வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய நடிகர் தனுஷ் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.
இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2019-ல் தீர்ப்பளித்த்து.
இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடைகோரி நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 30 லட்சத்து 33 ஆயிரத்தை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால், விசாரணையை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். அதேபோல பில்ரோத் மருத்துவமனை தொடர்ந்த வழக்கையும் நாளை தள்ளிவைத்துள்ளார். இந்த இரு வழக்குகளையும் நாளை உத்தரவுக்காக பட்டியலிடும்படி, நீதிபதி அறிவுறித்தி உள்ளார்.
ஏற்கெனவே நுழைவு வரி வசூலிக்க தடை கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டு, அதில் மேல்முறையீடு சென்று தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் தனுஷ் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3lrhtCX
0 Comments