
தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் யூ-டியூப்பர் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திரைப்பட நகைச்சுவை நடிகர் 'காதல்' சுகுமார் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
காதல், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் 'காதல்' சுகுமார். இவர், இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இதையடுத்து 'காதல்' சுகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்... 'கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் மூலமாக பள்ளி மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். பள்ளி மாணவர்களை நல்வழி பாதையில் கொண்டு செல்லும் படியாக சமூக வலைதளங்களில் இலக்கியா, ஜிபி முத்து, ரவுடி பேபி சூர்யா உட்பட சிலர் ஆபாசங்கள் நிறைந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.
இதனை தடுத்து நிறுத்த வேண்டி சமீபத்தில் எனது நண்பரும் சர்வதேச மனித உரிமைகள் கவுன்சிலின் மாநில பொதுச் செயலாளருமான ஏழுமலை, டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக நானும் ஊடகங்கள் வாயிலாக பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்தேன்.

ஊடகங்களில் தான் கருத்து தெரிவித்தது தொடர்பாக அவர்களின் தூண்டுதலின் பேரில் நெல்லை சங்கர், சேலம் மணி மற்றும் ஜிபி.முத்து ஆகியோர் தொடர்ந்து சமூக வலைதளம் வாயிலாக எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். கொலை மிரட்டல் விடுத்து வரக்கூடிய நபர்கள் மீது உடனடியாக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபாசங்கள் நிறைந்த இவர்களின் சமூக வலைதள பக்கத்தை தடை செய்ய வேண்டும்' என்று நடிகர் 'காதல்' சுகுமார் கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3fBVm91



0 Comments