விஜய், தனுஷ் என இரு தமிழ் நடிகர்களும் தெலுங்கு இயக்குநர்களின் நேரடி படங்களில் இணைத்துள்ளது தமிழ் - தெலுங்கு சினிமா வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. சேகர் கம்முலாவுடன் தனுஷ் இணைந்துள்ள படம் 'பான் இந்தியா' படமாக உருவாக இருக்கிறது. இயக்குநர் வம்ஷி பைடிபள்ளியுடன் விஜய்யும் இணைந்துள்ளார். இந்த திடீர் இணைப்பின் பின்னணி என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் சில அறிவிப்புக்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்தன. அவை, தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நட்சத்திரங்கள் தெலுங்கு இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றப்போவதாக வெளியான அறிவிப்பு. 'தோழா' பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி உடன் விஜய், மற்றொரு பிரபல தெலுங்கு இயக்குநரான சேகர் கம்முலாவுடன் தனுஷ் கைகோத்துள்ளனர். தமிழ், தெலுங்கு சினிமா இடையே சில வித்தியாசங்கள், ரசனைகள் இருந்தாலும், இரு மொழி திரைப்படங்களும் இரு மாநில ரசிகர்களால் கொண்டாடப்பட்டே வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தெலுங்கில் ஹிட் அடித்த பல படங்களை தமிழ் நடிகர்கள் ரீமேக் செய்து ஹிட் அடித்துள்ளனர்.
என்றாலும், தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திரங்கள் பெரும்பாலும் இதுவரை நேரடி தெலுங்கு படத்திலோ அல்லது தெலுங்கு இயக்குநர்கள் உடனோ அதிகம் வேலை பார்த்ததில்லை. கடந்த காலங்களில் தெலுங்கு பெரிய இயக்குநர்கள் பலரும் தமிழ் நட்சத்திர ஹீரோக்களை அணுகி இருக்கின்றனர். தெலுங்கு நட்சத்திர இயக்குநர்கள் நேரடியாக கேட்டும் இதுவரை தமிழ் சினிமாவின் எந்த பெரிய ஹீரோவும், அவர்களுடன் இணைய பெரிதாக ஆர்வம் காட்டியதில்லை. ஒரு சில முறை விதிவிலக்காக பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் நடந்திருந்தாலும், பெரிதாக எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
பூரி ஜெகன்நாத், சுகுமார், விநாயக் போன்ற தெலுங்கு சினிமாவின் நட்சத்திர இயக்குநர்களால் கூட, இதனை உடைக்க முடியவில்லை. பூரி ஜெகன்நாத் ஒருமுறை ஒரு படத்திற்காக நடிகர் சூர்யாவை அணுகியதாகவும், முதலில் ஆர்வம் காட்டிய சூர்யா அதன்பின் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. என்றாலும், இதனை உடைத்து முதன்முதலில் தெலுங்கு இயக்குநர் உடன் கைகோத்தார் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி. வம்ஷி பைடிபள்ளியுடன் அவர் இணைந்த படம்தான் 'தோழா'. ஆனால், இதனை ஒரு நேரடி படமாக கருதமுடியவில்லை. ஏனென்றால், இதே படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனாவும் நடித்திருந்தார். இதேபோல் விஜய் சேதுபதி அங்கு நேரடி படங்களில் நடித்தாலும் ஹீரோவாக நடிக்கவில்லை.
இதனால், தெலுங்கு நட்சத்திர இயக்குநர்களை தமிழ் ஹீரோக்கள் குறைத்து மதிப்பிடுவதாக வெளிப்படையாகவே பல பெரிய தெலுங்கு இயக்குநர்கள் பேசியிருக்கின்றனர். அதேசமயம் மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி தமிழின் முன்னணி இயக்குநர்கள் உடன் பணியாற்ற தெலுங்கு ஹீரோக்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள். அதற்கு உதாரணம்தான் அடுத்தடுத்து ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி போன்ற இயக்குநர்கள் உடன் தெலுங்கு ஹீரோக்கள் அல்லு அர்ஜுன், ராம் சரண், ராம் போத்தினி போன்றோர் இணைந்துள்ளது.
இப்படியான நிலையில்தான் சேகர் கம்முலாவுடன் தனுஷும், இயக்குநர் வம்ஷி பைடிபள்ளியுடன் விஜய்யும் இணைந்துள்ளனர். இவர்களின் திடீர் தெலுங்கு நேசம் இருமாநில சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. இருவரும் இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இப்போது தெலுங்கு சினிமா பக்கம் திரும்ப, தெலுங்கில் இருந்து சமீபத்தில் வெளியான படங்களும் ஒரு காரணம். டோலிவுட் சினிமாவின் திறனை ஒட்டுமொத்த உலகத்திற்கும் எடுத்துகாட்டியது எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' படம். இந்தப் படத்தின் வெற்றி இதுவரை இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என வர்ணிக்கப்பட்டு வந்த இயக்குநர் ஷங்கர் போன்றவர்களை விட ராஜமவுலியின் திடீர் மவுஸை ஏற்படுத்தியுள்ளது. 'பாகுபலி' படம் ஒட்டுமொத்தமாக தெலுங்கு இயக்குநர்களின் பிம்பத்தை மாற்றியுள்ளது.
இதற்கடுத்து பிரசாந்த் நீலின் 'கேஜிஎஃப்' உள்ளிட்ட சில படங்கள் தெற்கை தாண்டி வடக்கே பாலிவுட் சினிமா வட்டாரத்தையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. விஜய் தேவரகொண்டாவின் 'அர்ஜுன் ரெட்டி' இந்தியில் 'கபீர் சிங்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்போது நானியின் `ஜெர்சி' இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய சினிமா துறையான பாலிவுட் இப்போது தெலுங்கு திரையுலகப் பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளது. தற்போது வர்த்தக ரீதியாக பாலிவுட்டுடன் நேரடியாக போட்டியிடும் வகையில் வளர்ந்துள்ளது தெலுங்கு சினிமா துறை. இதனால் தெலுங்கு திரையுலகினர் இயல்பாகவே வெளிச்சத்திற்கு வருகிறார்கள். கடந்த காலத்திலும் பாலிவுட் பல தெலுங்கு ரீமேக்குகளை செய்தது. ஆனால், இப்போது இருக்கும் மதிப்பே வேறு.
இதே மதிப்புதான் தற்போது தமிழ் ஹீரோக்களிடம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனடிப்படையில் தமிழ் நட்சத்திரங்கள் தெலுங்கில் தங்கள் தளத்தை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. ஏற்கெனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி மற்றும் விஷால் போன்றோர்களுக்கு தெலுங்கு சினிமாவில் ஓரளவு மார்க்கெட் இருக்கிறது. அதேநேரம் அஜித், விஜய், தனுஷ் போன்ற மற்ற நட்சத்திரங்களும் கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு மார்க்கெட்டை நோக்கி குறிவைத்து படத்தை அந்தப் பகுதியில் வெளியிட்டு வருகின்றனர். இதில் ஓரளவுக்கு நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது. இதையடுத்துதான் தங்களது தெலுங்கு சினிமா மார்க்கெட்டை விரிவுபடுத்தும் வகையில் பாலிவுட்டுடன் நேரடியாக போட்டியிடும் தெலுங்கில் கவனம் செலுத்தும் விதமாக அம்மொழி இயக்குநர்களுடன் இணைந்து வருகின்றனர்.
- மலையரசு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3AkuCm8
0 Comments