Ad Code

Responsive Advertisement

'மலையாள படங்களை வெளியிட பிரத்யேக ஓடிடி தளம்' - கேரள அரசு முன்னெடுக்கும் புதிய முயற்சி!

கொரோனா பேரிடர் காரணமாக தடைபட்டுள்ள படங்களை வெளியிடுவதற்கு கேரள அரசு சொந்த ஓடிடி தளத்தை உருவாக்க வேண்டும் என்று மலையாள திரைநட்சத்திரங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது அம்மாநில அரசு அதனை பரிசீலிக்க தொடங்கியுள்ளது.

கொரோனா மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியிருப்பது போல், சினிமாவின் வாழ்க்கை முறையையும் மாற்றியிருக்கிறது. தியேட்டர்கள் முடங்கிய நிலையில் ஓடிடி தளங்கள் மூலம் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், கேரள அரசு மலையாள படங்களை வெளியிடுவதற்காக பிரத்யேக ஓடிடி தளத்தை வெளியிட இருப்பதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேரள சினிமா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் சஜி செரியன் இது தொடர்பாக பேசுகையில், "மலையாள திரைப்படங்களை வெளியிடுவதற்காக பிரத்யேக ஒரு புதிய ஓடிடி தளத்தை அரசு வெளியிடும். பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களுக்கு இந்த வசதி தேவையில்லை என்றாலும், சாதாரண படங்களுக்கு தேவைப்படும் என்பதால், புதிய ஓடிடி தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

மலையாள திரையுலகம் நவீனமயமாக்கப்படும் விதமாக பெரிய அளவில் மாற்றங்களைச் செய்ய முயற்சித்து வருகிறோம். இதனொரு பகுதியாக ஓடிடி தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், அரசு நடத்தும் சித்ராஞ்சலி ஸ்டூடியோ தென்னிந்திய படங்களின் படப்பிடிப்புக்கான இடமாக மாற்றப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல், அதனால் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காரணமாக 17 மாதங்களாக மலையாள திரையுலகம் முன்னெப்போதும் சந்திக்காத சிக்கலை சந்தித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக, இந்த 17 மாத காலகட்டத்தில் மலையாள திரையுலகம் ரூ.900 கோடிக்கும் அதிகமாக இழப்பை சந்தித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த இழப்பு மலையாள திரையுலகம் இதுவரை சந்திக்காத ஒரு நெருக்கடியாக பார்க்கப்படுகிறது. பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பெரிய படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை கடந்த 17 மாதங்களுக்கும் மேலாக முடங்கி கிடக்கின்றன. இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன.

கேரள மாநிலத்தில் 720 திரையரங்குகள் உள்ளன. முதல் அலையின்போது, மாநில அரசு தியேட்டர்களை மூடிவிட்டு, 2020 மார்ச் முதல் 2021 ஜனவரி வரை திரைப்பட படப்பிடிப்புகளை தடை செய்தது. கொரோனா முதல் தொற்று குறைந்த பிறகு சில மாதங்கள் இந்த திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், மே மாதத்தில் கோவிட் இரண்டாவது அலை ஏற்பட்ட பின்னர் இவை மீண்டும் மூடப்பட்டன. இதனால் திரை அரங்கு உரிமையாளர்களும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3h6IitA

Post a Comment

0 Comments