நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்தில் வில்லனாக நடித்துள்ள அஜ்மல் 'நெற்றிக்கண்' பட அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘அவள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மிலிந்த் ராவ், நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா, பார்வை குறைபாடு இருந்தாலும் தனது அறிவாற்றலால் கொடூரமான சைக்கோ கில்லரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதைக்களம். வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ‘நெற்றிக்கண்’ வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தில் கொடூர சைக்கோ வில்லனாக நடிப்பில் மிரட்டிய அஜ்மல் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.
" 'கோ' படத்திற்குப் பிறகு நிறைய நல்ல வாய்ப்புகள் வந்தன. ஆனால், இடையில் எனது மருத்துவ மேற்படிப்பிற்காக லண்டன் சென்றதால் எந்த வாய்ப்புகளையும் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்போது மீண்டும் நடிப்புக்கு திரும்ப, 'நெற்றிக்கண்' மிகச்சிறந்த வாய்பாக அமைந்தது. இரண்டு கதாப்பாத்திரங்களின் ஆடு புலி ஆட்டம்தான் மொத்தப்படமுமே என்பதால் எனது பாத்திரம் இதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
சமீபத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற ஆங்கில 'ஜோக்கர்' பட பாத்திரத்தை ஒத்ததுதான் இப்படத்தில் என்னுடைய பாத்திரம். சைக்கோ வில்லனாக இருந்தாலும் தனித்து தெரியும் பாத்திரமாக இருக்கும். ரசிகர்கள் கண்டிப்பாக எனது கதாப்பாத்திரத்தை ரசிப்பார்கள். நயன்தாரா, கேமராமேன் ராஜ சேகர், தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன், இயக்குநர் மிலிந்த் ராவ் என இந்த கூட்டணியே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கூட்டணி. இந்தப்படம் இதுவரையிலான தமிழ் த்ரில்லர்களை, மிஞ்சும் படைப்பாக இருக்கும்" என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3fyLpcH
0 Comments