது. என்றாலும் படம் இன்னுமே நன்றாக வந்திருக்க வேண்டும். இயக்குநர் பல இடங்களில் வாய்ப்பை தவற விட்டிருக்கிறார். பல காட்சிகளில் எந்த ஏற்ற இறக்கமும் இன்றி கதை ப்ளாட்டாக பயணிப்பது சோர்வு. ஆனால் சதிஸ், பவித்ர லட்சிமிக்கு இடையே இருக்கும் கெமிஸ்ட்ரியும் அவர்களது நடிப்பும் படத்தை தாங்கி நிற்கிறது.
‘படத்தின் லாஜிக் குறித்து பேச வேண்டாம். இது பேன்டசி சினிமா.’ என டைட்டில் கார்டிலேயே போட்டிருப்பதால் நாம் அது குறித்து விமர்சிக்க வேண்டியதில்லை. என்றாலும் நாய் கார் ஓட்டுவது போல வைத்திருக்கும் காட்சி எல்லாம் ரொம்பவே பழசு. இக்காட்சிகள் ராமநாராயணின் சினிமாக்களை நினைவு படுத்துகின்றன. ஒரு காட்சியில் சாதியையும் நாய்களின் வகைகளையும் ஒப்பிட்டு போகிற போக்கில் பேசப்படும் ஒரு வசனம் முக்கியமானது.
எந்த சினிமா விமர்சனம் என்றாலும் அதன் கதை திரைக்கதை, ஒளிப்பதிவு வரை மட்டுமே அதிகம் பேசுவோம். ஆனால் ஒரு கதை சினிமாவாக திரைக்கு வருவதற்கு அந்த சினிமாவின் தயாரிப்பு பணிகள் முக்கியமானவை. கிரியேட்டி தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் கணிப்புகள் முக்கியமானவை. பட்ஜட் சிறிதோ பெரிதோ, ஒரு கதைக்கு மிகச் சரியான செயல் வடிவத்தை கொடுப்பதில் அப்படத்தின் எக்ஸிகியூட்டிவ் ப்ரடியூசர்களின் பங்கு முக்கியமானது. அவ்வகையில் இப்படத்தின் எக்ஸிகியூட்டிவ் ப்ரடியூசர் எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம் மற்றும் கிரியேட்டிவ் தலைமை ஐஸ்வர்யா கல்பாத்தி இருவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். குறிப்பாக பிகில், பரதேசி ஆகியவை எஸ்.எம்.வெங்கட் மாணிக்கத்தின் குறிப்பிடத்தக்க ப்ராஜக்ட்டுகள்.
ஜாலியான நிறைவான சினிமாவாக வந்திருக்கும் நாய் சேகரை தாராளமாக இந்த பொங்கலுக்கு குடும்பத்துடன் சென்று கண்டு ரசிக்கலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3zQV1IA
0 Comments