நெட்ஃப்ளிக்ஸின் பாகிஸ்தான் பார்வையாளர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் 'தலைவி' இருப்பதைக் குறிப்பிட்டுள்ள கங்கனா ரணாவத் ஒரு குறும்பான கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கடந்த மாதம் வெளியான திரைப்படம் 'தலைவி'. ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்ஜிஆராக அரவிந்த் சாமியும் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான 'தலைவி'யை ஏ.எல் விஜய் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் திரையிடப்பட்ட 'தலைவி' பெருமளவு அரசியலைத் தவிர்த்து அவரின் பயணத்தை சொல்லும் விதமாகவே படமாக்கப்பட்டிருந்தது. கலவையான விமர்சனங்களை பெற்றது.
சில தினங்கள் முன் இந்தப் படம் ஓடிடி வெளியீடு கண்டது. இதில் இந்தி பதிப்பு நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த கங்கனா, கூடவே பாகிஸ்தானின் நெட்ஃப்ளிக்ஸ் டாப் 10 பட்டியலையும் பகிர்ந்தார். அந்தப் பட்டியலில், 'தலைவி' படமும் இடம்பெற்றிருந்தது. இதனை குறிப்பிட்டு, 'ஒரு ஜாலியான குறிப்பு... துரோகிகள் நம் நாட்டில் மட்டும் இல்லை' என்று குறிப்பிட்டு இருக்கிறார். 'தலைவி' படத்துக்கு ஓடிடியில் கிடைத்து வரும் வரவேற்பை சகித்துக்கொள்ளாதவர்களை ஜாலியாக கடுப்பேற்றும் நோக்குடன் அவர் இப்படி ஒரு கருத்தைப் பதிந்துள்ளார்.
நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவில் டாப் 10-ல் தலைவி: இதனிடையே, செப்டம்பர் 25 அன்று நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவில் 'தலைவி' வெளியிடப்பட்டது. வெளியானதில் இருந்து இன்று வரை ட்ரெண்டிங்கில் டாப் 10-ல் இருந்து வருகிறது. 'ஸ்க்விட் கேம்', 'தி கில்டி', 'கோட்டா பேக்ட்ரி 2', 'மணி ஹெயிஸ்ட்' 5வது சீசன், போன்றவை டாப் 10-ல் இருந்து வருகின்றன. இந்தப் படங்களுடன் 'தலைவி' கடந்த இரண்டு வாரமாக பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. தற்போது டாப் 10 பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது.
முன்னதாக, நெட்ஃப்ளிக்ஸில் டிஜிட்டல் வெளியீடாக வெளியாக இருந்ததால் வட இந்தியா முழுவதும் மல்டிப்ளெக்ஸ் அரங்குகள் தலைவியை திரையிட மறுத்தது பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. பின்னர் சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு தியேட்டர் வெளியீடு கண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
| வாசிக்க > "ஃபார்முலாக்காரர்கள் இங்கும் வருகிறார்களே!" - ஓடிடி எதிர்காலம் கருதி அஞ்சும் நவாஸுதீன் |
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2YJUucI
0 Comments