Ad Code

Responsive Advertisement

நீதிபதி கூறிய விஜய்க்கு எதிரான கருத்துக்கள் நீக்கம் : மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு

தனி நீதிபதி கூறிய கருத்துக்ளை நீக்கக்கோரி நடிகர் விஜய் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அந்த கருத்துகளை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  

கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் விஜய், லண்டனில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோல்ட் காரை வாங்கினார். இதற்கு இறக்குமதி வரியாக கிட்டத்தட்ட 2 கோடியை செலுத்தியிருந்தார். இருப்பினும், அந்த காரை வட்டார போக்குவரத்து அதிகாரியின் அலுவலகத்தில் பதிவுசெய்யும் போது, வணிக வரித்துறையில் நுழைவு வரியை செலுத்தி சான்று வாங்கிவருமாறு கூறப்பட்டது. இந்த வரியை செலுத்தவேண்டிய அவசியமில்லை என கேரள மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் சிலவற்றில் குறிப்பிட்டுள்ளதாக கூறி இந்த வரியை நடிகர் விஜய் செலுத்த மறுத்திருந்தார்.

எனினும், நுழைவு வரியை கட்டாயம் செலுத்தவேண்டும் என வணிகத்துறை உத்தரவிட்டதால் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் விஜய். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 20 சதவீதம் வரியை செலுத்திவிட்டு வாகனத்தை பதிவுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டது. 2012-ம் ஆண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதே ஆண்டில் வரியை செலுத்தி நடிகர் விஜய், தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை பயன்படுத்திவந்தார். இடைக்கால உத்தரவாக பிறப்பிக்கப்பட்ட இந்த வழக்கு மீண்டும் கடந்தாண்டு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி எம். எஸ். சுப்பிரமணியம் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாநில அரசுக்கு நுழைவு வரி வசூலிக்க அதிகாரம் உள்ளதால் நடிகர் விஜய் இரு வாரங்களில் வரியை செலுத்துமாறு உத்தரவிட்டார்.

image

மேலும், நீதிபதி சுப்பிரமணியம் “புகழ்பெற்ற சினிமா நடிகர்கள் சரியான நேரத்தில் வரி செலுத்த வேண்டும். வரி செலுத்துவது என்பது கட்டாயப் பணியே தவிர நாட்டிற்காக அளிக்கும் நன்கொடை கிடையாது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட திரை நட்சத்திரகள் திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக திகழ வேண்டும். சமூக நீதிக்குப் பாடுபடுவதாக தங்களை பிரதிபலித்து கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஒரு தேச துரோகம் என கடுமையாக” கூறினார். அதுமட்டுமில்லாமல் தனி நீதிபதி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, அந்த ஒரு லட்சம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதியில் செலுத்துமாறு உத்தரவிட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்தும், தன்னை பற்றிய விமர்சனங்களை நீக்கக் கோரியும் அபராதத்தை எதிர்த்தும் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் அந்த மேல்முறையீட்டு மனு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா நிவாரண நிதிக்கு தான் ஏற்கெனவே நிவாரணம் கொடுத்தாகிவிட்டதாக விஜய் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகைக்கு இடைக்கால தடை விதித்தது. ஆனால் அதே நேரத்தில் விஜய் செலுத்த வேண்டிய ரோல்ஸ்ராய்ஸ் காருக்கான வரியை செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. முழு வரியை செலுத்த தயார் என விஜய் தரப்பு கூறியிருந்த நிலையில், ரூ. 32.30 லட்சத்தை ஆகஸ்ட் 7-ல் செலுத்திவிட்டதாக விஜய் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனி நீதிபதியின் விமர்சனத்தை நீக்கக் கோரிய மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், தனி நீதிபதி அளித்த கருத்துகளை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3FYOjBL

Post a Comment

0 Comments